வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 11 April 2017

பெயரில்லா மரங்கள்
சில வரலாற்றுச் சம்பவங்கள் செவிவழிச் செய்திகளாகவே நிலவி, காலச்சுழற்சியில் சிக்கிச் சிதைந்து விடுகின்றன. "பெயரில்லா மரங்கள்" என்று அந்தக் காலத்தில் நம் மக்களால் அழைக்கப்பட்ட பெரிய மரங்களின் சிறுவிவரங்கள் கூட இன்று நமக்குக் கிடைக்காத அளவிற்கு, நூற்றாண்டுகளின் ஓட்டப்பாதையின் ஓரச்சரிவுகள் மூடி மறைத்துவிட்டன.

தூத்துக்குடியில் நமது பரிசுத்த பனிமய அன்னையின் ஆலய வளாகத்தை அடுத்து, அதன் வடமேற்கு மூலையில் கிரக்கோப்பு தெருவின் பக்கமிருக்கும் திறந்த வாசல் (Gate) அருகில் ஒன்றும், அன்றைய சன்பவுல் ஆலய முகப்பின் எதிரில் இருந்த குருசடி முன்புறம், கடற்கரைப் பக்கத்தில் (இன்று மச்சாடோ கட்டிடம் இருக்கும் இடம்?) ஒன்றும், பனிமய அன்னையின் ஆலயத்திற்குத் தெற்கே தொலைவிலிருந்த ஒரு குருசடிக்கும் பின்புறம், தருவைக் காட்டிற்கும் குருசடிக்கும் இடையில் இருந்த ஒரு திட்டில் (இன்று மனோரா ஹவுஸ் இருக்கும் இடம்?) ஒன்றுமாக - ஆகா மூன்று மிகப்பெரிய மரங்கள் இருந்ததாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு.

அந்த மூன்று மரங்களின் அடிப்பாகத்தின் (Trunk) சுற்றளவு, ஆறு பேர் சுற்றி நின்று கைகளை அகல விரித்துப் பிடித்தாலும் சுற்றி வளைக்க முடியாத பருமன் கொண்டதாய் இருந்தன வென்று, தங்கள் முன்னோர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதாக சில முதியவர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அவற்றின் கிளைகள், பேய்போல் தலைவிரித்துப் பரந்து வியாபித்து, நிழல் தருவனவாக இருந்தனவாம்.

பண்டைய நாள்களில், அரேபிய வணிகர்கள் ஓய்வெடுக்கும் நிழற்பந்தல்களாகப் பயன்தரும் வகையில், அவர்களால் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டு நடப்பட்டதாகக் கூறுவார். அந்த மரங்களின் பெயர் என்னவென்று அறிந்திராத அன்றைய பரத குல கிறிஸ்தவர்கள் அவற்றைப் பெயரில்லா மரங்கள் என்று அழைத்தனர். 

அதன் இலைகளோடு சுக்கைச் சேர்த்து அரைத்துப் பூசினால், மூட்டு வலி குணமடையும் என்றும், அதன் இலைகளை ஒரு துணியின் மேல்பரப்பி, கடற்கரை மணலை வறுத்துச் சூடாக்கி அதன் மேல் கொட்டிக் கிழிகட்டி ஒத்தடம் கொடுத்தால், வாதரோகம் குணமடையும் என்றும் அதன் காய்ந்த இலைகளைப் பொடியாக்கி வெட்டுக் காயங்கள் மேல் அப்பினால், இரத்தக் கசிவு நிற்கும் என்றும் கர்வாலோ அடப்பனார் என்ற வைத்தியர் கூறியதாகச் சொல்வார்கள்.

மேற்கூறிய செவிவழிச் செய்திகளை மெய்பிக்கும் விதத்தில் வண. கால்டுவெல் பாதிரியார் அவர்கள் தாமெழுதிய திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடி (Gazetteer of Thinneveli District) என்ற நூலில் தூத்துக்குடியைப் பற்றிக் கூறும் போது, இந்த பெரிய மரங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். மக்கள் அறியாமையால் அவற்றைப் பெயரில்லா மரங்கள் என அழைத்தாலும், அதன் தாவரவியல் பெயர் (Botanical Name) Adansonia Digitata என்றும், ஆப்பிரிக்க மொழியில் போபாமரம் (Boabab Tree) என்றும், அதன் பொருள் குரங்கின் ரொட்டி (Monkey’s Bread) என்றும் குறிப்பிடுகின்றார். 1834 – ல் பிறந்த மனப்பாட்டுப் புலவர் அட்டாவதானி அன்னப்பு சிங்கராய பரதன் என்ற லெயோன் என்பாரது சொற்பொழிவுகளின் தொகுப்பு நூலிலும் இம்மரங்கள் பற்றியக் குறிப்புகள் காணக்கிடைகின்றன.

எனது தேடல்களின் மத்தியில் தற்செயலாக நான் சமீபத்தில் கண்ட ஒரு நூலில், பெயரில்லா மரங்கள் என்று நம் மக்களால் அழைக்கப்பட்ட அந்த மரங்களைப் பற்றிய மேலும் பல பொது/ மருத்துவ விவரங்களை கீழே தருகிறேன். 

அடன்சோனியா டிஜிடேட்டா’ என்ற பெரிய மரம் தாவரவியல் வகைப்படுத்துதலின்படி (Taxonomy) மால்வேசி (Malvaceae) இனத்தைச் சேர்ந்தது. நாம் சாதாரணமாகக் காணும் பூவரசு (Thespesia Populnea), செம்பருத்திப்பூ (Hibiscus Rosa Sinensis) போன்ற தாவரங்களும் இதே மால்வேசி இனத்தைச் சேர்ந்தவைதான். இந்த பெயரில்லா மரத்தின் உண்மையான தமிழ் பெயர் பெப்பராப்புளி (Pepperappuli) என்றும் பாப்பரப்புளி (Papparapuli) என்றும் ஆணைப் புளிய மரம் என்றும் அழைக்கப்படுவதாகும். இதன் சிங்கள மொழிப் பெயர் கெளதிம்புள் (Kathimbul) என்பதாகும். கோவா, மகராஷ்டிரா, குஜராத், இலங்கை என அரேபியர் வந்து சென்ற கடலோரப் பகுதிகளில் இம்மரங்கள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டிருகின்றது.

ஆண்டுதோறும் இலை உதிர்க்கும் (Deciduous) தன்மை கொண்ட இந்த மரம், 60 முதல் 70 அடி உயரம் வரை வளரும். அடிமரம் மிகப் பெருத்துக் காணப்படுவதால், தூரத்திலிருந்து காண்பதற்கு குட்டையான (Stumpy) தோற்றமளிக்கும். பரந்து விரிந்த கிளைகள் முழுவதும் இலைகளோடு இருக்கும்போது காண்பதற்கு மிக அழகாக இருக்கும். இதன் பழத்தின் சதைப்பற்று (Pulp), மரப்பட்டை (Berk), இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.

இதன் பழம்: புளிப்பு (acidic) உடலுக்கு குளிர்ச்சியூட்டுதல் (Refrigerant), வயிற்றுக்கு இதமளித்தல் (Stomachic) சிறுநீர் பெருக்கும் (Diuritic) தன்மை கொண்டது. 

விதைகளும் சதை பற்றும்: (Seeds & Pulp) இரத்தப் போக்கைக் குறைக்கும் (astringent) வாய்ப்புண், எரிவு, வீக்கம் இவற்றைக் குறைக்கும் (demulcent), கடலோடிகளுக்கு வரும் Scurvy என்ற நோய் தடுப்பு சக்தியுடையது (antiscorbutic). சதைப்பற்று நல்ல மலமிளக்கி (aperient), இதன் பட்டை பெண்களின் மாதக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து (antiperiodic). இதன் பழத்தோடு அத்திபழம் சேர்த்து செய்த சர்பத், புளித்த ஏப்பத்திற்கும் (acid eructations) பித்த அஜிரணத்திற்கும் (Niliousdyspepsia) நல்லது.

இதன் பட்டையிலிருந்து உரிக்கப்படும் நார் மிகுந்த வலிமை பொருந்தியது. துக்னி மொழியில் (Dukhini) இந்த மரத்திற்கு (Hatti Khatiyan) ஹத்தி கட்டியன் என்று பெயர். அதன் பொருள் யானை நார் என்பது. (Hatti Khatiyan means Elephant flax in allusion to the great strength of the fibre prepared from its bark - Dr. K.M. Nadkarni.)

முனைவர் நட்கர்னியின் நூலை வாசித்த பிறகுதான், 1982 - ல் தேர் மலரில் சேர்ப்பதற்காக, நண்பர்கள் மூலம் சேகரித்து பொருள் புரியாமல் ஒதுக்கித் தள்ளிய ஒரு அம்பா பாட்டின் கீழ்க்கண்ட வரிகளின் பொருள் தெளிவாகின்றது: 

 " யான புலி நாலேடுத்து ஏலேலம்மா ஏலேலோ 
மூனுபுலி தாம்புவச்சி  ஏலேலம்மா ஏலேலோ 
ரண்டுபன நாமுடிக்க  ஏலேலம்மா ஏலேலோ 
ஒன்னு எதாண தந்தாயம்மா  ஏலேலம்மா ஏலேலோ "


கல்வியறிவில்லாத முந்திய தலைமுறைகளின் கடலோடிகள், வழிவழிக் கேள்வி அறிவால் கிடைத்த பாடல்களைப் பாடும் போது, காலப்போக்கில் சொற்கள் சிதைவுண்டு, திரிபோ, மருவலோ ஏற்படுவது இயல்புதான். கயறு என்ற பொருள் தரும் தாம்பு என்ற சொல்லத் திறவுகோலாக எடுத்துக் கொண்டால் இந்த அம்பா பாட்டின் பொருள் இவ்வாறு இருக்கலாமல்லவா?

ஆனைப்புளி நார் எடுத்து - மூன்று பிரி தாம்பு (கயறு) வைத்து - இரண்டு புணை நான் முடிக்க - ஒன்று துணை தந்தாயம்மா என்று தேவ அன்னைக்கு நன்றி கூறும் அம்பாப் பாடலாக அமைந்திருக்கலாம். 'புணை' என்றால் கட்டுமரம் என்று பொருள்.

இவ்வாறு நம் அன்னையின் ஆலயத்தைச் சுற்றி வாழ்ந்த அக்காலத்து மக்களுக்கு, கற்பகத் மரங்களாக ஓங்கி நின்றவை இன்று சுவடு தெரியாமல் அழிந்து போய் விட்டன.

- Indian Materia Medica - (Vol I Page 38/No 52 by Dr. K.M. Nadkarni. F.S.C., L.A.,M.C.S., M.Br.Ph.C. (Lond) 1950.


- செல்வராஜ் மிராண்டா 




தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் 
பப்பரபுளி/ பொந்தன்புளி/பெருக்க மரங்கள் 





















Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com