நலம் தரும் கடல் புற்கள்
கடல்சார் மருத்துவத்துறையில் (Marine Pharmacology) கடற்புற்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், தாதுப்பொருள் மாத்திரைகள், புற்றுநோய் தடுப்பிற்கான மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தியாவில் பாரம்பரிய இன மீனவர்கள் தலைமுறை தலைமுறையாக பல ஆயிரக்கணக்கான வருடங்களாக தங்களது முன்னோர்களிடமிருந்து செவிவழிச் செய்தியாக கடல்புல்லின் மருத்துவக் குணங்களை அறிந்து அதனைப் பயன்படுத்தி வருகிறார்கள்.


கடற்புற்கள் இந்தியாவின் 7517 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் மீன் இனப்பெருக்கத்துக்கும், சில அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் உணவாகவும், கடல்நீரில் பிராண வாயுவை அதிகரித்து மீன்கள் மற்றும் கடல் உயிரினங்கள் செத்து மடியாது காக்கவும் காரணமாக அமைகின்றன.
- கடல்நீரில் கலக்கும் கரியமில வாயுவை (Carbon –di – oxide) உறிஞ்சுகிறது.
- மிகுதியான பிராண வாயுவை (Oxygen) வெளியிட்டு கடற்புற சுற்றுசூழலுக்கும் கடல் வாழ் உயிரினங்கள் வாழவும் துணை செய்கின்றன.
ஒரிசா மாநிலத்தில் உள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய உப்பு நீர் ஏரியான சில்கா ஏரியில் கடற்புற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் மன்னார் வளைகுடாப் பகுதியில் அதிகமான கடற்புற்கள் காணப்படுகிறது. மன்னார் வளைகுடாப்பகுதியில் பன்னிரெண்டு வகையான கடற்புற்கள் காணப்படுகின்றன. பவளப்பாறைகள் மிகுந்துள்ள இடங்கள், சதுப்பு நிலக் காடுகள் நிறைந்துள்ள இடங்களில் கடற்புற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
தமிழகத்தில் காணப்படும் சில கடற்புற்களின் வகைகளையும், அவைகளின் பயன்பாடுகளும் கீழே தரப்பட்டுள்ளன.
1. அலைவாரி புற்கள்
2. கடல் கோரைக் புற்கள்
3. கடல் கரும்பு புற்கள்
4. வெள்ளை புற்கள்
5. வெள்ளை தாழை புற்கள்
இவைகள் கால்நடைகளுக்கு உணவாகவும், செடிகளுக்கு உரமாகவும் பயன்படுகின்றன. காயங்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றன.
6. கடல் தாழை புற்கள்
7. ஓலைப் புற்கள்
8. திட்டு வகை புற்கள்
இவை கடல் நோயை (Sea Sickness) குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. இவை கடல் நீரோடு சேர்ந்து பருகும் பொழுது இதய நோய்களைக் குணப்படுத்தவும், குறைந்த இரத்த அழுத்த நோயை (Low Blood Pressure) சீர் செய்யவும் பயன்படுகிறது.
9. கடல் அருகம்புல்
10. கொத்து கோரைப் புற்கள்
11. பஞ்சு புல்
12. கட்டைக் கோரைப் புற்கள்
நமது நாட்டில் கடல் மருந்துகள் பற்றிய படிப்பு கொச்சியிலுள்ள மீன்வள பல்கலைக் கழகத்தில் “KUFOS” (Kerala University of Fisheries and Ocean Studies) இரண்டாண்டு முதுகலைப் பட்டப் படிப்பாக M.Sc. (Marine Microbiology & Marine Drugs) கடலியல் நுண் உயிரியல் மற்றும் மருந்தாகப் படிப்பகப் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த அரிய வகை மருத்துவக் குணங்கள் நிறைந்த கடற்புற்கள் அறுவடையை அரசு முறைப்படுத்தினால், கடல்வளம் பெருகுவதோடு, குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் சாதாரண மக்களுக்கும் கிடைக்கும்.
- ஜேம்ஸ் பர்னாண்டோ