வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 6 January 2018

விடிந்தகரை 2.04

பரதவ குலத்து மாமுனி சித்தர் சாமிபிள்ளை

சாரட் வண்டியில் வந்து கொண்டிருந்த பரதவவர்மனின் எண்ணங்கள் சாமிபிள்ளையை பற்றி தனது குருகுல நண்பன் உவரி சந்தானபட்டங்கட்டி மகன் முத்தையாவை பற்றி மனதுக்குள் அசைபோட்டது.

ஏற்கனவே சைவ சித்தாந்த வழி மரபில் வாழ்ந்து வந்த உவரி பரதவர்கள் நெடுங்காலமாக சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு வந்தனர் கோவில் சம்பந்தமாக பக்கத்து யாதவருடன் ஒரு கலவரம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதன்பின்னர் வந்த காலத்திலே கடல் உரிமைக்காக நாயக்க, மூரினத்தை எதிர்த்து பரதவ குலமே போரிட்டது மதம் மாறியது இந்த நிகழ்வுகளால் கோவில் உரிமை மறுப்பு பூசை புனஸ்கார மறுப்பு கடும் கடல் வரி விதிப்பு என நாயக்க அரசு கடலோரத்து பரதவர் மீது தொடுத்த ஆன்மீக பலாத்காரத்தால் விரக்தியில் இருந்த உவரி பரதவர்களை தேற்றுவதாகவும் பாதுகாப்பதாகவும் சொல்லி மீண்டும் அவர்கள் பழைய மத சடங்குகளில் கலந்து கொள்வதை தடுக்கும் விதமாக அங்கிருந்து இரண்டு மூன்று காததூரத்திற்கு மேற்க்காக சவேரியாரால் உவரி மக்கள் குடியமர்த்தப்பட்டார்கள்.  

ஆனாலும் தங்களது பழைய தெய்வத்தை மறக்காது ரகசியமாய் வழிபட்டவர்கள் அதிலும் இருந்தார்கள். இதற்கு மாறாக காவி உடையும் கந்தனின் வேலுமாக சடைமுடியோடு ஓம் முருகா! ஓம் முருகா!! என உச்சரித்தபடி பரதவர்களின் நடுவே நடமாடிக் கொண்டிருந்தவர் தான் பரதவகுலத்து மாமுனி சாமிபிள்ளை. ஆனால் அவரது பெயர் கடம்பன் என யாரோ சொன்னதாக பரதவ வர்மனுக்கு நினைவு.

பரதவகுலம் மதம் மாறும் முன்பு வரை அவரை சாமியாக பரதவ குலமே கொண்டாடியதால் சாமிபிள்ளை ஆகிவிட்டார். அதை காட்டிலும் அவரை சித்தராகவே பரதவ குலமே வரிந்து கொண்டது. சாமிபிள்ளையை விட 10 வயது இளைய தம்பி 82 வயதில் இறந்து போனார். அவர் மகனுக்கே இப்போது 50 தாண்டிவிட்டது அப்படியானால் சாமிபிள்ளையின் வயது எவ்வளவு? யாருக்குமே தெரியாது.

எண்பெரும் யோகப் பயிற்சியால் எண்பெரும் சித்திகளை பெற்றவர். இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல், தாவரயியல், சோதிடம், கணிதம் முதலியதுறைகளில் கைதேர்ந்து விளங்கிய அவரை சித்தராக பரதகுலமே கொண்டாடியதில் மிகையேதுமில்லை! வியப்பேதுமில்லை!!

பொதுவாக சித்தர்கள் மன ஓட்டமானது உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான் உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை தானும் அடைவார் அந்நிலை தன்னை என்பது தான் சித்தர் கொள்கை மாறாக பரதவகுலத்து மாமுனி சாமிபிள்ளை முருகனை ஒம்கார ஸ்ருதியிலே தியானித்து பூஜித்து ஆர்பரித்து வந்தார்.

உவரி கடல்புரத்தை தாண்டி வடக்கே கடம்பு மரக்காட்டிலே தனி குடில் அவருடையது. 100 வயதை தாண்டிய பிரம்மச்சரிய ஆண்டியின் ஆஸ்ரமத்தை நிர்வகித்து வந்தவர்கள் அவரது சீடர்களே. உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, அவரது ஆஸ்ரமத்திலே வளர்க்கும் மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவார்.  இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் பரதவ மாமுனி சாமிபிள்ளையின் சித்த வைத்தியம்.

தனது குருகுல வாழ்கையில் சாமிபிள்ளை தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் சீடர்கள் தங்களோடு இருந்ததாக நினைவில்லை அவ்வப்போது காணாமல் போய்விடுவார். அவரது தனிகுடிலில் வாசல் எப்போதும் மூடியே இருக்கும். அவர் உள்ளே நடந்து செல்வதை மட்டுமே பாக்க முடியும், வெளியேறுவதை இதுவரை கண்டதில்லை. அவர் இல்லாத சமயம் ஆஸ்ரமத்தில் சுற்றி திரியும் பூனையை கண்டால் சீடர்கள் அனைவருக்கும் பயம். காரணம் கூடு விட்டு கூடு பாயும் பிராகமிய சித்தில் வல்லவராய் இருந்தார்.

ஆனால் யாருக்காவது உயிர் போகும் தருவாய் என தூக்கி கொண்டு ஓடி வரும்போது யாரும் எதிர்பாரா விதத்தில் தனது குடில் கதவை திறந்து வெளியே வருவார் என்பதுதான் மிகப் பெரும் ஆச்சரியம். எதை உண்பார் ?எப்போது உண்பார்? என்பதை யாரும் கண்டதில்லை.

எல்லோரும் வருகின்ற போர்த்துகீசிய அடியார்களைப் பின்பற்றி நடந்த போதும் அவர் அங்கேயிருந்து முருகனை சேவித்துக் கொண்டிருந்தார். இது, வரும் மத போதகர்களுக்கு எரிச்சலாய் இருந்தாலும், அவர்கள் வழி குறுக்கிடாது பார்த்து கொண்டார். ஆனாலும் அவர் ஒரு பொழுதும் அவர் கும்பிட்ட முருக கடவுளை விட்டு கொடுக்கவில்லை. அந்த முருக பித்தர் தான் சவேரியாரோடு திருச்செந்தூரில் மந்திர தந்திர விளையாட்டில் ஈடுபட்டவர். இவ்வாறு சாமிபிள்ளையின் அருமை பெருமைகளை நினைத்து, நினைத்து திகைத்தபடி பரதவ ர்மன் அரசரது சாரட்டிலே முட்டம் திரும்பிக் கொண்டிருந்தார்.

ஜனசத்தமில்லாத அந்த இருண்ட பனைமர காட்டில் ஒற்றை ஆல் மரத்தின் கீழ் பனை ஓலை சருகு கொளுத்திய வெளிச்சத்தில் கருவாட்டு வியாபாரி விளைக்காரர் ஒச்சியாபிள்ளையும் மரக்காரன் கரிசட்டியும் பார்வைகாரன் மாடன் கொண்டுவந்த ஒரு பானை மொந்தகள்ளை பனையோலை பட்டை கொண்டு மொண்டு மொண்டு  குடித்தபடி பிதற்றிக் கொண்டிருந்தனர்.

ஏலே கரிசட்டி! மாப்பிள்ளை என்னத்தல சொத்து வச்சிருக்க.... பாத்தியா முட்டம் போறவரைக்கும் ஒச்சையா விளைதாம்லே...னு ஒச்சியம் வைக்க பதிலுக்கு மற்றவர் ஓய் நா கரிசட்டி இல்ல பர்ணாந்து அந்தோணி பர்ணாந்து நினைச்சிகிடும்.... ஆமா இவரு நாலா, மூணா முறிஞ்சு கடலை கடைஞ்சி சம்பாதிச்சாரு..... நெத்தலி பாடு காலத்திலயும், சாவாளை பாடு காலத்திலயும் எங்க வைத்தில அடிச்சி வாங்கின விளைதானுவே இது......

அடப்பாவி பய கரிசட்டி! என் விளை கள்ள குடிசிட்டு என்னையே யேசுறானே... போதை கூடிபோச்சா என ஒச்சயா நினைத்து கொண்டே அப்போ நான், எங்க ஐயா, அண்ணன் தம்பிமார் கடலுக்கு போய் சம்பாதிக்கலையா என கேட்க.... கரிசட்டி விட்டபாடில்லை.. ஓய் உமக்கும் எனக்கும் ஓர் பந்தயம்வே, கன்னியாரி பரந்தாவடையில (கன்னியாகுமரி வடக்கு கடற்கரை) ஒத்தையில மரத்த இறக்கி, ஒத்தையில தொடுத்து, ஒத்தையில பாய உசத்தி, திருவணை தாண்டி, இட்டியல் தாண்டி, கல்லு தாண்டி தெக்க போய்டு வாரும், என் ஒத்தக்கர மீசைய எடுக்கேன். கரிசட்டி புலம்பினாலும், ஒத்த மீசை பந்தயத்தை விரும்பாத ஒச்சயா பிள்ளை, மாப்பிள்ளை உனக்கு ஏறி போச்சு மாப்பிள்ளை, விடு வா கிளம்பலாம் என்றாலும் கரிசட்டி இடைவிடாது பேசி கொண்டிருந்தார்.

என்ன சொத்த மயிரு வச்சிருக்க? அதான் பாக்கேனே, ஆயுசு முழுசும் கடனில்லாம கள்ளு குடிக்கலாம், மொக்களுக்கு நொங்கு கிழங்கு பயினி குடுக்கலாம் வெற என்னத்த மயிரு உமக்கு கிடைக்கும்.

வியாபாரிமார் எவனபாத்தாலும் விளை வைச்சிருக்கேங்கிறான். விளைக்குள்ளாற போய் பாத்தாத்தான் தெரியுது என்னத்த வைச்சிருக்காவுனு... மச்சான் ஒச்சியா மச்சான் சொன்னா கேளுங்கவே... காச குடுங்க, பணத்த குடுங்க பாண்டி பரவமார் சக்தியை குடுத்து தொலைக்காதிய பின்னால உங்க பரம்பரைக்கே எதிரா வந்து நிக்கும் பாத்துகிடும்.... ஏ பர்னாந்து மாப்பிள்ளை கிளம்பு ன்னு ஒச்சியாபிள்ளை சொன்னாலும் கரிச்சட்டி பேசிக் கொண்டே....யிருந்தான்.

இப்போ சுத்து வட்டாரத்துல உம்ம பார்வைகாரன் மாடன் தான் பெரிய ஆளு தெரியுமாவே உமக்கு, உம்ம விளை கள்ளு தான் கோவளத்துக்கும் கன்னியாரிக்கும் கூட்டபுளிக்கும் ஊடு ஊடாய் போய்டு இருக்கு. அப்போது தூரத்தில் சாரட்டு வண்டியின் குதிரை சத்தம் எதிரொலிக்க ஒச்சியாப்பிள்ளை பேச்சை திருப்பும் விதமாக, எலே மாப்பிள்ளை நிறுத்து சத்தத்த கேட்டியா சாரட்டு வருதுல, கங்கையா வாராவு, இல்லை இது அவரு வண்டியில்லை சத்தம் குறைவா கேக்கு என கரிசட்டி சொல்ல...

எட்டு பட்டை அடிச்சாலும் சரியா சொல்றீருவே மாப்பிள்ளை எப்படி சொல்ற கங்கையா சாரட்டு இல்லை,....

அது நம்ம பெருமாள் அரசர் சாரட்டு, நாலு குதிரை சத்தம். கங்கைய யூட்டுல 8 குதிரை உண்டு ஆன இண்ணைக்கு அரமனை சாரட்டுல போயிருக்காருனு கரையில சொன்னானுவ....

பாத்திய பாத்திய கரிசட்டி இல்லை பர்ணாந்து, அரசன் கிட்ட நாலு குதிரை கங்கன் கிட்ட எட்டு குதிரை  புரிஞ்சிதால  உனக்கு மாப்பிள்ளை.

ஏதோ புரிஞ்சது போல கரிசட்டி சொன்னான், புரிஞ்சிட்டு மச்சான் கால காலமா பாண்டி பரவமாரு கவுரதிவே அது எங்க மச்சான் மட்டும் என்னா குறைஞ்ச ஆளா ஒரு கலைய கள்ளுக்கு ஊரு பூரா பனங்காடு, பார்க்க பார்வைகாரன் அவன் குடும்பம் ஆனாலும் இது சொந்த விளை கள்ளு மச்சான் அதான் வே மாப்பிள்ளை என ஒச்சியா சொல்லமாறி மாறி பிதற்றி உளற்றி கொண்டிருக்க அரசரது சாரட் ஒச்சியா விளையை கடந்து போய் கொண்டிருந்தது.

முட்டம் மணல்முகட்டிலே அரசரது சாரட்டின் ஈறிணை அரபிக்குதிரைகள் திக்கி திணற குரல் எழுப்பி விசை சொடுக்கி சாரியன் அதட்டி, உருட்டி சவுக்கடி கொடுத்து உசுப்ப, உசுப்ப இருளிலே கலந்த அந்த ஆரவாரம் பரதவவர்மனின் முட்டம் வருகையை குடில்களுக்குள் ஓய்வெடுத்து இருந்த முட்டத்து பரதர்களுக்கு உணர்த்தியது.

பரதவவர்மன் தன் தரவாட்டை அடையும் முன்னரே அங்கே தீபந்த வெளிச்சத்தில் பரதவர்கள் கூட்டமாய் இருப்பதை கண்டார். தராவட்டை நெருங்க நெருங்க பதட்டம் கூடியது. காரணம் சாரட்டிலே சென்று வரும்போதேல்லாம் வரவேற்க காத்திருக்கும் தன் உயிர் மனையாட்டி சந்தமரியா இல்லை மாறாக பரதவர்மனின் ஆத்தா கங்கம்மை அங்கே நின்று கொண்டிருக்க,

ஏதோ விபரீத நிலமை என பரதவர்மன் நினைத்தபடி சாரட்டில் இருந்து அவசரகதியாய் கீழே இறங்கினான். ஓடி வந்த ஆத்தா பரதவர்மனை கட்டி அணைத்து ஐயா வந்துட்டாரையா.. உங்க சாமி வந்துடாரையா நம்மோட பரதகுல மாமுனி வந்துடாரையா என திக்கி திணறி சொல்ல சொல்ல பரதவ வர்மனுக்கு உடம்பெல்லாம் புல்லெரித்து. 

கண்கள் சொக்க கண்ணீர் வடிந்தது. அடங்காத வேட்கையோடு ஆத்தாளின் காதிலே கேட்டான். சாமி எங்காத்தா….? ஆத்தா சொன்னாள். வெள்ளியல் பாறையில தியானத்துல நிக்காரு.

சாயங்காலம் ஊரே வெள்ளியல் கிட்டே கூடீ நின்னுச்சு... என்னானு பாத்தா சாமி ஒத்த கால்ல தியானத்துல இருந்தாரு... நாதான் போய் சாமி பத்தி சொல்லி கூட்டத்த கலைச்சேன்னு ஆத்தா சொல்ல.... பரதவர்மனுக்கு உடனே மனதுக்குள் பொறி தட்டியது. அம்மச்சா கோவில் தேர் திருவிழா பிரச்சனைக்கு அவரை அழைக்க நினைத்த உடனே அவருக்கு தெரிந்து அறிந்து வந்துவிட்டார் போல பரதவ மாமுனி சித்தர் சாமிபிள்ளைன்னா சும்மாவான்னு மனசுக்குள் தனது குருவை பற்றிய கர்வத்துடன் கிழக்கே வெள்ளியலை நோக்கி பரதவ வர்மன் புறப்பட, எய்யா சாமிய பாக்க குளிச்சி எடுத்துட்டு சுத்த பத்தமா போங்கய்யா.... என்று ஆத்தா கங்கமா சொல்ல அதுவும் சரிதான்னு நினைத்தார் பரதவவர்மன்.

அப்போது வீட்டின் முன்பு கூடியிருந்த  பரதவ கூட்டத்தில் இருந்து ஒருவர் ஐயா யாரையா அவரு தாவுல மடி வாங்கிட்டு இருக்கும் போது தடார்னு ஒரு ஆளு தாவி போறத பாத்து பயந்தே போயிட்டோம் கூட்டு மடிக்காரனுவளும் பாத்து சொன்னானுவ ஏதோ உவரி முனின்னு, கரைக்கு வந்தா வெள்ளியல தியானம் செயிரத பாத்தேன். உவரி முனி புள்ளபிடிகாரனா சூனியக்காரனா, உங்க ஆத்தா நல்லவனு சொல்றாவ, சாமிக்கு கூட சொல்லி உட்டாச்சு அவுங்க விசயதாழைக்கு போயிருக்காவளாம் அதனை கேட்டு ஆத்திரமான பரதவவர்மன் கோபத்தை மனசுக்குள் அடக்கி கொண்டு,

மாமா நீங்க நினைக்கிறது சரியில்லை... சாமியும் வரவேண்டிய அவசியமில்லை... சாமிகெல்லாம் பெரிய சாமி வந்துருக்காரு.... கங்கன் சொல்றேன் ஒன்னுமே நடக்காது. போயிட்டு வாங்க கோரணி மாமா என சொல்ல,  ஏ தங்கச்சி மருமவபிள்ளைக்கு மாமா யாருனு சொல்லிக் குடுக்கலையா? நா கோக்கியார் மருமவனே.  அந்த.......... பெயரை சொல்லி கேவலபடுத்தாதியும், என்று சொன்ன மறு கணமே கூட்டத்தில் இருந்த கோரணியார் ஏல யாரல சொல்ற ........ மவனே என மாறி மாறி முட்டி மோதி கொள்ள பரதவவர்மனும் மற்றவர்களும் அவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

மீதம் இருந்த மக்களை ஒரு வழியாக பேசி அனுப்பிவிட்டு, வீட்டின் இருபக்க திண்ணை நடுவே உள்ள படிகட்டில் காலை வைக்க, மனைவி மரியம்மா கொண்டு வந்த சொம்பு தண்ணீரை வாங்கி காலை நனைத்தார். கண நேரத்தில் அவரது மூக்கை துளைத்த சுருட்டின் வாசம் நோக்கி தலையை திருப்ப திண்ணை இருட்டிலே சுருட்டின் கங்கு வெளிச்சம். தாடாரென பாய்ந்து படியேறி சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். சுருட்டை புகைத்தபடி இருட்டில் இருந்தார் பரதவகுலத்து மாமுனி சித்தர் சாமிபிள்ளை.

...கடல் புரத்தான்...
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com