வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 23 February 2018

பண்டைய துறைமுக நகரங்கள்

“தமிழகத்தில் நகரங்களை உருவாக்கியவை 
பண்டைய துறைமுகங்கள்தான்”

முனைவர் பா. ஜெயக்குமார் நேர்காணல்

பொதுமக்களுக்கும் ஆய்வறிஞர்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது. ஒரு முக்கிய முக்கியமான காரணம் பதிப்பகங்கள் ஆய்வறிஞர்களை ஒவ்வாமையுடன் அவர்களுடைய பணி கல்வி புலத்திலே முடியக்கூடியது என முன் தீர்மானத்துடன் அணுகுவது. இலக்கியங்கள்தான் தமிழ் நூல்கள், இலக்கியவாதிகள் எழுதுவதுதான் வரலாறு என்கிற ஒரு போக்கும் இங்கே உள்ளது. இந்த மூடத்தனத்தால் தமிழில் துறைவாரியான ஆய்வு எழுத்துகள் வந்தபோதும் அதை வெகுமக்களிடம் போகாமல் முடங்கிப் போய் உள்ளன. 

இலக்கியத்தை மட்டுமே பதிப்பிக்கும் பதிப்பகங்கள் முன்னணி பதிப்பகங்கள் என்கிற முத்திரையுடன் உலாவ வந்தாலும் இலக்கியம் தவிர்த்து, தமிழின் வளத்தைப் பெருக்கக்கூடிய, அல்லது சமூகத்தை அறிவு ரீதியாக தூண்டக்கூடிய பிற துறை நூல்களை பதிப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி ஒரு சிலர் செயல்பட்டாலும் அவர்களை சிறுமைப் படுத்தும் எள்ளலை ‘இலக்கிய’வாதிகள் செய்கிறார்கள். இது ஒருவகையில் அறிவுக்குறைபாடு என்பதே எம் எண்ணம். எனவே, வெளியே தெரியாத பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்களையும் தமிழ் நிலத்தின் வளத்தை, தொன்மையை விளக்கும் நூல்கள் குறித்தும் இந்தத் தொடரின் மூலம் அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறோம்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் பா. ஜெயக்குமார், ‘தமிழக துறைமுகங்கள்’ நூலின் ஆசிரியர். தொன்மையான வரலாற்றைக் கொண்ட தமிழகத் துறைமுகங்கள் குறித்த மிக முக்கியமான ஆய்வு நூல் இது. 2001-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த ஆண்டின் சிறந்த நூல் என்ற தமிழக அரசின் பரிசையும் இந்நூல் பெற்றது. முனைவர் பா. ஜெயக்குமாருடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு இங்கே…

‘தமிழக துறைமுகங்கள்’ நூல் எதைப்பற்றியது என சுருக்கமான அறிமுகம் தரமுடியுமா?

“சங்க இலக்கிய குறிப்புகளைக் கொண்டு தமிழகத்தில் காவிரிபூம்பட்டினம், கொற்கை, முசுறி ஆகிய மூன்று துறைமுகங்களை அறிகிறோம். இதில் முசுறி இன்று இல்லை. பூம்புகார், கொற்கை போல முசுறியை இப்போது பார்க்க முடியாது. முசுறி கேரளக் கரையோரம் வரும் துறைமுகம். இப்போது அந்த இடத்தைக் கடல்கொண்டுவிட்டது. 3000 மீட்டர் ஆழத்தில் அந்த இடம் உள்ளதாக புவியியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், சங்க இலக்கியம் காலம் தொட்டு, அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக காவிரிபூம்பட்டினமும் கொற்கையும் இன்று அறியப்பட்ட இடங்களாக உள்ளன.

சங்க இலக்கியம் வெளிப்படையாகப் பேசும் இந்த மூன்று இடங்களைத் தவிர, சங்க இலக்கியம் மறைமுகமாக பேசும் இடங்களையும் நம்முடைய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியொரு இடம்தான் ராதநாதபுரம் கடற்கரை பட்டினமான அழகன்குளம். இது சங்க இலக்கியங்களில் பாண்டியர்களின் மருங்கூர் பட்டினமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொன்மையான தமிழக துறைமுகங்களைப் பார்த்தோமானால் அவை அனைத்தும் கடலும் ஆறும் சேரும் கழிமுகப் பகுதியில் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். உதாரணத்துக்கு காவிரி கடலோடி கலக்கும் இடத்தில் அமைக்கப்பட்டதே காவிரிபூம்பட்டினம். பெயர்காரணமே அதன் அடிப்படையில் வைக்கப்பட்டதுதான். அதுபோல அழகன்குளம் துறைமுகம் வைகை ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடமாக உள்ளது. தாமிரபரணி கடலில் சேரும் இடம் கொற்கை துறைமுகமாக இருந்திருக்கிறது. பெரியாறு கடலில் சேரும் இடத்தில் முசுறி துறைமுகமாக இருந்ததாக அறிகிறோம்.

இவை மட்டுமல்லாமல் அகழ்வாய்வுகள் மூலமாக அரிக்க மேடு என்ற துறைமுகத்தையும் கண்டறிந்திருக்கிறோம். சங்க இலக்கியத்தில் நேரடியாக ஐந்தாறு துறைமுகங்களே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இடைக்காலத்தில் கிபி 8-9-ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 16-17 -ஆம் நூற்றாண்டு வரையிலும் கிட்டத்தட்ட 23 துறைமுகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை ஒரே காலாத்தில் செயல்பாட்டில் இருந்தவை அல்ல. வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு அரச மரபுகளுக்குச் சொந்தமானவையாக இருந்திருக்கலாம். நான்கைந்து துறைமுகங்கள் ஒரே நேரத்தில் இயங்கி இருக்கலாம். இதுபோன்ற தகவல்களை கல்வெட்டு, தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலமாகக் கொண்டு வந்திருக்கிறோம். அதைத்தான் ‘தமிழக துறைமுகங்கள்’ என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறேன்.

சோழர்களுக்கு உரியதான நாகப்பட்டினம் துறைமுகம் எப்படி இருந்தது. சீனர்கள் முதற்கொண்டு மற்ற நாட்டினர் அங்கு வந்து வணிகம் செய்தது குறித்தும் இங்கே இறக்குமதியாக சீனக் கனகம் எனப்படும் சீன தங்கத்தை தமிழக பொற்கொல்லர்கள் நகைகளாக மாற்றி, அவற்றை ஏற்றுமதி செய்தது குறித்தும் இந்த நூலில் சொல்லியிருக்கிறேன்.

இன்னொரு தகவலையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தங்கம் இங்கே கிடைக்கவில்லை. ஆனால் தங்கத்தை வரவழைத்து ஆபரணங்களாக செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இதை தாய்லாந்தில் கிடைக்கப்பெற்ற கிமு 3 நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்து பொற்கொல்லர்கள் பயன்படுத்திய கையடக்க வெட்டுக்கல் ஒன்றின் மூலம் அறிகிறோம். இதில் ‘பெரும்பதன்கல்’ என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. பொற்கொல்லர்கள், அல்லது பட்டர்களின் தலைவனைக் குறிக்கும் வகையில் பெரும்பதன் கல் என எழுதியிருக்கலாம் என அறிகிறோம்.

வெவ்வேறு நாடுகளில் பழந்தமிழர்கள் கடல்கடந்து தொடர்பு வைத்திருந்ததை அங்கே அகழ்வாய்வுகளில் கிடைக்கும் பொருட்களின் மூலம் அறிகிறோம். முத்துவணிகம் கடல்கடந்து நடந்திருக்கிறது. யானைகளை இங்கிருந்து அனுப்பியிருக்கிறார்கள். அரேபிய குதிரைகளை வரவழைத்து இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு கடல்கடந்து எடுத்துப் போயிருக்கிறார்கள். துணி வகைகள் ஏற்றுமதி செய்வது 17-ஆம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்திருக்கிறது.”

துணிகள் என்றால், பருத்தி துணிகளா?

“பருத்தி துணிகளும் பின்னாளில் மஸ்லின் என்று சொல்லக்கூடிய மெல்லிய ரக துணிகளையும் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.

பதினென்விசையர்கள் என ஒரு வணிக குழுவினர் இருந்திருக்கிறார்கள். 18 நாடுகளுக்கும் அல்லது 18 திசைகளுக்கும் போய் வணிகம் செய்தவர்களாக இருக்கலாம். இந்தக் குறிப்பு கீழக்கரையில் உள்ள ஒரு விநாயகர் கோயில் கல்வெட்டில் உள்ளது. கிபி 14-ஆம் நூற்றாண்டு வரைக்கும் இவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கியது தெரிகிறது. பிறகு இவர்கள் மருவிப் போயிருக்கலாம்.”

இந்த நூலுக்கு எத்தகைய எதிர்வினைகள் வந்தன..?

“இந்த நூல் வந்த பிறகு, ஆஸ்திரேலியா, இலங்கை, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கல்வி புலத்தில் இயங்கும் பலர் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த நூலை ஆதாரமாகக் கொண்டு பல நூல்கள் வந்துள்ளன. 25க்கும் மேற்பட்ட கடல்சார் வரலாறு முனைவர், எம்ஃபில் பட்ட ஆய்வுகள் வெளிவந்துள்ளன. தற்போது தஞ்சை மாவட்டம் மந்திரபட்டினம் அகழ்வாய்வு இந்த நூலை அடியொற்றிதான் செயல்படுத்தப்பட்டிருக்கிறது”.

பழங்கால துறைமுகங்கள் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தனவா அல்லது வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தனவா?

“நான் சொல்லப்போவது நிரூபிக்கப்பட்ட கருத்து. ஒரு அரசனின் ஆட்சி சிறந்து விளங்கியதற்கோ வீழ்ச்சியடைந்ததற்கோ காரணமாக இருந்தது, அந்நாட்டின் துறைமுகங்களே. துறைமுகங்களை ஒட்டியே நகரமயமாக்கல் நடைபெற்றிருக்கிறது. கிராமங்கள், நகரங்களாக மாற துறைமுகங்கள் முக்கிய காரணியாக இருந்திருக்கின்றன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது மக்கள் தொடர்புடையவையாக துறைமுகங்கள் இருந்திருக்கின்றன.

துறைமுகங்களை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. ஒழுங்குபடுத்தியிருக்கிறது. ஆனால், வணிகர்களும் துறைமுகங்களை கட்டுப்படுத்துகிறவர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணமாக ஆந்திரமாநிலம் மோட்டுப்பள்ளி அருகே கிடைத்த 13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு, வரிகள் மாற்றியமைக்கப்பட்டது குறித்தும் தங்கள் துறைமுகத்தைப் பயன்படுத்த முத்துக்கள் கொண்டுவரும் வணிகர்கள் வர வேண்டும் என்றும் வணிகர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. முத்து வணிகம் செய்தவர்கள் தமிழர்கள், அவர்களுக்காகவே தமிழில் எழுதப்பட்டுள்ளது இந்தக் கல்வெட்டு. இதுபோல சான்றுகள் மூலம் வணிகர்கள் துறைமுகங்கள் மீது தாக்கம் செலுத்தியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.”

துறைமுகங்களில் மீனவர்களின் பங்கு என்னவாக இருந்தது? அவர்கள் தொழில்முறையில் மீன்பிடிப்பதை மட்டும் செய்தவர்களா?

“மீனவர்கள் என ஒரு பிரிவினர் இருந்திருக்கிறார்கள். மீனர்கள் சுதந்திரமாக தொழில் செய்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் நல்லபடியாக பொருளீட்டியால்தான் அவர்கள் மீது அரசுகள் வரிகளையும் இடைக்காலத்தில் விதித்திருக்கின்றன. சங்க இலக்கியம் பரதவர்களை அதிகம் பேசுகிறது. ஆனால் பரதவர்கள் குறித்து கல்வெட்டுச் சான்றுகள் என்று எதுவும் தமிழகத்தில் கிடைக்கவில்லை. இலங்கையில் கிடைத்திருக்கிறது. ஒரு படகும் அதில் ஒருவர் போவது போன்றும் கோட்டுருவமாக ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. இது சங்க காலத்தைச் சேர்ந்தது. மீனவர்களோடு தொடர்புடைய செய்திகளாகப் பார்க்கிறோம். பரதவர்கள் என்கிற மீனவர்களும் நம் பண்பாட்டை பிற இடங்களுக்கு எடுத்துச் சென்றவர்களாகவும் சொல்லலாம்.”

அவர்கள் வணிகத்திலும் ஈடுபட்டார்களா?

“அவர்களும் வணிகத்திலும் ஈடுபட்டிருக்கலாம். உதாரணத்துக்கு மரைக்காயர்கள் என்று இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் உண்டு. இவர்கள் 18-ஆம் நூற்றாண்டில் தான் கடல்சார்ந்த வாணிகத்தில் இருந்தததாக சொல்வார்கள். மரைக்கல ராயர் என்ற சொல்லில் இருந்துதான் மரைக்காயர்கள் சொல் வந்துள்ளதாக 18-ஆம் நூற்றாண்டை ஆய்வு செய்யும் வரலாற்றாசிரியர்கள் சொல்வதுண்டு. முதலாம் குலோத்துங்கன் காலத்திய பண்டைய பாரூஸ், இன்றைய இந்தோனேஷியாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் மரைக்கல ராயர் என்ற சொல் வருகிறது. இது தமிழில் கிடைத்த கல்வெட்டு. எனவே, 700, 600 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தொழிலில் மரைக்காயர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். ராதநாதபுரம் கடற்கரையொட்டி மரைக்காயர் பட்டினம் என்ற ஊரின் பெயரும் இதனால்தான் வந்துள்ளது. இதுபோல பரதவர்களும் வணிகர்களாக இருந்திருக்கலாம்.”

கப்பல் கட்டும் தொழிலில் தமிழர் சிறந்து விளங்கியதாக சொல்லப்படுவதுண்டு. இது குறித்த சான்றுகள் கிடைத்துள்ளனவா?

“Trational nevigation and ship building techniques அதாவது மரபு சார்ந்த கப்பல் கட்டும் கலை மற்றும் கப்பல் செலுத்தும் கலை என்று ஒரு திட்டத்தை CSR க்காக ஐந்தாண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தோம். கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் மரபார்ந்த கப்பல் கட்டும் பணிகளை இன்னமும் செய்கிறார்கள். கடலூரில் யார்டு என சொல்லப்படும் கப்பல் கட்டும் தளங்கள் செயல்படுகின்றன. ’கோர்டியா’ எனப்படும் களங்களை செய்து வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதை நம்முடைய தண்ணீரில் பயன்படுத்த முடியாது; வளைகுடா நாடுகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய Vessel.

இந்தத் தளங்களில் மரபார்ந்த முறையில் பல தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை ஆவணப்படுத்தியிருக்கிறோம். உதாரணமாக Blank எனச் சொல்லப்படும் படகின் அடிப்பகுதியில் பயன்படுத்தப்படும் மரப்பலகையில் வளைவுகளை உண்டாக்க இயந்திரங்களைப் பயன்படுத்த முடியும். ஆனால், மரபார்ந்த முறையில் சுறா எண்ணெய், மேலும் சில எண்ணெய்கள் சேர்த்து வளைவுகளை உண்டாக்குகிறார்கள். தீயைப் போட்டு, அதன் மேல் மரப்பலகையை வைத்து அதில் எண்ணெய்களை ஊற்றி எவ்வளவு வளைவு வேண்டுமோ அதற்கேற்றப்படி வளைக்கிறார்கள்.”

மரபார்ந்த தொழிற்நுட்பங்களை இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குக் கடத்தப்படுகிறதா?

“அப்படி எதுவும் நடப்பதில்லை. எப்படி ஒரு போலீஸ்காரர் தன்னுடைய மகன் போலீஸ் ஆக விரும்புவதில்லையோ அதுபோல இவர்களும் தங்களுடைய பிள்ளைகள் இந்தத் தொழிலுக்கு வருவதை விரும்புவதில்லை. இதுல என்ன சாதிக்கப்போறான் என்கிற மனநிலை மக்களிடம் உள்ளது. இன்றைய வாழ்க்கை முறையும் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு வாழக்கூடியதாக மாறிவிட்டது. பக்கத்து வீட்டில் இருப்பவர் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கும்போது தன்னுடைய பிள்ளை மரபுசார்ந்த படகு கட்டும் தொழிலை செய்துகொண்டிருக்கிறான்; இரண்டு பேருடைய பொருளாதார நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதில் வித்தியாசம் அதிகமாக உள்ளது. எனவே இதே தொழிலில் நீடிப்பதை அவர்கள் விரும்பவில்லை.”

தொல்லியல், கல்வெட்டியல் போன்ற படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வமாக வருகிறார்கள்?

“வருகிறார்கள்…இதை நாங்கள் ஆய்வுக்களமாக பார்ப்பதால் அதற்குரிய பாடத்திட்டங்கள். தொல்லியல், கல்வெட்டியல் என சொல்லும்போது அகழ்வாய்வு செய்து பழங்கால மக்கள் விட்டுச்சென்ற பொருட்களை எடுப்பது, அவற்றை எப்படி வரலாற்று மீட்டுருவாக்கத்துக்கு உட்படுத்துவது, Newinterpretation என்று சொல்லக்கூடிய புதிய விளக்கங்கள், புதிய தரவுகளைக் கொண்டு வெளிக்கொண்டுபோவது, கல்வெட்டுகளை எப்படி படிப்பது, என்னென்ன எழுத்து முறைகள் நம் பண்பாட்டில் இருந்திருக்கின்றன என 19 பாடங்கள் உள்ளன. இதில் கடல்சார் வரலாறும் உண்டு. இவைமட்டுமல்லாமல் பல்வேறு பட்ட நிலைகளில் அவர்களுடைய ஆய்வுகளை கொண்டு செல்லும் வகையில் கற்பித்தல் இருக்கும். 

இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள். தாய்ப் பல்கலைக்கழகமான சென்னை பல்கலை, தஞ்சை பல்கலை என தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே இந்தத் துறையில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் (எம்.ஏ எம்.பில், பி. எச்டி) படிப்புகள் உள்ளன. மாணவர் சேர்க்கையும் 10, 15க்குள்தான் இருக்கும். ஓரளவுக்கு வசதி இருப்பவர்கள்தான் வந்து சேரக்கூடிய நிலை இருக்கிறது. ”

’தமிழக துறைமுகங்கள்’ நூல் மறுபதிப்பு எப்போது வெளிவரும்…?

“விரைவில் வெளிவரும். நாகப்பட்டினம் அகழாய்வுகளையும் நூலில் சேர்க்க வேண்டியுள்ளது. பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் மறுபதிப்பு வரும்”

பரந்த மக்கள் தொகைக் கொண்ட தமிழ் சமூகத்தில், ஆய்வு நூல்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காகத்தான் (கல்வி புலத்தில் இருப்பவர்களுக்காகத்தான்) என்ற நிலை உள்ளது. இந்த அறிவெல்லாம் சாமானியர்களையும் எட்டும்போதுதானே அந்தத் துறையும் விசாலமடையும். இந்த நிலைக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

“பொதுமக்களும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று இதுபோன்ற நூல்கள் பதிப்பிக்கப்படுவதில்லை. மிகப்பெரிய ஸ்காலர்கள், ஆய்வாளர்கள் தங்களுடைய நூல்கள் ஆங்கிலத்தில் வருவதை பெருமைக்குரியதாக, மரியாதையாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த நூல்கள் உலகம் முழுமைக்கும் 30 படிகள்தான் விற்கும். ஆங்கிலத்தில் எழுதியதால் அடுத்த வீட்டுக்காரருக்கூட இவர் நூல் எழுதியிருப்பது தெரியாது. இது ஒரு காரணம்.

இன்னொரு காரணம், கல்வி பின்புலம் இல்லாமல் படிக்க மட்டுமே தெரிந்த ஒருவருக்கு புரியும்படியாக ஆய்வு நூல்கள் எழுதப்படுவதில்லை. அடுத்து, இந்த நூல்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய பொறுப்பு நூலாசிரியருடையது மட்டுமல்ல. ஊடகங்கள், அரசு, ஆசிரியர்களுக்கும் இருக்கு.

இப்போது என்னுடைய நூல்களையே எடுத்துக்கொள்ளுங்கள் 1200 படிகள் பதிப்பித்தோம். 800 படிகள் நூலகத்துக்கும் மீதியிருந்தவை ஆய்வு புலத்தில் இயங்குகிறவர்களுக்கும்தான் போய் சேர்ந்தது. பொதுமக்களில் எத்தனை பேர் இந்த நூலைப் படித்திருப்பார்கள்? முன்பே சொன்னதுபோல அரசு நூலகங்களுக்கு ஒரு படி என்பதற்கு பதிலாக 10 படிகள்கூட வாங்கி வைக்கலாம். கிராமப்புற நூலகங்களிலும் இதுபோன்ற ஆய்வு நூல்களை வாங்கி வைக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்தால் இதுபோன்ற இன்னும் பல துறைகள் இருக்கின்றன, தேடுதல்களைத் தொடங்க வேண்டிய துறைகள் இருக்கின்றன என வருங்கால இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படும். பொதுமக்களுக்குப் போய்ச் சேராதவரை எந்தத் துறையும் புதிய உயரங்களை எட்டாது!”.


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com