வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 19 February 2018

கடல்சார் வணிகமும் பண்டைய தமிழர் பண்பாடும்


முன்னுரை 

கடல்சார் செயல்பாடுகளும், வர்த்தகமும் மிக நீண்ட காலங்களாக நாடுகளுக்கிடையேயான உறவுகளை உறுதிப்படுத்தும் சிறந்த வழிகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மக்களிடம் பரவலாக சென்றடைவதற்கான காரணங்கள் அகழ்வாய்வுகளின் மூலம் கிடைக்கப்பெறும் ஆதாரங்களே. அன்று தொட்டு இன்றுவரை, ‘திரைகட லோடியுந் திரவியம் தேடு’ என்ற மூதுரை நம் பண்டைய தமிழர்கள் வாழ்வுடன் ஒன்றிப்பிணைந்துள்ளதை மறுக்கவியலாது. ஓயாத உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் கடலோடியும் பிழைத்ததோடு நம் பண்பாடு, கலாச்சாரம், கலைகள், பாரம்பரியங்கள், மொழி என அனைத்தையும் பல்வேறு நாடுகளில் பரவச்செய்து வந்துள்ளனர். 

மேற்கே கிரீசு, இரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரை மட்டுமின்றி பாலசுதீனம், மெசப்பொடோமியா, பாபிலோனியா ஆகிய நாடுகளுடன் வாணிகத் தொடர்பு வைத்திருந்தனர். தமிழகத்துக்கும் பாபிலோனியாவுக்குமிடையே மிக விரிவான வாணிகம் நடைபெற்று வந்ததற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. கிழக்கையும் மேற்கையும் இணைத்ததில் கடல்வழி வாணிபத்திற்கு பெரும்பங்கு உண்டு. 

பருத்தி, பட்டு இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகள் உயர்ந்த தரமுடையதாக இருந்தன. நீராவியைவிடவும், பாம்பின் தோலைவிடவும் மெலிதான துணிகள் நெய்யப்பட்டதாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உறையூரில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாடைகளுக்கு மேலை நாடுகளில் பெரும் தேவை காணப்பட்டது. தொண்டி, முசிறி, கொற்கை, காவரிப்பூம்பட்டினம் ஆகியன பண்டைய வணிகத் துறைமுகங்கள். 

கொங்கு நாட்டு தங்கம், பாண்டி நாட்டு முத்து, தந்தம், சந்தனம், மிளகு, வாசனைப்பொருட்கள், இஞ்சி ஏலம், கிராம்பு போன்றவைகள் பண்டமாற்று முறையில் வாணிகம் செய்யப்பட்டன. தமிழகத்திலிருந்து இரோமப் பெருநாட்டிற்குச் சென்ற ஒவ்வொரு கப்பலிலும் ஏலக்காய், இலவங்கப்பட்டை, வெல்லப்பாகு, நல்லெண்ணெய், அதிகமான மிளகு போன்றவைகள் இருந்தன. தேங்காய், நெய், வாழை, அரிசி, சோளம், கம்பு முதலியவற்றுடன் புளி, வெற்றிலை, பாக்கு, போன்ற மூலிகைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன. 


சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க 

யவனர் தந்த வினைமாண் நன்கலம் 

பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 

என்பது அகநானூறு காட்டும் சான்று.. 

ஷேபா எனும் தென்அராபியத்தின் அரசி, கி.மு.1000ஆம் ஆண்டில் வாழ்ந்த இசுரேலின் மன்னன் சாலமனைக் காணச்சென்றபோது ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டுசென்றதாக பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்பு உள்ளது. இதே காலகட்டத்தில் டயர் எனும் நாட்டு மன்னர் ஹீராம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மரக்கலங்களில் கீழை நாடுகளுக்கு, பொன், வெள்ளி, தந்தம், குரங்குகள், துகிம் (மயில் தோகை), ஆல்மக் (அகில் மரங்கள்), விலையுயர்ந்த இரத்தினங்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்து பண்டமாற்று முறையில் வாணிபம் செய்துள்ளார். 


உலகின் முதற்கப்பல் 

உலகின் முதற்கப்பலையும் மீப்பெரும் கப்பற்படையையும் வைத்திருந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரங்கள் பல. தென்பசிபிக் மாகடலில், ஆசுதிரேலியா கடற்பகுதியில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கைகள் அக்கப்பல் 2500 ஆண்டுகளுக்குமேல் பழைமையானது என்றும் அது தமிழர்களுடையது என்றும் தெரிவிக்கின்றன. நாவாய் என்ற தமிழ் பெயரே மருவி நேவி (Navy) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. 

கி.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்துதான் அயல்நாட்டு வாணிகம் தமிழர்களிடையே தொடர்ந்து நடைபெற்றுவந்தது. ஏற்றுமதிச் சரக்குகளை, அராபியரும், பினீசியரும் எகிப்தியரும் மரக்கலங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர். கிரேக்கர்கள், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தமிழகத்துடன் இருந்த வாணிகத்தொடர்பினாலேயே பல தமிழ்ச்சொற்கள் கிரேக்க மொழியில் கலந்துள்ளன. சொபோகிளீஸ், அரிஸ்டோ பேனீஸ் முதலிய கிரேக்க அறிஞர்களின் நூல்களில் இத்தகவல் உள்ளதை, ‘தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்’ என்ற நூலில், டாக்டர் கே.கே.பிள்ளை விளக்கியுள்ளார். 

மிகவும் பிற்பட்ட கி.மு.60களிலேயே நம் இந்தியத் துறைமுகங்கள், முக்கியமான மேற்குத் துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டிருந்தமைக்கு வணிகம் மட்டுமே முக்கிய காரணமாக இருந்தது. “த பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரேயன் சீ ” (The Periplus of the Erythraean Sea) என்ற நூல் பண்டைய இந்திய கடல்சார் வணிகத்தின் சிறந்ததொரு ஆவணமாக உள்ளது. 

"பெரிப்ளஸ் நூலை முதல் நூற்றாண்டின் கிரேக்க-ரோமன் வணிகர்கள் எழுதியிருக்கலாம். குஜராத் கடற்கரையிலிருந்து தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பாலும் தொடரும் அனைத்து முக்கிய துறைமுகங்களையும் இது விவரிக்கிறது " என கடலாய்வறிஞர் நரசய்யா தெரிவிக்கிறார். 

2003ஆம் ஆண்டில் சிவப்புக்கடல் துறைமுகத்தில் அகழ்வாராய்ச்சியில் பானை ஓரியுடன் (தொங்கும் வலைக்குள் பானை), தமிழ் பிராமி எழுத்துகளுடன் ஒரு உடைந்த மண் சாடியும் கிடைத்துள்ளது. 1990களின் பிற்பகுதியில், பெரெனிஸின் பண்டைய எகிப்திய துறைமுகங்களிலும் தமிழ் பிராமி எழுத்துகள் உள்ள கல்வெட்டுகளும் காணப்பட்டதாகக் கூறுகிறார். இதன் மூலம் ஐரோப்பாவிற்கும் தமிழ்நாட்டிற்குமிடையே வர்த்தகம் செழித்தோங்கியிருந்தது உறுதியாகிறது. கிரேக்க மொழியில் தமிழ் சங்கப்பேரரசுகள் “தாமிரிக்கா” என்று வழங்கப்பட்டுள்ளன. 

தமிழ் நாட்டினர் கங்கை கரைத்துறைமுகங்களில் வர்த்தகம் செய்து, பட்டு, தந்தம், விறகு, முத்து போன்றவற்றை ஏற்றுமதி செய்தனர். மகாபலிபுரம் ஒரு கடல் துறைமுகமாக இருந்துள்ளது. மகாபலிபுரம் கடற்கரையில் பாறைகள் அதிகமாக உள்ளதால், அதற்கு மாற்றுத்தடமாக மரக்காணம் இருந்ததை பெரிப்ளஸ் தெளிவாக்குகிறது. பாண்டிச்சேரியில் உள்ள அரிக்கமேடு, மத்தியதரைக்கடல் பெரும் வர்த்தக மையமாக விளங்கியது. 


‘கங்கை வாரியும் காவிரிப் பயனும் 

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்..’ 

பட்டினப்பாலை 

பூம்புகார் நகரின் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் வந்து சேர்கின்ற பொருட்கள் குறித்த பாடலில் வருகின்ற காழகம் என்ற வார்த்தை மலாயாவில் உள்ள கடாரத்தைக் குறிப்பதாகும். முற்காலச் சோழ அரசர்களில் ஒருவனான கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சியில் தென்கிழக்காசியாவரை சோழர்களின் வணிகப்பரப்பு விரிந்துள்ளதையும் அறியமுடிகிறது . 


சோழரின் வணிகம் 

சோழர்கள் வெளிநாட்டு வணிகத்திலும் சிறந்து விளங்கியதை சீனாவின் சோங் (Soang) வம்சத்தின் குறிப்பொன்றில், சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றதைக் கூறுவதன் மூலம் அறியமுடிகின்றது. சுமத்ரா தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய, 1088ஆம் ஆண்டைச் சேர்ந்ததான நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றி குறிப்பிடுகின்றது. இவைகளே சோழர்கால கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாகவும் அமைகின்றது. 

பண்டைய தமிழ்ச்சமூகத்தினரின் சூழலை தெளிவுபட உரைக்கின்றவைகளின் முன்னணியில் உள்ளவை சங்க கால இலக்கியங்களே. கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட இரோமானிய நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் இலக்கியம், தொல்லியல், நாணயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் பெருமளவில் காணலாம். 


பண்பாடு 

நாம் வாழும் முறையைச்சார்ந்த பண்பாட்டை செதுக்கும் உளியே நம்மொழி. உண்பது, உடுத்துவது, பேசுவது, நம்பெறுமதிகள், பொருண்மியம், வரலாறு, போன்றவைகளனைத்தும் இதனுள் அடங்கும். காலத்தின் போக்கிற்கேற்பவும், நாம் வாழும் சூழலின் வழமையின் பொருட்டும் இவை மாறுந்தன்மை கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்தலின் பொருட்டும் நம் பண்டைய தமிழர்களின் பழக்கவழக்கங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருக்குமொரு இயங்கியல் பண்பாடு. அந்த வகையில் உலகக் கலாச்சாரங்களில் மிகவும் தொன்மையானதும், முன்னோடியானதுமான நம் தமிழ்க்கலாச்சாரம் 6000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டதை ஆதிச்சநல்லூர், மொகஞ்சதாரோ, ஹாரப்பா போன்ற இடங்களில் கிடைத்துள்ள ஆதாரங்களால் உறுதியாகின்றன.

நம் தமிழகம் பலமொழிகள் பல இனங்கள் பல சமயங்கள் பல மரபுகள் என்றிருந்தபோதும் வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கண்டு வாழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தமிழர்களின் பழங்குடிமரபு கி.மு 3ஆம் நூற்றாண்டில் சமணத்தின் வருகை, அதைத் தொடர்ந்து கி.மு முதலாம் நூற்றாண்டில் புத்தமத வருகை அதைத் தொடர்ந்து விவிலியம், சைவம், இசுலாம், வைணவம் என்று சங்கிலித்தொடர்போல் வெளித்தாக்கங்களால் புதுவிதச் சிந்தனைகளை உள்வாங்கியிருந்திருக்கிறது. நாகரிகம் வளர ஆரம்பித்தவுடன் மக்களின் வாழ்க்கை முறைகளில் பெரும் மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன. இத்துணை பழைமையான தமிழ்மரபுகள், நவநாகரிகம், உலகமயமாதல், நவீன தொழில்நுட்பம் போன்ற பல்வேறு காரணங்களால் வெகு விரைவான மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. 


புலம் பெயர்தல் 

புலம்பெயர்தலை பழந்தமிழ் இலக்கியங்கள் ‘மொழிபெயர் தேயம்’ எனச்சுட்டுவதைக் காணமுடிகிறது. போர் நடத்தவும், பொருள் தேடவும், வணிகம் தொடர்பாகவும் தமிழர்கள் கடல்கடந்து சென்ற செய்திகளை சங்கத்தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது. 

தமிழ்நாட்டிற்கப்பால் உள்ளதொரு நாட்டிற்குச் சென்றிருக்கும் தலைவனைப் பிரிந்திருப்பதால் நோகும் தலைவி தனக்குத்தானே கூறிக்கொள்வதாக அமைந்துள்ள பாடலிது: 



கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும் 

பாடில கலிழும் கண்ணொடு புலம்பி 

ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே 

எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது 

குல்லைக் கண்ணி வடுகர் முனையது 

பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் 

மொழிபெயர் தேஎத்த ராயினும் 

வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. 


‘மொழிபெயர் தேயம்’ என்பது வேறுமொழி வழங்கும் நாடு என்று குறிப்பதை மாமூலனார் (11. பாலை - தலைவி கூற்று) பாடலில் காண்க. 

கப்பல் போக்குவரத்தில் சிறந்த தென்தமிழ்நாட்டில் சாதிக்கொடுமையாலும், கடும் பஞ்சங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு, 1820இல் மலேயாவின் பினாங்கிலும், 1824இல் இலங்கையிலும், 1840களில் டிரினிடாட், கயானா, மொரிஷியஸ்சிலும், 1860களில் தென்னாப்பிரிக்காவின் நேடாலிலும் 1870களில் டச்சுக்காலனியான சுரிநாமிலும் 1879இல் பிஜியிலும் இறக்கிவிடப்பட்டனர். 

1874இல் தனது காலனியாக மாறிய பிஜித்தீவுக்கு 1879 முதல் 1916 வரை 87 கப்பல்களில் 65 ஆயிரம் மக்கள் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டனர். ஐந்து ஆண்களுக்கு ஒரு பெண் என்ற வீதத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமையும் நடந்தேறியது. பிஜித்தீவின் தமிழ்ச்சமுதாயம் உருவான வரலாறும் இதுதான். 840 தீவுகளின் தொகுப்பான பிஜியின் மொத்த மக்கள்தொகையில் 44% பேர் இந்திய வம்சாவளியினர். 


சங்க காலத்தில் தமிழ்ப்பெண்கள் கடல்கடந்து சென்றனரா? 

சங்ககால மகளிர் நிலை குறித்து சங்க இலக்கியங்களால் அறியமுடிகின்றது. மகளிரின் வீரம், கற்பு நிலை, குறித்து பல்வேறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. காதல் திருமணமும், பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தெரிவு செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர். 

"முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை" என்ற தொல்காப்பிய நூற்பாவை வைத்து தமிழ்ப்பெண்கள் கடல் கடந்து போவதில்லை என்று ஒருபக்கச் சார்பான முடிவுக்கு வரவேண்டியுள்ளது . ஆயினும் மணிமேகலைக்கு மட்டுமின்றி மணிமேகலா தெய்வத்துக்கும் மணிபல்லவத்தீவு தெரிந்திருக்கிறது. அங்கிருந்த புத்த பீடிகைதான் மணிமேகலைக்கு அவளுடைய பழம்பிறப்பை உணர்த்தும் என்றும் அங்கேதான் அமுதசுரபி மணிமேகலையின் கைக்கு வந்து சேரும் என்றும், மணிமேகலை அங்கே செல்வதற்கு முன்னரே தீவதிலகை அங்கே இருக்கிறாள். 

இந்திரன் ஏவலால் புத்த பீடிகையைக் காப்பதற்காகவே தான் அங்கே இருப்பதாகவும் சொல்கிறாள். அதே தீவதிலகைதான் பிறகு புண்ணியராசனுக்கு அவன் அந்தத் தீவில் ஆபுத்திரனாக வந்தது, அவன் அங்கே இறந்தது, அவனைத் தேடிக் கம்பளச் செட்டிகள் வந்தது போன்ற இன்ன பிற செய்திகளையும் தெரிவிக்கிறாள். 

இதே போன்று நாகநாட்டுப் பீலிவளை என்பவள் தனக்கும் சோழ மன்னனுக்கும் பிறந்த குழந்தையை, கடல்கடந்து வந்த சில வணிகர்கள் மூலம் சோழனிடம் சேர்ப்பிக்க அனுப்பிவைக்கிறாள். அந்தப் பீலிவளை புத்த பீடிகையைக்கண்டு வணங்கப் போனதாகவும் தெரிகிறது. "தொன்மங்கள்" என்றோ கட்டுக்கதை என்றோ இவையனைத்தையும் புறக்கணிக்க முடியாதவையாகவே உள்ளன. பண்டைத் தமிழ்மரபில் தமிழ்ச்சமுதாயம் பெண்ணாதிக்கச் சமுதாயமாகவே அமைந்திருந்தது. பாண்டியர்வம்ச பெண்களுக்கு அரசாளும் அதிகாரமும் இருந்துள்ளது. தமிழ்க்குடி உலகில் புலம்பெயர்ந்த மனிதகுழுக்கள் மூன்றில் ஒன்று என்ற வரலாற்றுப் பெருமையை அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 


யாதும் ஊரே யாவரும் கேளிர் 

தீதும் நன்றும் பிறர் தர வாரா 

என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடல் மூலம் இன்று பேசப்படும் உலகக் கிராமம் (Global Village) எனும் தத்துவத்தை நம் முன்னோர்கள் 2000 ஆண்டுகட்கு முன்னரே வழக்கத்தில் கொண்டிருந்தனர் என்பதை எண்ணி பூரிப்படையமுடிகிறது. சங்ககால ஆட்சியியலில் முடியிடை மூவேந்தர்கள் சேர, சோழ, பாண்டியரின் நாடுகளின் எல்லைப்புறங்களில், துளுநாடு, எருமைநாடு, பூழிநாடு, குன்றநாடு, எழில்நாடு, நாஞ்சில்நாடு, போன்ற குறுநிலப் பிரிவுகளுக்கு ஆய்வேளிர், கோசர் என்ற அரச பரம்பரையினர் குறுநில மன்னர்களாயினர். 


மொழிவழி ஆதாரங்கள் 

நம் தமிழ்மொழி பல்வேறு நாட்டுமக்களின் மொழிகளுடன் பின்னிப்பிணைந்துள்ளதே நம் மொழியின் பழைமைக்கு சான்றாகியுள்ளது. உலகளவில் 136 மொழிகளின் வேர்ச்சொற்களுடன் தமிழ் மொழி கலந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கடல் ஆய்வறிஞர் திரு.ஒரிசா பாலு கூறுகிறார். உதாரணமாக, கொரியா - 6,500 சப்பான் -1400 சீனா - 700 மலேசியா - 1600 தாய்லாந்து - 850 சொற்கள் கலந்துள்ளனவாம். 

‘அரிசி’ என்னும் தமிழ்ச்சொல் கிரேக்க மொழியில் அரிஸா’ என திரிந்துள்ளது. தென்கொரிய மக்கள் இன்றளவிலும் பெற்றோரை தமிழர்களைப் போன்றே அப்பா, அம்மா என்றே அழைக்கின்றனர். இரு வேறு மொழிகளுக்கிடையே தோன்றும் சொற்கலப்புகளைக் கொண்டே அம்மக்களின் வணிகத் தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. கருவா (இலவங்கம்) என்னும் தமிழ்ச் சொல் ‘கார்ப்பியன்’ என்றும், இஞ்சிவேர் ‘சின்ஞிபேராஸ்’ என்றும், பிப்பாலி ‘பெர்ப்பெரி’ யாகவும் உருமாற்றம் அடைந்தன. 

சயாமில் கிடைத்த கி.பி.8 - 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க்கல்வெட்டின் வாயிலாக அங்கிருந்த தமிழ் வணிகக்குழுவைப் பற்றிய செய்திகளை அறியமுடிகிறது. சயாம் மன்னர்களின் முடிசூட்டு விழாவில் தமிழ்ப்பாட்டு பாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்றளவிலும் பாங்காக்கிலுள்ள கோயில்களில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடப்படுகிறது. அமெரிக்க அதிபர் பாராக் ஓபாமா, பதவியேற்றபோது, இந்தோனேசியாவில் வசிக்கும் அவர்தம் முன்னோர்கள் அனுமனை வழிபட்டுவந்ததாகக் கூறியுள்ளார். 

பர்மாவின் அன்றைய தலைநகரான இரங்கூன் பெரிய நகரமாக வளர்ச்சியடைந்ததில் தமிழ் தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்களுக்கும் சிறப்பான பங்கு உண்டு என முனைவர் எஸ்.நாகராஜன் குறிப்பிடுகிறார். பாகன் என்ற ஊரில் கிடைத்துள்ள கல்வெட்டின் மூலம் அங்கு நானாதேசி வணிகர் கட்டிவைத்த திருமால் கோயில் இருந்ததையும் அவ்வூரில் தமிழர்கள் குடியேறியிருந்ததும் தெரியவருகிறது. 

பல்லாயிரம் மைல்களின் இடைவெளியில் இருக்கும் கொரியா மற்றும் தமிழ்நாடு என இரு நாட்டுமக்களின் மொழிவடிவம் மற்றும் கலாச்சார அடிப்படையில் ஒரு ஒற்றுமை இருப்பது போன்ற சுவையான தகவல்களை பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. கொரிய மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ் அறிஞருமான ‘ஜங்க் நாம்கிம், தமிழருக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் பழங்காலத் தொடர்புகளைப் பதிவு செய்து வருகிறார். பொதுவாக ஒரு இன மக்களின் பண்பாடு, கலாச்சாரம் குறித்து எளிமையாக அறிய வகைசெய்வது அந்நாட்டு மக்களால் இயல்பாக அன்றாட பேச்சு வழக்குமொழியில் பயன்படுத்தும் சிலபல சொலவடைகள் மற்றும் பழமொழிகள் போன்றவைகளே. 

தென்கொரிய மக்களின் ‘ஹங்குல்' என்ற மொழிக்கும், நம் தமிழ் மொழிக்கும் எழுத்துவடிவத் தொடர்பு உண்டு என்கின்றனர் மொழியியலாளர்கள். தமிழிலிருந்து பிறந்ததுதான் கொரிய மொழி என்பதை அங்குள்ள எழுத்து வடிவங்கள் தெளிவுபடுத்துவதாகவும் கூறுகின்றனர். தமிழ் மற்றும் கொரிய மொழிகளின் சொற்றொடர் அமைப்பில், முதலில் எழுவாய், அதை அடுத்து செயப்படுபொருள், இறுதியில் வினைச்சொல் என்று முடிவதும் அறியமுடிகிறது. 

இல்யோன் என்ற புத்தத்துறவி 13ஆம் நூற்றாண்டில்(1206 – 1289) இயற்றிய சாம்குக்யுசா எனும் கொரிய வரலாற்றுத் தொன்மம் மூலமாக இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். அக்கதையின் கருவான சம்பந்தப்பட்ட நாடும், ஆட்சியாளர்களின் வழித்தோன்றல்களும், பண்பாடுகள் மற்றும் கலாச்சாரங்களின் எச்சங்களும், மரபணுச் சொந்தங்களை மீட்டெடுக்கும் ஆதாரங்களுக்கான வாய்ப்புகளும் அதைத் தொன்மைக்கதை என்று ஒதுக்கித்தள்ள இயலாதவகையில் பேரார்வத்தை ஏற்படுத்துகிறது. 

கி.மு. 48ஆம் ஆண்டிற்கு முன்பாக கொரியாவின் தென்பகுதியிலிருந்த கிம்கே எனும் பகுதி ஒரு நாடாகவோ அல்லது பேரரசாகவோ உருவாகவில்லை. ஒன்பது தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டுவந்தது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் ஆய் கொங்குநாடு இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. கிரேக்க நாட்டு நிலவரைப் படங்கள் கொரியாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதை கீழே உள்ள படங்கள் மூலம் அறியலாம். தரவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடங்கள் கொரிய அரசி தமிழகத்தின் ஆய்பாண்டிய நாட்டு இளவரசி என்று ஏனைய சங்க இலக்கியங்களின் உதவியோடு நிறுவமுடிந்துள்ளது. 

இந்திய நாட்டு புராணக்கதையில் உள்ளவாறு முட்டையிலிருந்து தோன்றிய பிரம்மன் போல, தெய்வ சக்தியால் ஒரு குன்றின்மீது தங்க முட்டையிலிருந்து தோன்றியவன் சுரோ என்ற மன்னன். இவன் சீன நாட்டின் இறுதி தீபகற்ப பகுதியான கொரிய நாட்டின் அரசன். திருமண வயதில் இருக்கும் மன்னன் தம் திருமணம் குறித்து தாம் கண்டகனவை திடமாக நம்பியவனாகக் காத்திருக்கிறான். இந்த சம்பவங்கள் நடந்த அதே சமயம் இந்திய நாட்டில் ஆய்பாண்டியர் ஆட்சியில் இருந்த நாட்டின் இளவரசியின் பெற்றோரின் கனவிலும் இறைவன் தோன்றி சுரோ என்ற அந்த மன்னன் பற்றி கூறுகிறார். ஏற்கனவே தாங்கள் வணிகத் தொடர்பிலிருக்கும் பகுதிகள் என்பதால் எவ்விதத் தயக்கமுமின்றி தங்கள் மகளை மணமுடித்துக் கொடுக்க தெய்வ சங்கல்பமாகக் கருதியவர்கள் அன்பு மகளை கடல்கடந்து அனுப்ப சம்மதிக்கின்றனர். 

அதன்படியே ஒரு நாள் மன்னன் சுரோ, செந்நிற பாய்மரம் ஏந்திய ஒரு மரக்கலம் தென்மேற்கிலிருந்து வருவதைக் காண்கிறான். அருகில் சென்றவன் தனக்கான இளவரசி வந்துவிட்டதை உணர்கிறான். வந்தவள் ஆய்இளவரசி கொரியாவில் பூசன் என்ற பகுதியில் கரையிறங்குகிறார். கயா அரசனை மணந்து கொரிய அரசியாக அரியணை ஏறுகிறார். தனக்கு பதினாறு வயது ஆகிறது என்றும், தன் பெற்றோரின் கனவில் தோன்றிய கடவுள், வானிலிருந்து தோன்றிய புனித மகனான காரக்நாட்டு மன்னன் சுரோ, திருமண வயதில் காத்திருக்கிறான் என்றும், தங்கள் மகளை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்கும்படியும் வாக்கு அளித்ததாகவும் கூறுகிறாள். 

அயுத்தா எனும் நாட்டிலிருந்து மூன்றுமாத கடல்பயணமாக வந்தவளின் பெயர் தமிழில் ‘பவளம்’ என்ற பொருளில் ‘யெல்லோ ஜேட்’ என்கிறாள். ஹியோ ஹவாங் ஓக் என்ற நாமமும் சூட்டப்படுகிறாள். புயலில் சிக்கித் தத்தளித்து இறுதியில் இறையருளால் கயா நாட்டின் கடற்கரையில் நலமாகவந்து இறங்கிவிட்டதாகக் கூறுகிறாள். இன்றும் கொரிய மக்கள் தெய்வமாக வணங்கும், 157 ஆண்டுகள் வாழ்ந்து நல்லாட்சி புரிந்தவள், சூலமேந்தி அம்பிகையின் வடிவாகவே நின்ற ’பவளாம்பிகை’ சுரோ மன்னனை மகிழ்ச்சியுடன் மணக்கிறாள். 

வெகு விரைவிலேயே வளர்ச்சியின் உச்சம் தொட்டுவிடும் கொரியாவில் இடையில் ஏற்படும் மாற்றங்கள் யாவும் வளர்ச்சிக் கோட்டைகளின் திறவுகோல்களாகவே அமைந்துவிடுகின்றன. கொரிய அரசிக்குப் பிறந்த பத்து ஆண்குழந்தைகளில் மூவர் மூன்று நாடுகளில் ஆட்சிபுரிய, அரசியுடன் தங்கிவிட்ட மூத்த சகோதரன் புத்தபிக்குவாகவும் மீதமுள்ள 7 குழந்தைகளைப் புத்தமதத்தில் ஈடுபடுத்துகிறார். 

தமிழ்நாட்டிலிருந்து ஆசீவகம் புத்தம் கொரிய அரசியால் அறிமுகப்படுத்தப்பட்டு, குடிமக்கள் சிறப்புடன்வாழ வழிவகுத்தார்.. கி.பி 200இல் ஆய் மற்றும் கொங்கு வேளிர்கள் தமிழகத்தில் ஆட்சிபுரிந்தனர். கயா அரசும் சிறப்பாக நடந்தது. கி.பி 300இல் ஆய் கொங்குநாடுகள் இருந்த நிலையில் கயா கூட்டரசாக மாறுகிறது. கி.பி 400இல் ஆய்அரசு மட்டுமன்றி தமிழகத்தின் மற்ற சேர சோழ பாண்டிய அரசுகளும் களப்பிரர் ஆட்சிக்கு மாறுகிறது. 

நம் பண்பாடு, கலாச்சாரம், உணவுமுறை போன்றனைத்தும் தென்கொரியாவிலும் ஒத்திருப்பதும் அதிசயம்தான். அரிசி உடைக்கும் இயந்திரம், முறம், பிரம்புக்கூடைகள், உரல்-உலக்கை, நெசவுத்தறி, கால்நடைகளுக்கு காலில் இலாடம்கட்டுவது, கட்டிடக்கலை போன்றனைத்தும் பன்னெடுங்காலமாக ஒத்திருப்பதோடு இருநாட்டிற்குமிடையே மரபணுத்தொடர்பு இருப்பதும் அதிசயம்தான். 2000 ஆண்டுகளுக்குப் பிறகு வழிவழியாகவந்த, தங்கள் தாயகத்தின் வேராக இருக்கும் ஒரு கதை நிலைத்திருப்பதும் இதற்கு உறுதியான சாட்சியாக அமைந்துள்ளது. 

சங்க இலக்கியங்களில் பவளத்தைக் குறிக்க துகிர், பவளம் என்ற இரண்டு சொற்கள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 


“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய 

மாமலை பயந்த காமரு மணியும்.” (புறம் 218) 

“வரியிட்ட பவளமொடு மணி மிடைந்தன்ன” (அகம்-14) 

என்பன சங்க இலக்கியத் தொடர்கள். 

பழந்தமிழர் ‘அலைகடல் நடுவில் பல கலம் செலுத்தி”, “நனியிரு முந்நீர் நாவாய் ஓட்டி” சிறந்த கடலோடிகளாக விளங்கினாலும், பெண்கள் கடல் பயணம் மேற்கொள்ளுவது வழக்கம் இல்லை. ஆடவர் பயணம் மட்டும் ‘கலத்தில் சேரல்’ என்று கூறப்படுகிறது” என கல்வெட்டறிஞர் புலவர் இராசு கூறினாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மகளிர் பல்வேறு காரணங்களுக்காக கடல் பயணம் மேற்கொண்டதையும் அறியமுடிகிறது. 


முடிவுரை 


‘பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்/ அந்நாள் பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்...’ என்னும் மீனாட்சியம்மையின் பாடல்வரிகள் போன்று கடல்வழி பயணங்கள் ஒரு சவாலாகவே இருந்த காலத்திலும், இந்தோனேசியாவில் மையம்கொண்டிருந்த டச்சுக்காரர்கள் ஆண்களையும் பெண்களையும் கிழக்காசிய நாடுகளுக்கு கொண்டுசென்றனர். நெடுங்கடலில் கப்பல்செலுத்துவதில் வல்லமை பெற்றிருந்த தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழர்களின் நாகரிகத்தையும், கலையையும், அரசியல், சமுதாயம், மதம் பற்றிய சிந்தனைகளையும், பழக்கவழக்கங்களையும், மொழியையும் பரப்பி வந்தனர். சேர, சோழ பாண்டியர்கள், பல்லவர்கள் அனைவரும் திறமையான கப்பற்படையை வைத்திருந்தனர். பிற்காலச் சோழர்களின் கப்பற்படை வங்காளக் கடலையே ஆட்சி புரிந்ததாலும், பண்டைய தமிழர்களின் செயற்பாடுகளாலும் இன்றளவும் நம் கண்முன்னே சாட்சிகளாய் உலகம் முழுவதும் பரந்துகிடப்பதை எண்ணி பெருமிதம் கொள்ளமுடிகிறது. 


உசாத்துணை 

R. Sathyanatha Ayyar, History of India. voi I, pp. 222–223. 7. 

P. T. S. Ayyangar, History of the Tamils, pp. 304–305. 

Indonesia, New Guinea (Irian Jaya), and the southern Philippines. 21 [End Page 139] 

கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம் – பவள சங்கரி 

கொங்கு ஆய்வு மையம் – கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு 

தொல்லியல் நோக்கில் சங்ககாலம் - முனைவர் கா.இராசன் 

பவள சங்கரி 
Thanks  : www.academia.edu






Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com