வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 21 February 2018

செயற்கை முத்து


நவரத்தினங்களில் ஒன்றான முத்துக்கு பெயர் பெற்றது தூத்துக்குடி. கடலில் மூழ்கி எடுக்கப்படும் இந்த முத்துக்களை வெளிநாட்டவரும் விரும்பி அணிந்து உள்ளனர்.

முத்து குளிப்பு தொழில் பாண்டிய மன்னர்களின் காலத்தில் கொடிகட்டி பறந்தது. 1961-ம் ஆண்டு வரை முத்துகுளிப்பு நடந்து வந்தது. பின்னர் முத்து வளம் குறைந்து விட்டதால் தூத்துக்குடியில் முத்துகுளிப்பு தொழில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் இந்தியாவிலேயே முதன் முதலாக கடல் முத்தை செயற்கையான வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்து அனைவரது பார்வையையும் மீண்டும் தூத்துக்குடி பக்கம் ஈர்த்தது. 1973-ம் ஆண்டு வேப்பலோடையில் முதல் முதலாக வளர்ப்பு முத்து உருவாக்கப்பட்டு தூத்துக்குடியை அலங்கரித்தது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பெரும்பாலும் பிங்டேடா பியூகேடா என்ற வகையை சேர்ந்த முத்து சிப்பிகள் காணப்படுகின்றன. இந்த சிப்பிகள் கடல் பாசியை உணவாக உட்கொள்ளும். அப்போது, ஏதேனும் மண் துகள் அல்லது வேறு ஏதேனும் ஒரு சிறிய துகள் முத்துசிப்பியின் உடலில் தங்கி விடும்.

அவ்வாறு தங்கும் பொருட்கள் சிப்பியின் உடலில் உறுத்திக்கொண்டே இருக்கும். இதனால் அந்த சிப்பியானது, தனது உடலில் உள்ள மேண்டில் என்னும் பகுதியில் இருந்து ஒரு வித திரவத்தை சுரந்து அந்த பொருளின் மீது படிய செய்கிறது. அந்த திரவம் தொடர்ந்து படிவதால் நாளடைவில் அது முத்து ஆக உருவாகிறது.

கடலில் முத்து வளம் குறைந்ததால் செயற்கை முறையில் முத்துக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியது.

இந்த முறையில் முத்துசிப்பிக்கள் தனியாக வளர்க்கப்படுகிறது. நன்கு வளர்ந்த முத்து சிப்பிகளை சோதனை கூடத்தில் மயக்க நிலைக்கு உட்படுத்தி சிறிய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

அதன்பிறகு இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறிய உருண்டை வடிவிலான நியூக்லியஸ் சிப்பிக்குள் அறுவை சிகிச்சை மூலம் செலுத்தப்படுகிறது. ஓரிரு நாட்கள் கவனமாக பராமரிக்கப்பட்டு, முத்து சிப்பி மயக்க நிலை தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும், அவற்றை பிரத்யேக கூண்டுகளில் இட்டு கடல் பகுதியில் அமைக்கப்பட்ட பண்ணைகளில் வைத்து பராமரிக்கப்படுகிறது.

அவ்வாறு பராமரிக்கப்பட்ட முத்து சிப்பிகளில், அந்த சிப்பியின் மேண்டில் பகுதியில் இருந்து சுரக்கும் திரவம், உள்ளே வைக்கப்பட்டு இருக்கும் நியூக்லியஸை சுற்றி படிய தொடங்கும். 8 முதல் 9 மாதங்களில் உலகத்தரம் வாய்ந்த அழகிய முத்து உருவாகி இருக்கும்.

இந்த தொழில்நுட்பத்தை மீனவர் களிடம் கொண்டு சென்று, முத்துநகரின் இழந்த பெருமையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் செயற்கை முத்து உற்பத்தியாவதற்கு நீண்ட நாட்கள் ஆகிறது என்பதாலும், தரமான முத்து உருவாகி இருக்கிறதா என்பதை மீனவர்கள் பார்க்க முடியாத நிலை இருப்பதாலும் செயற்கை முத்து தொழிலில் மீனவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில் மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள முத்துப்படுகைகள் குறித்து தமிழ்நாடு மீன்வளத்துறை 1986-க்கு பிறகு எந்த சர்வே பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால் முத்துசிப்பி வளம் உள்ளதா? என்பதை அறிய முடியாத நிலை உள்ளது. செயற்கை முத்து உற்பத்தியும் கானல் நீராக மாறி விட்டது.

எனவே, தமிழ்நாடு அரசு, முத்துசிப்பி வளம் குறித்து ஆய்வு செய்து, முடிவுரை எழுதப்பட்ட முத்துகுளித்தல் தொழிலுக்கு மீண்டும் முகவுரை எழுத வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது.

-ச.சங்கர், தூத்துக்குடி. 

நன்றி தின தந்தி
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com