வேம்பாறும் பாண்டியரும்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரத குல மக்கள் நுழைவதற்கான வடக்கு வாசல் சாவி வேம்பார் பரதகுல மக்களிடம் இருந்ததாக வாய்வழி வரலாறு உள்ளது என்பது உண்மையா....
மேற்கண்ட தகவலுக்கு விடை காணும் முன் வேம்பாற்றின் பரத குலத்தோருக்கும் பாண்டியருக்குமான உறவைப் பற்றி காண்பது அவசியம்.....
1. வேம்பாறு என்பதன் பெயர் காரணத்தை அறிய முற்படும் போதே பாண்டியருடனான உறவை அறிய முடியும். பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் பாண்டியரின் பெயரையே கொண்டு அமைந்திருக்கும். ஆனால் வேம்பாறோ நேரடியாக பாண்டியனைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. பாண்டியனின் அடையாள மாலை வேப்பம்பூவினால் ஆனது. வேம்பாற்றிக்கு வருகை தந்த பாண்டிய மன்னனுக்கு வேம்பாற்று பரதவ தலைவர் வேப்பம்பூவினால் ஆரம் (மாலை) தயாரித்து சூட்டியதால் வேம்பாரம் என அழைக்கப்பட்டு, பின்னர் வேப்ப மரங்கள் சூழ்ந்த இவ்வூரின் வழியே ஓடி கடலில் கலக்கும் வேம்பு + ஆறு = வேம்பாறு என்ற பெயரில் அழைக்கப்பட்டு ஆங்கில உச்சரிப்பில் வேம்பார் என மாறியது என்பர் இவ்வூர் பெரியோர். இதில் வேம்பன் என்ற சொல்லுக்கு பாண்டியன் என்ற பொருள்படுகிறது. ஆக வேம்பனின் ஊர் வேம்பார் எனவும் கொள்ளலாம். வேம்பாற்றில் பாடப்படும் பழம் பாடல் ஒன்றில் 'வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாறெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே' என்னும் வரிகள் காணப்படுவதும் சிறப்புமிக்கது.
2. வேம்பாறு ஊரினை பரத குலத்தோர் நிம்பநகர் என அன்று முதல் இன்று வரை அழைத்து வருகிறார்கள். இதில் நிம்பன் என்பதும் பாண்டியனைக் குறிக்கும் சொல்லாகும். எனவே தான் வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனை நிம்பதாரோன் என அழைப்பர். எனவே நிம்பனின் நகர் நிம்பநகர் ஆகும். நிம்ப என்ற தமிழ் சொல்லிலிருந்தே வேப்பமரத்தை குறிக்கும் NEEM என்ற ஆங்கில சொல் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட காரணங்களின் மூலம் நேரடியாகவே பாண்டியருடன் வேம்பாற்றின் தொடர்பினை அறிய முடிகிறது. எனவேதான் முத்துக்குளித்துறை (தூத்துக்குடி) மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு. ரோச் ஆண்டகை அவர்கள் பெயரிலே சிறந்தது வேம்பாறு எனக் கூறுவார்.
3. அடுத்ததாக இன்று மழைக் காலங்களில் அருப்புக்கோட்டை பகுதியில் பெய்யும் மழையால் கரை புரண்டு ஓடி கடலில் கலக்கும் வேம்பாறு ஆறு. தற்காலத்தில் மழைகாலங்களில் மட்டுமே ஓடும் இந்த ஆறு முற்காலத்தில் தமிழகத்தின் வற்றாத ஆறுகளில் ஒன்றாக விளங்கி மதுரையில் ஓடிய வைகை ஆற்றின் கிளை ஆறாகும். கூடுதல் தகவலாக வைகை ஆறு மதுரையிலிருந்து ஓடி வந்து முதன் முதலாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது வேம்பாறு ஊரின் முகத்துவாரத்திலே. அப்படியானால் வேம்பாறு துறைமுகத்தில் நடைபெற்ற வணிகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ஆற்றுவழிப் பாதை நேரடியாகவே மதுரையோடு தொடர்பு கொண்டிருந்ததும் முக்கியத்துவம் மிக்கது. அக்காலத்தில் தரை வழிப் பயணங்களை விட ஆற்று வழிப் பயணமே பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் இருந்தது.
4. இதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆற்று வழிப்பாதையில் அமைந்துள்ள ஊரான திருமாலுகந்தன்கோட்டையில் காணப்படும் முருகன் கோயில் கல்வெட்டில் அப்பகுதியில் கடல் வணிகம் செய்த வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் எறிவீரர்கள் அடங்கிய குழுக்கள் அவ்வூரில் தங்கி இருந்ததாக தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் காலம் 13 ஆம் நூற்றாண்டு. அக்காலத்தில் இப்பகுதியில் வேம்பாற்றைத் தவிர வேறெங்கும் கடல் வணிகம் நடைபெறவில்லை. வேறேதும் இயற்கைத் துறைமுகம் இப்பகுதியில் அமைந்திருக்கவில்லை. வேம்பாறு ஆறே துறைமுகமாக செயல்பட்டது. இன்றும் கூட மழைகாலங்களில் ஆற்று ஓரங்களில் அக்காலத்தில் நடைபெற்ற வணிகத்தின் சாட்சிகளாய் பாண்டியர் கால நாணயங்கள் கிடைப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. வேம்பாறு ஊரின் பழம் குடிகளான பரத குலத்தோரின் குடியிருப்புகள் அனைத்தும் மற்ற கடற்கரைப் பட்டினங்களைப் போலல்லாமல் ஆற்றை நோக்கியே அமைந்திருப்பதும் கண்கூடு. இலங்கையின் மன்னார் தீவுப் பகுதிகளில் நடைபெறும் முத்துக்குளித்தலை நிகழ்த்த வேம்பாற்றிலிருந்து செல்வது மிகவும் எளிது. வேம்பாற்றுத் துறைமுகமானது கொற்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாய் இருந்தது.
5. வேம்பாற்றில் நடைபெற்ற முத்து வணிகத்திற்கும், கடல் வணிகத்திற்கும் வருகை தந்த அரச குலத்தோரும், பெரும் வணிகர்களும், அரச ஊழியர்களும் தங்கும் இடமாக சேதுபாதையில் அமைந்திருக்கும் சர்ப்ப மடமாகும். இதற்கு சுந்தர தோழர் சத்திரம் எனவும் பெயருண்டு. இதில் குறிப்பிடப்படும் சுந்தர தோழர் என்பவர் சுந்தர பாண்டியனாக இருக்க மிகவும் வாய்ப்புள்ளது. இம்மடத்தில் எந்த கல்வெட்டும் காணப்படவில்லை. ஆனால் இதில் காணப்படும் புடைப்பு சிற்பங்களை வைத்து இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு என அறிய முடிகிறது. தற்போது சிதிலமடைந்து வரும் இக்கட்டிடமானது முற்காலத்தில் பிரமாண்டமான அளவில் இருந்து அழிந்து போனதாகவும், மணல் மூடி மண்ணில் புதைந்து போனதாகவும், பிற்காலத்தில் யாரும் செல்லாமல் போனாதால் பாம்புகள் அதிகமாக காணப்பட்டதால் சர்ப்பமடம் என்றும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
6. தமிழ் வளர்த்த பாண்டிய பேரரசின் தலைநகருடன் நேரடித் தொடர்பில் இருந்ததால் இவ்வூரில் பேசப்படும் தமிழ் மொழியானது மற்ற கடற்கரைப் பட்டினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழின் அச்சுத் தந்தை அன்றிக் பாதிரியார் தொடங்கி தமிழ் வளர்த்த வீரமாமுனிவர், முதலான பல்வேறு கிறிஸ்தவ துறவிகள் வேம்பாற்றில் தமிழ் பயின்றுள்ளனர். உலகத் தமிழ் மாநாடு கண்ட தனிநாயகம் அடிகள் வேம்பாற்றில் அதிக நாள் தங்கி தம் தமிழை செம்மைப்படுத்திய வரலாற்றையும் இவ்வூர் பெரியவர் கூறுவர்.
7. இவை அனைத்தையும் விட முத்தாய்ப்பாய் மதுரையை ஆண்ட மீனாட்சிக்கு மதுரையில் கோயில் எழுப்பியது போல வேம்பனின் நகராம் வேம்பாற்றிலும் பாண்டியர்கள் மீனாட்சிக்கு கோயில் எழுப்பினர். இக்கோயிலானது தற்போதைய சர்ப்பமடத்திற்கு அருகிலேயே அமையப் பெற்றிருந்தது. அங்கு மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் அனைத்துப் பூஜைகளும் வேம்பாற்றிலும் நடைபெற்றது. குறிப்பாக அன்று வேம்பாற்றில் நடைபெற்ற மீனாட்சி அன்னைக்கு வேப்பம்பூமாலை அணிவிக்கும் நிகழ்வு இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா காலங்களில் மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டும் விழாவில் வேப்பம்பூ மாலை அணிவது வழக்கமாக உள்ளது. 1536 ஆம் ஆண்டு வேம்பாற்று பரதர்கள் கிறிஸ்தவ மறையைத் தழுவிய பின்னர் இக்கோயில் கைவிடப்பட்டது. எனவே இங்கிருந்த இரு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிலைகளில் ஒன்று மேல்மாந்தைக்கும் மற்றது விளாத்திகுளத்திற்கும் எடுத்து செல்லப்பட்டு வேம்பாற்றிலிருந்த கோயில் கற்களைக் கொண்டு கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது.
8. இதன் காரணமாக இக்கோயில் கல்வெட்டுகள் அனைத்தும் அழிந்து போனது. பல்வேறு கல்வெட்டு பதிவுகள் கிடைக்காமல் போயின. கிறிஸ்தவம் தழுவிய பின்னர் வேம்பாற்று பரத குலத்தவர்கள் தங்களின் புதிய ஆலயத்தில் நடுநாயகமாக மேரி மாதாவை கொலுவேற்றினர். அம்மேரி மாதாவின் கரங்களில் செங்கோல் ஏந்திய வண்ணம் அமைத்து ‘மரிய செங்கோல் அரசி’ என அழைத்தனர். இந்த அமைப்பு முறை முந்தைய வழிபாட்டின் தொடக்கமாக அமைந்தது.
![]() |
1870ல் மொட்டைக்கோபுரமாக திகழ்ந்த, வடக்கு கோபுரத்தின் தோற்றம் |