சீனிச்சம்பல்
தேவையான பொருட்கள்:
2 கிலோ பெரிய வெங்காயம்
4 தேக்கரண்டி நொருக்கிய வத்தல் மிளகாய் தூள்
50 கிராம் மாசிக்கருவாட்டுத்தூள்- சைவமாக செய்ய விரும்புபவர்கள் மாசிக்கருவாட்டை தவிர்க்கவும்.
3 மேகரண்டி சீனி
1 துண்டு கறுவாப்பட்டை
15 ஏலக்காய்
10 கராம்பு
கருவேப்பிலை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
150 மில்லி எண்ணை
செய்முறை:

ஏலக்காயின் தோலை நீக்கி கறுவா, கராம்பு இவற்றுடன் சேர்த்து தூளாக்கி வைக்கவும்.
ஒரு பெரிய சட்டியில் 100 மில்லி எண்ணையை விட்டு சூடாக்கி அதனுள் வெட்டிய வெங்காயத்தைப் போட்டு மெல்லிய சூட்டில் வதக்கவும். அடிக்கடி வெங்காயத்தை கிளறி விடவேண்டும்.
சிறிது நேரம் 5 நிமிடம் அளவில் பாத்திரத்திரத்தை மூடி போட்டு மூடி வைத்து வெங்காயத்தை வதங்கி அவிய விடவும். பின்பு மூடியை அகற்றிவிடவும். அப்பொழுது வெங்காயத்தின் நடுவில் தண்ணீர் சிறிது சேர்ந்து இருக்கும். அந்த நீர் வற்றும்வரை அடிக்கடி வெங்காயத்தைக் கிளறி வதங்கவிடவும்.
தண்ணீர் இல்லாமல் வதங்கிய பின்பு அதனுள் முதலில் 4 தேக்கரண்டி நொருக்கிய செத்தல் தூள், கறுவா, ஏலம் கலந்த தூள் இவற்றைச் சேர்த்து வதங்கவிட்டு பின்பு மாசிக்கருவாட்டுத்தூள். மீதமுள்ள 50 மி.லி எண்ணை இவற்றைச் சேர்த்துக்கலந்து வதங்கவிடவும்.
வெங்காயத்தில் உள்ள நீர்த்தன்மை குறைந்து நன்றாக பொரிந்து வரும் பொழுது 3 தேக்கரண்டி சீனியையும் பின்பு கருவேப்பிலையையும் சேர்த்துக் கலந்து நன்றாக வதங்கவிடவும். நன்றாக வெங்காயம் அவிந்து வதங்கிய பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு போத்தலில் போட்டு அடைத்து வைத்துப் பாவிக்கவும்.