வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 21 September 2019

ADAM BRIDGE Vs ADAM BEACH
கடந்த ஆண்டு எங்கள் வண்டி தனுஷ்கோடியைத் தாண்டி அரிச்சல் முனை நோக்கி விரைந்து கொண்டிருந்தது, அதிக வாகனங்கள் இல்லை. சாலையின் இருமருங்கிலும் ஆங்காங்கே வெள்ளை நிறப் பாறைத் துண்டுகள் வித்தியாசமாகத் தென்பட்டன. பவளப் பாறைகளாக இருக்குமோ. இறங்கிப் பார்த்தேன், ஆம். பவளப் பாறைகள்தான். அலைகளில் அலைக்கழிக்கப்பட்டு இந்த கடலோர சாலையில் ஒதுங்கியிருக்கின்றன. அப்படியென்றால் இங்கே வெகு அருகில் பவளப்பாறை தீவுகள் இருக்கவேண்டுமே.

பவளப்பாறை என்பது உண்மையில் பாறை அல்ல. CORAL (பவளம்) எனும் கடல்வாழ் உயிரினத்தின் தொகுப்புகளால் அமையப் பெற்ற சுண்ணாம்புக் கூடு (Calcium carbonate nests formed by coral colonies). இந்தியாவைப் பொறுத்தவரை, இராமேஸ்வரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் பவளப்பாறை தீவுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. பவளப்பாறைகள் வளர ஏற்ற இயற்கை சூழல் இங்கே நிலவுகிறது. மொத்தம் 21 தீவுகள் உள்ளன
சுமார் 160 கி.மீ நீளத்திற்கு சங்கிலித்தொடர் போல் அமைந்திருக்கும் இந்தத் தீவுகள் அனைத்தும் கடற்கரையிலிருந்து 10 கி.மீ. தொலைவிற்குள்ளேயே அமைந்துள்ளன. மிகச் சிறிய தீவு 0.25 ஹெக்டேர் (0.62 ஏக்கர்) பரப்பளவிலும் மிகப்பெரிய தீவு 130 ஹெக்டேர் (321.2 ஏக்கர்) பரப்பளவிலும் காணப்படுகிறது. தீவுகளின் மொத்தப் பரப்பளவு 6.23 ச.கி.மீ. இந்தப் பகுதி நடுவண் அரசால், பாதுகாக்கப்பட்ட உயிரியல்மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பவளப்பாறைகள் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்வதால் இவை FRINGE REEF என அழைக்கப்படுகின்றன. BARRIER REEF, ATOLL போன்றவை கடலின் வேறு பகுதியில் வாழும் பவளப் பாறைகள்.

இதுகாறும் நாம் பார்த்தது மன்னார் வளைகுடாவின் வடமேற்குக் கரையில் துத்துக்குடிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பகுதி. இதை அப்படியே விட்டு விட்டு மன்னார் வளைகுடாவின் கிழக்குக் கரைக்குப் போவோம் வாருங்கள். இங்கே இலங்கைத் தீவின் மேற்குக் கரையில் தலைமன்னார், மன்னார் போன்ற பகுதிகளிலும் இதற்குத் தெற்கேயும் FRINGE REEF வகை பவளப்பாறைத் தீவுகள் காணப்படுகின்றன. அங்கே தூத்தக்குடி –இராமேஸ்வரம் பகுதியில் உள்ளது போன்ற அதே அமைப்பு. மேற்குக் கரையிலும் அதே; கிழக்குக்கரையிலும் அதே. இரண்டையும் இணைக்கும் இடைப்பட்ட பகுதியைப் பார்ப்போமா.

இதுதான் ஆதம் பாலம்:

இந்தப் பகுதியில் தொலையுணர்வு தொழில்நுட்பதின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டINDIAN SPACE RESEARCH ORGANISATION - ISRO வின் SPACE APPLICATION CENTER (SAC),சுமார் 30 கி.மீ நீளமுள்ள ஆதம் பாலத்தில் 1௦3 பவளத் திட்டுகள் காணப்படுவதாக தெரிவிக்கிறது. திட்டைகள் என அழைக்கப்படும் இந்தத் திட்டுகள் மணல்மேடுகளாகவே காட்சி அளிக்கின்றன.

Project: RAMESWARAM எனும் பணியின் கீழ், 2002-03 ஆம் ஆண்டுகளில் ஆதம் பாலம் பகுதியில் விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட GEOLOGICAL SURVEY OF INDIA, இராமேஸ்வரம் தீவு சுமார் 1,25,000 ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. Thermo Luminescence முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இங்குள்ள மணல் மேடுகள் சுமார் 600 – 700 ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மணல் மேடுகள் அமைந்துள்ள பூகோள அமைப்பு மற்றும் இந்த மணலில் கலந்து கிடக்கும் பவளப்பாறைத் துண்டுகள் இவற்றின் அடிப்படையிலும் இந்த மணல்மேடுகள் பவளப்பாறை திட்டுகளை மூடியுள்ள மேடுகள் என அறியலாம்.

தூத்துக்குடிக்கு அருகேயுள்ள வான் தீவில் துவங்கும் பவளத் தீவு சங்கிலித் தொடர் இராமேஸ்வரம் அருகேயுள்ள குருசடைதீவோடு நின்றுவிடவில்லை. அது தொடர்ந்து ஆதம்பால பவளத்திட்டுகள் வழியே இலங்கை தலை மன்னாரை அடைந்து அங்கிருந்து இலங்கையின் மேற்குக் கரை ஓரம் மன்னார் தென் பகுதியில் நீள்கிறது.

சரி, விஷயத்திற்கு வருவோம். தூத்துக்குடி – இராமேஸ்வரம் பகுதியில் பவளத் தீவுகளுக்கு மேற்கே தமிழக நிலப்பரப்பு உள்ளது. மன்னார் பகுதியில் பவளத் தீவுகளுக்குக் கிழக்கே இலங்கையின் நிலப்பரப்பு உள்ளது. இதே Fringe Reef வகையைச் சேர்ந்த ஆதம்பாலம் பவளத்திட்டுகளுக்கு வடக்கே ஏன் நிலப்பரப்பு இல்லை. இருந்தது. இருந்திருக்க வேண்டும். அது தற்போது பாக் நீரிணையின் கீழ் மூழ்கிக் கிடக்கிறது. அப்படியானால், பாக் நீரிணை இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நிலப்பரப்பாக இருந்தபோது, அதன் தெற்கு குக் கரையாக ஆதம் பாலம் அமைந்திருந்திருக்கும். ஆம், இன்றைய ADAM BRIDGE, அன்றைக்கு ADAM BEACH ஆக இருந்திருக்குமோ...

இது ஒரு கருத்துதான்.....முடிவு அல்ல. 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com