திருப்புல்லாணி – உத்திரகோச மங்கை

“......பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்
பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே“ 1769
“....தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம்,
புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே ” 1772
”....பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே” 1780
திருமங்கை ஆழ்வார் தன் பாசுரங்களில் முந்நீர், பவ்வம், புணரி எனும் சொற்களால் கடலை வர்ணனை செய்கிறார். திருப்புல்லாணிக் கடற்கரையில் அலைகள் முத்துக்களையும் சங்குகளையும் கொண்டு வந்து சேர்த்தனவாம். அங்கே கடற்கழிகளும், கானலும், புன்னைக் காடுகளும் இருந்தனவாம். இவற்றின் மூலம் அவர் பாடிய காலத்தில், அதாவது எட்டாம் நூற்றாண்டில், திருப்புல்லாணி, கடற்கரையில் இருந்தது என்பது வெள்ளிடைமலை. (திருக்கோவிலின் முகப்பில் இருக்கும் மண்டபத்தில் உள்ள தூண்கள் கடற்கரையோரத்தில் அண்மையில் உருவான பாறைகளால் ஆனவை).
இன்று திருப்புல்லாணிக்கும் கடற்கரைக்கும் இடையே உள்ள தூரம் 4.5 கி.மீ. 1200 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளின் போது இந்த ஊர் வரை அல்லது இன்னும் வடக்கே கடல் பரவியிருந்திருக்கிறது இந்தப் புவியியல் வரலாற்று உண்மையை நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்.நமக்குக் காட்டுகிறது.
இங்கிருந்து வடமேற்கு திசையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள உத்திரகோசமங்கை அருகேயும் கடல் இருந்ததா எனும் வினா நம்முள் எழுகிறது. தேவாரத்தில் இந்தத் தலம் இடம் பெறவில்லை. திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பத்தில் உள்ள 50 பாடல்களும், உத்திரகோசமங்கையில் பாடப்பட்டவை. ஆனால் ஒன்றில் கூட இத்தலத்தின் புவியியல் அமைப்பு பற்றிய குறிப்புக் கிடைக்கவில்லை.
ஆயினும், உத்திரகோசமங்கையைப் பற்றி இணையத்தில் காணப்படும் குறிப்புகள் அனைத்திலும்,
“ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதும்காண் அம்மானாய்!’
என்று மணிவாசகர் அண்ணாமலையில் இருந்து கொண்டு பாடியது இங்கே நடந்த நிகழ்வு பற்றித்தான்.” எனும் செய்தி காணப்படுகிறது.
“திருவிளையாடற் புராணத்தில் 57 ஆவது படலமாக வரும் வலை வீசிய திருவிளையாடல் நிகழ்வு, உத்திரகோசமங்கையில்தான் நிகழ்ந்தது, புராண காலத்தில் கடல் இங்கே இருந்தது, பின்வாங்கி, பின்வாங்கி தற்போது ஏர்வாடிக்குச் சென்றுவிட்டது, இங்கே கோவிலிலுள்ள திருக்குளத்தில் இன்றும் உப்புத் தண்ணீர்தான் உள்ளது. இந்தக் குளத்தில் வாழும் மீன் இனங்கள் யாவும், உவர் நீரில் வாழக்கூடியவையே, கடல் இங்கே இருந்தது என்பதற்கு இவையே சான்று” என்று புராணீகர்கள் சொல்லி வருகிறார்கள்.
புராணம் உண்மையா அல்லது கற்பனையா என்பது பற்றி நாம் இங்கே பேசப் போவதில்லை. இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டு, அந்நாளில் கடல்கோள் நிகழ்ந்ததா இல்லையா என அறிவதே நம் நோக்கம். கடந்த ஆண்டு, இந்த ஊருக்குப் போயிருந்தபோது, மக்கள் “திருக்குளத்தில் இன்றும் உப்புத் தண்ணீர்தான் உள்ளது” என்றார்கள்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொலையுணர்வுத் துறை வல்லுநர் பேராசிரியர் இரமேஷ் அவர்கள், இந்தப் பகுதிக்கான புவி அமைப்பியல் வரைபடம் ( Geomorphological map based on remote sensing data with limited field checks) ஒன்றை அனுப்பியிருக்கிறார். பேராசிரியருக்கு நன்றி.
இந்தப் படத்தில், திருப்புல்லாணி பகுதியில் அந்நாள் கடற்கரை முகடுகள் (BEACH RIDGES) காட்டப்பட்டுள்ளன. மேலும், திருப்புல்லாணிக்கு வடக்கே சில கி. மீ. தூரத்தில் PALAEO LAGOON காட்டப்பட்டுள்ளது. கடல் ஓரிடத்தில் உயர்ந்து பின் தாழும்போது உருவாகும் நீர்நிலையே LAGOON, தமிழில் காயல் என்கிறோம். மேலும் உத்திரக் கோச மங்கையருகே, உப்பளங்களும் உள்ளன. இவற்றின் வாயிலாக, கடல்கோளின் போது, இந்தப் பகுதியி கடல் 7 கி.மீ. அகல நிலப்பரப்பை தன் கீழ் கொண்டது என அறியலாம்.