வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 7 September 2019

வடம் பிடித்தவர்கள் தடம் பதித்த வரலாறு
தேர் இழுத்தல், சப்பரம் தூக்குதல், வெட்டம் போடுதல், குடைபிடித்தல், பரிவட்டம் கட்டுதல், கும்பிடுசேவை, நேர்ச்சை பொன்றவைகள் கத்தோலிக்க திருமறையால் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இவைகள் திருச்சபையின் சடங்குகள் என்று எண்ணிவிடலாகாது. மேற்கண்ட நிகழ்வுகள் ஒரு இன அடையாளம் என்பதை மாத்திரம் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தகைய நடைமுறைகளைச் சிதைப்பதுவும், தடுத்து நிறுத்துவதும், தடை செய்வதும் தொன்றுதொட்டு தொடர்ந்த பாரம்பரிய வரலாற்றின் தடை கற்களாகும். கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வேரறுப்பதாகும். இவ்விதமே திருமறை தழுவிய பின் தம் முன்னோர்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை உணர்தல் வேண்டும்.

1713-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் நாளன்று இயேசு சபை மாநிலத்தலைவர் எம்மானுவேல் பெரைறா அவர்கள் ஏழு குருக்களுடன் தூத்துக்குடி பனிமய அன்னையின் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது என்ற குறிப்பு இயேசு சபை ஆவணத்தில் காணமுடிகிறது. 1714 முதல் தூத்துக்குடி மக்களுக்கு முறைப்படி பங்குகோவிலாக அறிவிக்கப்பட்டு ‘பெரிய கோவில்’ என்று பிரபலமானது. முன்னூறு ஆண்டுகால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டு தலைமுறை தலைமுறையாக விசுவாச சான்றாக நிற்கிறது.

சிஞ்ஞோர் தொன் கபிரியேல்
தெக்குரூஸ் வாஸ் கோமஸ்
 
1779-1808 கால அளவு பரதகுல சிம்மாசனத்தை அலங்கரித்த தொன்கபிரியேல் தெக்குருஸ் பரத பாண்டியன் அன்னையின் அருளால் கிடைக்கப்பெற்ற முத்துசிலாபம், கடல் வணிகம், சிறப்பான மீன்பிடித்தல் வருவாய், பிணக்கற்ற சமூக உறவினை மனதிற் கொண்டு அன்னைக்கு ஒரு அற்புதத்தேரை உருவாக்க எண்ணினார். மறைபோதகர்களிடம் உரிய அனுமதி பெற்று கடற்றுரை பரதகுல மக்களிடமும் கலந்து பேசி இன்று நாம் காணும் அற்புதத் தேரை தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னைக்கு உருவாக்கினார். 1805 ஆண்டுஅன்னையின் 250 ஆண்டு நிறைவை மனதிற்கொண்டு தெர்வலம் வர எத்தனித்தபோதும், தேர் வேலைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு பெறாததால் 1806-ஆம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 2-ம் நாள் அக்கோமான் வடம் பிடிக்க பொற்றேர் வலம் வந்தது. முறையே 1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982, 2000, 2007 ஆகஸ்ட் 5-ம் நாள் அன்னையின் உற்சவ பெருவிழாவின் போது உலா வந்தது. 1806 முதல் 1947 வரை சாதித் தலைவர் வடம் பிடிக்கும் நிகழ்வு இருந்தது. ஏனெனில், தொன்று தொட்டு தேர்வடம் பிடிப்பதுவும், துவேஜ மரியாதை பெறுவதும் மரபாக இருந்து வந்துள்ளது.

‘மாபரத்தி சிறு பெண்ணாத்தாள்’ மதுரை மீனாட்சிக்கு தேர் ஓட்டி வடம் பிடித்த குலசேகர பரத பாண்டியன், என்ற வரலாற்றுக் குறிப்பும், கி.பி.18-ம் நூற்றாண்டு வரை மச்சான்சாமி முருகன் தேர் வடம் பிடித்த சான்றுகளும், உத்திரகோசமங்கையில் கற்றேர் ஓட்டிய பரதவர்கள் என்ற செவிவழி செய்தியும் காளையாவூர் என்ற கல்யாண வைபவ கட்டியமும் மரபை உறுதி செய்கிறது.

1806 ஆம் ஆண்டு தேர்வலம் வரக்காரணமாயிருந்த தொன் கபிரியேல் தெக்குருஸ் பரதபாண்டியன் “தேர்மாறன்” என்ற சிறப்பினைப் பெற்றான். அன்னையின் தங்கத்தேர் அன்று முதல் இன்று வரை அன்னையின் மங்கள மாலையாம் ஜெபமாலையை நினைவிற்கொண்டு 53 அடி உயரம் கொண்டது. அன்னையின் தேர் திருச்சபையின் போதனைக்கு உட்பட்டு மாதாவின் மகிமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விடியலின் வெளிச்சம் மீட்பின் முன்னோடி என்பதை மெய்ப்பிக்க உச்சியில் உதய தாரகையும் பரிசுத்த ஆவியின் கொடைகளை மெய்ப்பிக்க ஏழுகதிர்களும், சுழலும் விண்மீன்களூம், விண்ணவர்க்கரசி, மண்ணவர்க்கரசி என்பதை நினைவூட்ட மகுடமும், பிதாவின் குமாரத்தி என்பதற்காக பிதாவின் இருக்கை பீடமும், பன்னிரு கோத்திரங்களை நினைவுபடுத்தும் வகையில் பன்னிரு தூண்கள் தாங்கி நிற்கும் பீடமதில் சாதனை கரமேந்தி சுதனின் தாய் அமர்ந்திருப்பதும், அதற்கு மேலாக பரிசுத்த ஆவியின் பத்தினி இவள் என்பதை எடுத்துக்காட்ட புறாவடிவில் பரிசுத்த ஆவியும் உள்ளார்கள்.

மன்னருக்கு மன்னரான மாபரனை தந்தவள் என்பதால் விவிலியம் காட்டும் பன்னிரு வேந்தர்களும், வேத சாட்சிகளின் திட தைரியமானவள் என்பதால் வேதசாட்சிகளும், பரிசுத்தவான்களின் முன்மாதிரிகை என்பதால் புனிதர்களும், நற்செய்தியாளர்கள் கண்டு பாவித்த நற்செய்தி இவளென்பதால் நான்கு நற்செய்தியாளர்களும், சம்மனசுகளின் இராக்கினி இவள் என்பதால் வானதூதர்களும் தேரில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இவைகளோடு இன அடையாளமான திருமாலின் மச்ச அவதார புருஷர்கள் மீனவர் என்ற பரதவர்கள் எண்பிக்க இரண்டு கடல் கன்னியரும், இரண்டு காளையரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் தாய் வழிபாடுமிக்க பரதவர்கள் அங்கயற்கண்ணியின் அடையாளமாக நான்கு கிளிகளும் உள்ளன.

- ப. பீற்றர் பிரான்சிஸ்

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com