வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 21 September 2019

கொற்கைத் துறைமுகம்
தென்தமிழகத்தில், வரலாற்றுக் காலத்தில் கடல்கோளின் போது சுமார் பத்து கி.மீ. வரை, கடல் நிலப்பகுதிக்குள் சென்று அதன்பின், பின் வாங்கியதற்கான சான்று கொற்கைப் பகுதியில் தென்படுகிறது. கொற்கை சங்க காலத்தில் ஒரு கடற்கரைப்பட்டினமாக இருந்தது என்பதற்கு இலக்கியத்தில் பல்வேறு சான்றுகள் உள்ளன.
அவற்றில் சில:

ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை - நற்றிணை 23

கொற்கை முன்றுறை இலங்கு முத்து உறைக்கும் - ஐங்குறுநூறு 185.

நற்கொற்கையோர் நசைபொருந - மதுரைக்காஞ்சி 138

புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை - அகம் 130-11

பல்மீன் கொள்பவர் முகந்த இப்பி நார் அரி நறவின் மகிழ்நனைக் கூட்டும் - அகம் 296-10

வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள - அகம் 350-13

நளிநீர் முத்தம் வாள் வாய் எருத்தின் வயிற்று அகத்து அடக்கி – உமட்டியர் – புதல்வரொடு கிலிகிலி ஆடும் - சிறுபாணாற்றுப்படை 62

கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போல – கண் - ஐங்குறுநூறு 188

வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன நகை - அகம் 27-9

புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணி பொலிந்த – பழையர் மகளிர் பனித்துறை பரவ - அகம் 201-4

பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொன்ற தன் குற்றத்தை உணர்ந்து உயிர் துறந்த பின்னர் கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் என்பவன் மதுரை வந்து அரியணை ஏறினான். (சிலப்பதிகாரம் காதை 27 உரைபெறு கட்டுரை)

பாண்டிய மன்னர்களின் துறைமுக நகரமாகத் திகழ்ந்த கொற்கை தற்போது 7 கி.மீ. உள்தள்ளி யுள்ளது. இதன்மூலம் சங்க காலத்திற்கும் தற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தப் பகுதியில் கடல் ஏழு கி.மீ. பின்வாங்கியுள்ளது என அறிய முடிகிறது.

கொற்கை – மண்டபம், கொற்கை – கன்னியாகுமரி இவற்றிற்கு இடைப்பட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மணல்மேடுகளும், நில அமைப்பும் இவ்விடங்களில் கடல் 7 – 10 கி.மீ. உள் சென்றிருக்கலாம் என உணர்த்துகின்றன.


மேற்சொன்ன தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது சுமார் ஆறாயிரம் அல்லது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டின் கடற்கரையில் பெரும்பாலான் பகுதிகளில் (எல்லா இடங்களிலும் இருக்கக்கூடும்- ஆனால் தரவுகள் போதாது) கடல் நீர் 7-9மீ. வரையிலும்,(வட தமிழ்நாட்டில் புலிகாட் பகுதியில் 18மீ. வரையிலும் கோடியக்கரை பகுதியில் 35மீ. வரையிலும்) நிலப் பகுதியில் முன்னேறி சென்றிருக்கிறது என்பது திண்ணமாகிறது. அதாவது பல நூறு சதுர கி..மீ. பரப்பளவுள்ள நிலம் கடலுக்கு அடியில் சென்றுவிட்டது.(அந்த நிலம் இப்போது மீண்டு விட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) ஆனால் நாம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது “இது ஒரு நாளிலோ ஒரு ஆண்டிலோ அல்லது பத்து ஆண்டுகளிலோ நடந்தது அல்ல. பல நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு.” 

கடந்த 18000 ஆண்டுகளில் நிகழ்ந்த இந்த மாற்றங்கள் “ “HOLOCENE SEA LEVEL CHANGES” என்று அறியப்படுகின்றன. “ஹோலோசீன் கடல்மட்ட மாற்றங்கள்” என நாம் அழைக்கலாம். இப்போது முதல் 18000 ஆண்டுகள் முன்பு வரை இருந்த காலம் புவி வரலாற்றில் “ஹோலோசீன்” காலம் என்று அழைக்கப் படுகிறது. ஆக, ஓத அலைகளாலோ, புயல் அலைகளாலோ, சுனாமியலைகளாலோ ஒரு பெரும் நிலப்பரப்பை விழுங்க இயலாது. மாறாக நீண்டகாலப் போக்கில் நிகழும் கடல்மட்ட ஏற்றம் , கடல்மட்டத்திலிருந்து ஒருசில மீ. உயரமேயுள்ள பெரும் நிலப்பரப்பை ஆக்ரமிக்க முடியும் என்பது தெளிவாகிறது.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com