வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 30 March 2024

பாளையக்காரனை வதம் செய்த பரதவர்


கி.பி. 1602ல் விஜயநகர நாயக்கர்களின் திருநெல்வேலி பாளையக்காரனை கொலை செய்த பரதவர்கள்...!

ஸ்ரீ வீர ரவி வர்மா (1594-1604) எனும் திருவிதாங்கூர் அரசன், விஜயநகரப் பேரரசு பிரதிநிதிகளாக மதுரையில் இருந்த நாயக்கர்களுக்கு கப்பங்கட்ட மறுத்ததையடுத்து, அவனை அடக்கி கப்பத்தொகையை வசூலிக்க கி.பி. 1596 ஆம் ஆண்டில் 70,000 போர் வீரர்கள் மற்றும் யானைப்படைகளுடன் மதுரையை விட்டு புறப்பட்டு திருநெல்வேலி வந்திருந்தார் இரண்டாம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர்(1595-1601). 

அப்போது திருநெல்வேலியில் தனது அதிகாரத்திற்கு வெளியே இருந்த பரதவர் சமூகத்தவர்களை கண்டு, முதற்கட்டமாக மணப்பாடுக்கு தெற்கே அவர்கள் வாழக்கூடிய 12 கிராமங்களை அடக்கி, ஆண்டுதோறும் வரிவசூல் செய்து வர ஆரியப்பெருமாள் என்பவனை விஜயாபதி என்னுமிடத்தில் பாளையக்காரனாக நியமிக்கிறார் இரண்டாம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர். 

ஆரியப்பெருமாளும் 12 ஊர் பரதவர்களை தற்காலிகமாக அடக்கி அவர்களுடைய விஜயாபதி நகரிலே தனக்கு ஓர் அரண்மனை கட்டிக்கொண்டும், படைவீரர்களுக்கு குடியிருப்புகள் அமைத்தும், அந்நகரை சுற்றி கோட்டை, அரண் எழுப்பியும், அக்கோட்டையை சுற்றிலும் அகழியும் அமைத்தான். ஆரியப்பெருமாளின் வரிவிதிப்பை பரதவர்கள் எதிர்த்தனர். 

பரதவர்கள் மீது கோபமடைந்த ஆரியப்பெருமாள் தனது படைகளுடன் விஜயாபதி கோட்டையை விட்டு வெளியேறி உவரி என்னும் பரதவர் கிராமத்தை எந்தவொரு முன்னறிவிப்பின்றி முற்றுகையிட்டு தாக்கி அங்குள்ள கோவிலை இடித்து தரைமட்டமாக்கி, வீடுகளை சேதப்படுத்தி, மக்களை கைது செய்து விஜயாபதிக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தான். 

ஆரியப்பெருமாளின் இக்கொடியச் செயலை கேள்வியுற்று அவனை பழிதீர்க்க மணப்பாடு பரதவர்கள் ஆயுதமேந்த முடிவு செய்தனர். இதன்படி கி.பி. 1602ல் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் மணப்பாடு பரதவர்கள் முன்னூறு பேர் நன்கு ஆயுதமேந்தி ஆறு பிரிவுகளாக பிரிந்து அங்கிருந்து விஜயாபதி நோக்கி புறப்பட்டனர். அம்முன்னூறு பரதவர்களுள் நூறு பேர் மாத்திரமே விஜயாபதி கோட்டையை முதலில் நெருங்கினர். 

நேரத்தை வீணடிக்காமல் அந்நூறு பரதவர்களும் ஆரியப்பெருமாள் அஞ்சும்படி அகழியை கடந்து அவன் கோட்டைக்குள் புகுந்து அப்பாளையக்காரனின் படைவீரர்கள் உட்பட நகரவாசிகள் அனைவரையும் இரக்கமின்றி கொன்று குவித்தனர். பரதவர்களின் இந்த அதிரடி தாக்குதலில் தனது படைவீரர்கள் அனைவரையும் இழந்த ஆரியப்பெருமாள் அரண்மனையை விட்டு வெளியேறி நகரிலே அமைந்துள்ள ஒரு வீட்டினுள் சென்று ஒளிந்து கொண்டான்.

பரதவர்களிடம் பிடிபட்ட ஆரியப்பெருமாள் தன்னை உயிரோடு சிறை கைதியாக மணப்பாடுக்கு கொண்டு செல்லும்படி கெஞ்ச, அவனது கோரிக்கை மறுக்கப்பட்டு பரதவர்கள் ஆரியப்பெருமாளை கண்டதுண்டமாக வெட்டி தலையை கொய்து மணப்பாடுக்கு போரிலே வெற்றி பெற்ற அடையாளமாக கொண்டு வந்தனர். 

விஜயாபதி மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில் எந்தவொரு பரதகுல நாயகர்களின் உடலிலும் வெட்டுக்காயம் இல்லை என்று இப்படையெடுப்பை பற்றி விவரிக்கும் ஏசுசபை பாதிரியாரின் கடிதம் பதிவு செய்துள்ளது கூடுதல் சிறப்பு.

மேற்கூறிய தகவல் அனைத்தும் தமிழகம் வந்திருந்த பிரஞ்சு ஏசுசபை பாதிரியார் "லியோன் பெஸ்சி" அவர்கள் தனது ''லா மிஷன் டு மதுரா'' என்னும் நூலில் பக்கம் எண். 404-8ல் பதிவு செய்தவைகளாகும். 

००००००००००००००००००००००००००००००००००००००००
ஆதாரம்:-
la Mission du Madure. Historique de ses Pangous-French Jesuit Father BESSE Leon S.J.;Page 407-8,

திருநெல்வேலி வரைபடத்தில் விஜயாபதி





Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com