பரதவரின் படைபலம்
பரதவர்களின் பழமையான நாட்டமைப்பு & படைபலம்:
(விசுவநாத நாயக்கருக்கு முன்)
கி.பி. 1529 முதலே விசுவநாத நாயக்கர், விஜயநகர பிரதிநிதியாக மதுரையில் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் திருநெல்வேலி அவருக்கு கட்டுபட்ட பகுதியாக இருக்கவில்லை. கி.பி. 1550 மேல் தான் திருநெல்வேலியை விஜயநகர படை உதவியுடன் தனது கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வருகிறார். விசுவநாத நாயக்கரின் ஆட்சி திருநெல்வேலியில் ஏற்படும் முன்னரே அங்கு பரதவர்கள் நாட்டமைப்பு, படை பலத்துடன் இருந்ததை பற்றி ஆதாரத்துடன் காண்போம்.
திருநெல்வேலியில் கூட்டப்புளி முதல் வேம்பார் வரையிலான கிராமங்களை உள்ளடக்கியதே பரதவர் நாடு..!
பரதவர் நாடு பற்றி போர்சுகீசியரின் குறிப்பு:-
"மனுவேல் டி மொரையஸ் என்னும் போர்சுகீசியர் கி.பி. 1549 ஜனவரி 3 ஆம் தேதி தான் எழுதிய கடிதத்தில் இந்நிலப்பரப்பை பரதவர் ராஜ்யம் என்றே தான் பதிவு செய்கிறார்" முத்துக்குளித்தலுக்கு இந்நாடு உலகபுகழ்பெற்று விளங்கியதால் பரதவர் நாட்டை மேலைநாட்டு ஆவணங்களில் "முத்துக்குளித்துறை" என்றும் பதிவு செய்திருப்பதை நாம் காணலாம்.
பரதவர்களின் நாட்டமைப்பு பற்றி ஸ்பெயின் நாட்டவரின் குறிப்பு:-
கி.பி. 1542ல் பரதவர் நாட்டுக்கு வந்திருந்த ஸ்பானிஷ் மிஷனரி பிரான்சிஸ் சேவியர் தனது குறிப்பில்.....
"பரதகுல கிராமங்கள் தனி அரசாங்கத்தை கொண்டிருக்கிறது, அங்கு மன்னர்களின் தலையீட்டின்றி முழு அதிகாரமிக்கவர்ளாக பரதகுல தலைவர்களே இருக்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார்.
பரதவர்களின் படைபலம்:-
நாடாளும் நட்பு அரசுகள் தங்களது போருக்கு வீரர்கள் தேவைப்பட்டால் பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களை தயார் செய்யும் கட்டமைப்பிலிருந்தது இந்த பரதவர் நாடு.
எடுத்துக்காட்டாக ....
கி.பி. 1478ல் சிங்கை பரராசசேகரன் என்பவர் யாழ்ப்பாணத்து மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இம்மன்னர் முதல் மனைவி இராசலட்சுமியம்மாள் மூலமாக சிங்கவாகு, பண்டாரம் என்னும் இரண்டு பிள்ளைகளையும், இரண்டாவது மனைவி வள்ளியம்மை மூலமாக பரநிருபசிங்கம் என்னும் பிள்ளையும், மற்றொரு பெண் மங்கத்தம்மாள் மூலமாக சங்கிலி என்னும் குமாரனையும் பெற்றார்.
முதல் மனைவியின் மூத்த மகன் சிங்கவாகுவை சங்கிலி விசம் வைத்து கொன்று விட்டான். முதல் மனைவியின் இரண்டாவது மகன் பண்டாரத்தையும், அவரின் இரண்டாயிரம் ஆதரவாளர்களையும் சங்கிலி வாளால் வெட்டி கொன்றான்.
இரண்டாவது மனைவியின் மகனான பரநிருபசிங்கத்திடம் அதிகார பங்கீடு செய்து கி.பி. 1519ல் தனது ஆட்சியை தொடங்கினான் சங்கிலி. இது வெகுநாட்கள் நீடிக்கவில்லை, சீக்கிரமே யாழ்ப்பாண அரசை தனக்கென வைத்து கொண்டான் சங்கிலி. கி.பி. 1546ல், பரநிருபசிங்கம் தனது குடும்பம், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் போர்சுகீசியர்களிடம் தஞ்சம் அடைந்தார்.
போர்சுகீசியர்களோ திருநெல்வேலியில் படை பலத்துடன் திகழ்ந்த பரதவர் நாட்டு தலைவர்களிடம் உதவி வேண்டி ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினார். முடிவில் யாழ்ப்பாணத்தை சங்கிலியிடமிருந்து கைப்பற்றி முறையான வாரிசான பரநிருபசிங்கத்திடம் ஒப்படைப்பதற்க்காக 10,000 போர்வீரர்களை தங்களுக்கு கீழ் திரட்டத் தயார் என்று பரதகுல தலைவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பரதகுல தலைவர்களின் அறிவுறுத்தலின்படி செப்டம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து செல்ல போர்சுகீசிய பேரரசு முடிவு செய்தது..!
இப்படி பழமையான நாட்டமைப்பு முறை, படைபலம் போன்றவை எல்லாம் விசுவநாத நாயக்கர் திருநெல்வேலியில் கால்பதிக்கும் முன்னரே பரதவர்கள் கொண்டிருந்தனர்.
----------------------------------------
ஆதாரம்:
1. St. Fransis Xavier His life, His times Vol 3
By Father George Schurhammer Page 334, 371
2. St. Fransis Xavier His life, His times Vol 2 by Father George Schurhammer Page 307