பாண்டி நாட்டில் நாயக்கர்
பாண்டி நாட்டில், மதுரை நாயக்கர்களின் ஆட்சி முறை:
மதுரையில் நாயக்க அரசை உருவாக்கிய விஜயநகர பிரதிநிதி விசுவநாத நாயக்கர்(கிபி1529-63), பாண்டி நாட்டு பகுதிகள் சிலவற்றை 72 பாளையங்களாக பிரித்து, அதனை 72 பாளையக்காரர்களின் கீழ் கொடுக்கிறார். இதனை பற்றி பழங்கால தமிழ் ஓலைச்சுவடி ஒன்றும், கி.பி.1611 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஏசுசபை பாதிரியாரின் கடிதமும் நமக்கு சான்று பகர்கின்றன.
விசுவநாத நாயக்கர் மதுரையிலே 72 கொத்தளங்களோடு கூடிய உட்கோட்டை சுவரையும், புறக்கோட்டை சுவரையும் உருவாக்குகிறார். போர் சமயங்களில் 72 பாளையக்காரர்களுமே தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கொத்தளங்களிலே பொறுப்பேற்று அதனை எதிரியின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க கடமைபட்டவர்களாகும்.
பாளையக்காரர்களின் அரசாங்கம்:-
பாளையக்காரர்கள் தங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் காவல், நிர்வாகம், நீதிபரிபாலணை, வரி வசூல் ஆகியவை செய்து வந்தனர். வசூல் செய்த பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை நாயக்கர்களுக்கு வரியாக செலுத்திவிட்டு மற்றொரு பகுதியை படைகள் வைத்திருக்கவும், மீதமுள்ள பணத்தை தங்களது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தினர்.
பாளையக்காரர்களுக்கு கீழ் கொடுக்கப்படாத பகுதி சர்கார் நிலங்களாக இருந்தது, இங்கு வரிவசூல், நீதிபரிபாலணை ஆகியவற்றை செய்ய நாயக்கர்களால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவ்விரண்டு நிர்வாக முறைக்கும் உட்படாத பாண்டிய நாட்டு பகுதிகள் தனியாக இயங்கியது.
(எ.கா) பரவர் நாடு(திருநெல்வேலி), கள்ளர் நாடுகள்(மதுரை)
பரவர் நாடு பற்றி போர்சுகீசிய பயணியின் குறிப்பு:-
மதுரை நாயக்கர்களின் ஆட்சி காலத்தில், பரவர் நாடு வந்திருந்த "பெர்னாவோ கெரேரோ" என்னும் போர்சுகீசிய பயணி தமது நூலில்.....
"பரவர்கள் தங்களது நிலப்பகுதியின் ஆட்சியாளர்களாக இருந்த பரதகுல தலைவர்களின் அரசாங்கத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலப்பரப்பில் காவல், நிர்வாகம், நீதி பரிபாலனை ஆகியவை அனைத்தும் பரதகுல தலைவர்களிடமே இருந்தன" என்று குறிப்பிடுகிறார்.
________________________________
ஆதாரம்:-
1.The history of the Jesuit mission in madurai by J. S. Chandler pg. 2
2.Oriental Historical Manuscripts In The Tamil Language by William Taylor, Missionary Vol II pg:18
3.Portuguese Jesuit Fernao Guerreiro Pg. 108