வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 30 September 2017

விடிந்தகரை 2.00

வீர மிக்கவரும், விவேகமிக்கவருமான

பரதவ பாண்டியனின் பாரம்பரிய

வீரியத்து விளைநில மண் ... அது...!

பரந்து பட்ட பல்லுயிர் வரலாற்றுகளில் புதைந்து

காணாமல் போய் கிடக்கும் பூமி ... அது...! ஆனாலும்

அந்த பழமையான நகரம் கால ஓட்டத்தில் களையிழந்து

1600 களிலும் இப்படிதான் இருந்தது.


அது ஒரு புரட்டாசி மாதம் தமிழர் ஆண்டு 777 விஜய வருடம்

1602 கன்னியாகுமரி அம்மையின் பரிவேட்டைக்கு போய்

பனைப்பெட்டி நிறைய பலகாரங்களும்,

பண்டங்களும் வாங்கிக் கொண்டு

கட்டுமரத்து வழியாக திரும்பி வந்த அந்தக் கூட்டம்,

அந்த நள்ளிரவு வேளையிலே சலசலப்பு ஏதும் இல்லாது

மரத்தைத் தூக்கி கரை வைத்து விட்டு தனி தனியாக

கடற்கரை இருளோடு கலந்தது.


ஆனாலும்....... தூரத்து மணல் மேட்டில்

முண்டாசு கட்டி அமர்ந்திருந்த அந்த உருவம்

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தது


அப்போதும்

தாவிலிருந்து கரை தாவி அடிக்கும் கடல் அலைக்கும்

சிறு காத்து உரச காதைக் கிழிக்கும் பனை ஓலைக்கும்

இன்று வரை தொடரும் அந்த சண்டை

அந்த இரவிலும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.



சிறிய நேரத்திற் கெல்லாம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக

தொழிலுக்குப் போக பரதவர்கள் கடற்புறத்தில் நடமாட

உவரி என்னும் அந்த பரதவக் கடற்கரை

உதய சூரியனின் உதயத்தால் விழித்து எழுந்தது.



அன்றைய உவரி,

மணல் மேடுகளின் இடையே ஆங்காங்கே

பனை ஓலை குடிசைகளும்,

அந்த காலத்து நவீன முறையான

தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளும்

அக்கிராமத்தில் நிறைந்து இருந்தன.

கிராமத்தின் நடுநாயகமாக பெரும் மணல் திரட்டின் இடையே

புதிதாக ஒரு கட்டிடம் எழும்பி கூரை வேலை நடந்து கொண்டிருந்தது.

அதன் அருகிலேயே தான்

அந்த கிராமத்தின் தலைவன்

சந்தானப் பட்டங்கட்டியின் அரண்மனையும் இருந்தது.


காளைகள் பூட்டிய வண்டி ஒன்று

சந்தானப் பட்டங்கட்டியாரின் வீட்டு வாசலிலே

அவரின் வருகைக்காகக் காத்துக் கிடந்தது.


(இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால்

அந்த காளைகள் சந்தனபிள்ளை எனும்

தொல்தமிழ் காளைமாட்டு வகை சார்ந்தவை.)


சந்தானப் பட்டங்கட்டி தனது தினக் கடனை முடித்துவிட்டு

கடற்துறைக்கோ கரைக்காட்டுவிளைக்கோ போவதற்கு முன்பு

தனது மாமனாரை வணங்கிச் செல்வது வழக்கம்.


சந்தானப் பட்டங்கட்டியின் மாமனார்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்

பிள்ளைதோப்பு நாஞ்சிப் பிள்ளை.

அவரது மனைவி அதாவது பட்டங்கட்டியின் அத்தை

சாதி தலைவனாரின் மகள்.

1552 ராஜாக்கமங்கலம் கலவரத்தின் போது

நம்பூதிரிகளால் மனைவி பிள்ளைகள்

சொத்து சுகங்களை இழந்து அனாதையாக்கப்பட்டவர்.

மருமகனை தேடி வந்து அடைக்கலமானவர்.


கண்ணிழந்த மாமனாரை கண் போல்

காத்து வருபவர்தான் நமது பட்டங்கட்டி.

ஆனாலும் மாமனாரின் வரலாற்று செரிவுகளையும்,

நிகழ்வுகளையும்,சிந்தனைகளையும்

அவ்வப்போது கேட்டு கேட்டு சந்தானப் பட்டங்கட்டியும்

பரத இனத்தின் வரலாற்றை தனக்குள்ளே பதித்துக் கொண்டார்.


இதைவிட சந்தானப் பட்டங்கட்டியின் மகன் முத்தையா வாஸ்

நாஞ்சிப்பிள்ளையின் பேரன் அவர் மடியிலே இருந்து

கதை கதையாய்க் கேட்டு தன் இன வரலாற்றையும்,

மூதாதையர் வரலாற்றையும் அறிந்து கொண்டவன்.


பட்டங்கட்டி தன் அறையிலிருந்து

வெளியேறுவதை தன் குறிப்பால் உணர்ந்த மாமனார்,

“பட்டங்கட்டி ஐயா, ஏதோ மனசு சரி இல்லை,

பார்த்து பக்குவமாய் போயிட்டு வாங்கைய்யா” என்று

வழக்கத்திற்கு மாறாக கூறினாலும் வயதானவர்

தன் பொருட்டு உள்ள அக்கறையில் கூறுகிறார் என்கின்ற

அன்பை நினைத்தவாறே அவர் காலைத் தொட்டு வணங்கி

வெளியேறினார் பட்டங்கட்டி.


அவசர அவசரமாக அடுக்களை வழியாக

அடுத்த தெருவிற்குப் போய் மீண்டும் குட நீருடன்

காளை மாட்டு வண்டிக்கு எதிராக நடந்து வந்தார்

பட்டங்கட்டியார் பொஞ்சாதி மீனாச்சியம்மை


மீனாச்சியம்மை ஆத்தாள் அவர்களது ஆத்தாள்

வள்ளி நாச்சியார் போல ஒளியாய் இருந்தார்.

பட்டங்கட்டியை வழியனுப்ப மட்டுமே

வீட்டைவிட்டு வெளியே வருவார் மீனாட்சியம்மை,

கனத்த காசிப்பட்டு உடுத்தி

கைவரை நீண்ட ரவிக்கை அணிந்திருந்தார் மீனாட்சியம்மை

நெற்றியை அடைத்த அளவுக்கு நிலா போன்ற வடிவில்

குங்குமத்தை இட்டிருந்தார்கள்.

அப்போதுதான் பரதவகுலம் மதம் மாறி போயிருந்தாலும்

தன் பழமை சடங்குகளை மறுக்க முடியாமல்

பரிதவித்து வந்தவர்கள் மீனாட்சியம்மை

மகன் முத்தையா வாஸூக்கு இது பிடிக்கது. ஆனாலும்

சந்தானம் பட்டங்கட்டி தனது

இனத்து தலைவனார் பேத்தியை

தலையில் வைத்து கொண்டாடியதால்

இது பற்றி எதுவுமே சொல்வதில்லை


ஆண் பிள்ளை பிறந்து தொழிலுக்கு போனாலோ

பெண் பிள்ளை பிறந்து ருதுவானாலோ

பாம்படம் அணிவது அந்த காலத்து

பாண்டி பரத்தியரின் வழக்கம்.

முத்தையா வாஸுக்கு 22 வயது ஆயிருந்தாலும்

மீனாட்சியம்மையின் பாம்படம் பூட்டிய

காது மட்டும் இன்னும் வடியவேயில்லை.

அவருடைய கூந்தலின் நீளம்

அவரது பாதம் வரை படிந்திருந்தது.


பொதுவாக மீனாச்சியம்மை வெளியே வரும் போதும்

சந்தானப் பட்டங்கட்டி வெளியே கிளம்பும் போதும்

யாரும் வராமல் பார்த்துக் கொள்வது

வண்டிக்காரன் சுயம்பு வின் வேலை அவன்

ஆங்காங்கே கைகாட்டி அனைவரையும்

வீட்டிற்குள் போக சொல்லி, சைகை செய்து கொண்டிருந்தான்.

கதவைத் திறந்து வெளியே வந்த பட்டங்கட்டியார்

முறுக்கு மீசையும், படுதா பாய்ச்சின வெட்டியும், துண்டையும்

உடுத்தியிருந்த பட்டங்கட்டி, சுருண்ட மயிரை சுருட்டி

கொண்டையாய்ப் பின்னியிருந்தார்.

காதில் கடுக்கனும், மூக்குத்தியும் போட்டிருந்த

சந்தானம் பட்டங்கட்டி தன் விரிந்த, வெற்று மார்பிற்கு

சந்தனமும் தடவியிருந்தார்.

ஆனாலும் அவரது தோளுக்கும், இடுப்பிற்கும்

இடையே வெள்ளிக் கொடி ஒன்று ஆடிக் கிடந்தது.


வயது அறுபதை நெருங்கினாலும்

மாட்டு வண்டியிலே அவர் துள்ளிக் குதித்து

உட்கார்ந்த லாவகம் பார்க்க பரவசமாய் இருந்தது.

அவர் முரட்டுக் காளைகளின் மூக்கணாங்கயிற்றை கையிலேற்றி

திறிபுரி நாரெடுத்து சந்தனபிள்ளை காளைகளை அடிக்க

முரட்டுக் காளைகள் புயலாக காற்றைக் கிழித்து

மணல் மேட்டைக் கடந்து முன்னேறிப் போய்க் கொண்டிருந்தது.

மாட்டோடு மாடாக சுயம்பும்

வண்டியின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான்.


அந்த பனை ஓலைக் காட்டிலே பட்டங்கட்டி குடுவையில்

தன் குடும்பத்தோடு தங்கியிருந்த கருக்கு,

பட்டங்கட்டியை எண்ணி சிலாகித்தபடியே

பனை மரத்து மேலிருந்து பாடிக் கொண்டிருந்தான்.


கருக்கு, தன் எசமான் சந்தானப் பட்டங்கட்டிகாக

நெஞ்சு உரச பனை பனையாய் ஏறி

பனை மொந்தையை கலயம் கலயமாக இறக்கி வைத்து விட்டு

இறுதியாக தூரத்தில் ஒத்தை முனிப் பனையில் ஏறி இருந்தான்.

முனி கதைகளை பலர் பேசக் கேட்ட

அவனுக்கு வந்த பயத்தைப் போக்கவே

சந்தானப் பட்டங்கட்டியின் பாடலை

இவ்வாறாகப் பாடிக்கொண்டிருந்தான்.


சடையாண்டி மலையாண்டி

சுடுக்காட்டு கோலாண்டி

அவந்தாண்டி சிவன் தாண்டி

அவன் மகன் ……..

கடலாண்டி வேலாண்டி

ஆறுமலை படையாண்டி

ஆண்டியவன் சொந்தத்து

பாண்டிமார் வம்சத்து

வழிவழியாய் வந்தவராம் எங்க‌

உவரியூர் பட்டங்கட்டி

கடலையும் கடைவாரம்

மலையையும் உடைப்பாராம்

பேயரசி கூட்டத்துக்கெல்லாம்

பெருவிருந்து வைப்பாராம்

பனங்காட்டு முனியையும்

வேளாகொம்புகொண்டு உதைப்பாராம் ………

இன்னும் இன்னும் ஏதேதோ பாடிகொண்டிருந்தான்.


இது பனங்காடு இருந்தாலும் பரதவரின் உல்லாசக் கூடு.

வாடையிலும், கோடையிலும் பாடுபட்டு வரும்

பரதவர்கள் களைப்புத் தீர பனங்கள்ளை உண்டு

சுட்ட மீன் கூட்டோடு கிழங்கைத் தின்று

மணல் மேட்டிலே அசதியை களிப்பார்கள் என்பது

சங்க காலத்திலிருந்தே உருவாக்கப்பட்ட நியதி.

அதுவே இந்த கிராமத்திலும் தொடர்கிறது.


ஆனாலும் சந்தானம் பட்டங்கட்டியின் காட்டுக்குள்ளே

கள்ளு குடிக்க வரக்கூடிய பரவமார் யாரும்

காசு கொடுக்க வேண்டியதில்லை.

அங்கிருக்க கூடிய பட்டங்கட்டியாருடைய பங்காளிகள் தான்

பரதவருடைய வியாபாரிகள்.


எவர் எத்தனை கலயங்கள் குடித்தாலும்

பார்வைக்காரன் கருக்கு பனை ஓலையிலே

கோடு கோடாக எழுதி வைத்து விடுவான்.

கள்ளுக்குடி கணக்கெல்லாம்

கருவாட்டுக் கணக்கோடு சேர்ந்து விடும்

அதனாலேயே தான் அந்த பனைமரக் காடு

பரதவரின் கேளிக்கைக் கூடமாக இருந்தது.


தூரத்தில் மாட்டுவண்டி சத்தம் கேட்டதுமே

பதை பதைத்த‌ கருக்கு பனையிலிருந்து ஒரே தாவாக தாவி

மணலில் குதித்து பட்டங்கட்டியின்

சரட்டு மாட்டு வண்டி நோக்கி ஓடி வந்தான்.

கருக்குவின் குடுவையின் முன்பு

பட்டங்கட்டியார் வண்டியை நிறுத்தவும்,

கருக்கு ஓடிப் போய் சேரவும் சரியாய் இருந்தது.


மூச்சிரைக்க ஓடி வந்து குனிந்து கிடந்த கருக்குவை பார்த்து,

‘ஏய்யா கருக்கு, இன்னிக்கு கள்ளுக் கணக்கு எப்படி இருக்கு?

ஏதாவது வில்லங்கம் உண்டா?

ஒழுங்கா எல்லாரும் குடிச்சானுவளா? இல்ல

மாறி மாறி அடிச் சானுவளா? என கேட்டபடி

சாரட்டிலிருந்து இறங்க, குனிந்தபடி இருந்த கருக்கு,


நாச்சியார் ஐயா ஒன்னுமில்லையா!

ஒத்த ஊட்டுக்காரன் மட்டும் தான்

சாவளை வெல குறைஞ்சி போச்சுன்னு

எதோ புலம்பிக்கிட்டு இருந்தான்.

வேற ஒண்ணுமில்லய்யா என

மிகப் பவ்வியமாகக் பதில் சொன்னான்.

உண்மையிலேயே

கள்ளுக்குடிக்க வந்த மடிகாரமாரு

இரண்டாம் கலயம் குடித்துவிட்டு முடிக்கும் போதே

கொழும்பு சந்தையையும், கொல்லம் சந்தையையும்

அலசி ஆராஞ்சி, பட்டிமன்றமே நடத்தியதை

ஏனோ கருக்கு மறைத்துவிட்டான்.


கருக்கு குடிசையின் பக்கத்திலேயே

பனை ஓலை பந்தலின் கீழே

கிடந்த கயிற்றுக்கட்டிலை நோக்கி நடந்துபோயி

பட்டங்கட்டி ஆற அமர உக்கார்ந்தபடி,

வேறென்ன விஷேசம் கருக்கு? எனக் கேட்க


கருக்குக்கு மனசுக்குள்

சொல்லவே சொல்லக் கூடாது என்ற எண்ணம் ஓடினாலும்

அவனது வாய் பொய் சொல்லத் தெரியாமல்

மேல விளையில் போட்ட கருவாடு என்று

இழுத்து இழுத்து எதோ சொல்ல,

சந்தானம் பட்டங்கட்டி,


‘ஏல, கருவாட வழக்கம் போல

எவனாச்சும் தூக்கிட்டு போய்டானுவலா?

சொல்லுல என அதட்ட...


நாச்சியார் ஐயா ரெண்டு பயலுவ

ஒரு குதிரைல ஒருத்தரக் கூட்டிட்டு வந்து

பெருமாள் பாளையக்காரன் ஆளுக நாங்க தான்.

கருவாடு வேணும்ன்னு கேட்டணுவ.

நாச்சியார் ஐயா கிட்ட கேட்டுட்டு

நாளைய பொழுது எடுத்துட்டு போங்க அப்படின்னு சொன்னேன்.

உங்க சந்தானம் பட்டங்கட்டியும், உங்க சாமிமாரும்

இதுவரைக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காம

ஏமாத்துர கோவத்துல பாளைய பெருமாள் இருக்காரு.

மரியாதையா அவ்வளவு கருவாட்டையும் கொடுன்னு சொல்லி

என்னைய அடிச்சுபுட்டாணுவ ... அதுக்குள்ள

மூணு நாலு பேரு குதிரையில வந்து அம்புட்டுக் கருவாட்டையும்

ஒமல் ஓமலா அள்ளிட்டு போயிட்டானுக...

கேட்டதும் முகம் சிவந்து கோவமுற்ற பட்டங்கட்டி,

‘ஏல, நாயே... தகவல் சொல்லுறதுக்கு உன்னைய வச்சிருக்கேனா...

அவனுக கேட்டனுகன்னா நீ அள்ளிக் கொடுத்திடுவியா?’

நீ உடனே என் கரகாட்டுக்கு வரவேண்டியது தான?

யார் யாருல அவனுக? உனக்குத் தெரியாமல் இருக்காது சொல்லுல என

கோவத்தில் கருக்குவை எட்டி மிதித்தார்.

பயந்து போன கருக்கு வந்தவர்களைப் பற்றிய

அடையாளங்களை திக்கித் திணறி சொல்லும் போதே

பட்டங்கட்டியின் மண்டைக்குள் சாமிப்பிள்ளையின்

மீதான குரோதம் வெடித்து கிளம்பியது

யார் அந்த சாமிப்பிள்ளை………?

பட்டங்கட்டிக்கும் அவருக்கும் என்ன விரோதம்…?



தொடரும் ...... 



கடல் புரத்தான் ......
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com