இராவண மகுடம்
![]() |
மீனாட்சியின் முத்து மகுடம் |
“வளர்ந்த காதலர் மகரிகை நெடுமுடி
அரக்கரை வரக் காணார்
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட
உயிரொடு தடுமாறி
களம் தவா நெடுங்கருவியில்கைகளில்
செயிரியர் கலைக் கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக
அலமரலுறுகின்றார்”
பொருள்:
“ராவணன் மீது நாள்தோறும் வளரும் காதலை உடைய வித்தியாதர மகளிர் சிலர், சுறாமீன் வடிவு பொறித்த நீண்ட மகுடத்தைப் பூண்ட ராவவணன், தம்மிடம் வருவதைக் காணவில்லை. அதனால் தளர்ந்த மனம், இடையைக் காட்டிலும் அதிகமாமகத் துடித்தது. அவர்கள் தடுமாறினர். இசைக் கலைஞர்கள் கருவிகளை இசைத்து கண்களால் அவற்றை அளந்து பாடிய பாடல்கள் காதுக்குள் பாம்பு புகுந்தது போலப் புகவே அவர்கள் துன்புற்றனர்.”
உலகில் பல பண்பாடுகளில் மகர தோரணங்கள் உண்டு; மகர மோதிரங்கள் உண்டு; மகர காதணிகள், கை வளையங்கள் உண்டு; ஆனால் மகர வடிவில் கிரீடம் கிடையாது; மகரம் பொறித்த கிரீடமும் இல்லை. ராவணன் ஏன், எப்படி இப்படி ஒரு கிரீடம் அணிந்தான் என்பதற்கான விளக்கமும் இல்லை. உலகில் வேறு எங்குமில்லாத அளவுக்கு ஐரோப்பியர்கள் மட்டும் மன்னரின் மணி முடிளை அப்படியே சேகரித்து வைத்துள்ளனர். அதிலும் கூட இப்படி ஒரு கிரீடம் இல்லை.
நம்முடைய மன்னர்களின் கிரீடங்கள் அழிக்கப்பட்டு, நகைகளாகவும் சங்கிலிகளாகவும் செய்யப்பட்டு விட்டன. ஆயினும் எல்லாக் கோவில்களிலும் சுவாமிக்கும் அம்மனுக்கும் உள்ள கிரீடங்கள் ஓரளவுக்கு நம்முடைய பழம்பெரும் கலாசாரத்தைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. அங்கும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை.எங்கேயாவது சுறாமீன் கிரீடத்தின் சிலையோ படமோ கிடைக்கிறதா என்று ஆராய்வது நமது கடமை.
Thanks: www.swamiindology.blogspot.in