வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 8 September 2017

புனிதர் பாதையில் பாக்கியநாதர் சுவாமிகள்.......
கத்தோலிக்க விசுவாசத்தில் தழைத்தோங்கி இருந்த பரதவர்களுக்கு டச்சுக்காரர்களின் வருகை பெருத்த அடியாக இருந்தது. அவர்கள் கல்வீனிய கிறஸ்தவ பிரிவை சார்ந்தவர்களாக இருந்த கத்தோலிக்க வழிபாடுகளை செய்ய பெரிதும் தடையாக இருந்தனர். உச்சகட்டமாக வேம்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், மணப்பாடு ஆகிய ஊர்களில் இருந்த கத்தோலிக்க ஆலயங்களை இடித்ததுடன் அவற்றை தங்கள் வணிகக் கூடமாகவும், ஆயுதக் கிடங்காகவும் மாற்றினர்.

டச்சுக்காரர்களால்  போர்த்துக்கீசிய சேசுசபைக் குருக்கள் அகற்றப்பட்டபின் 1776 ஆம் ஆண்டு பாப்பரசர் ஆறாம் பத்திநாதர் அவர்களின் ஆணைப்படி முத்துக்குளிதுறைப் பகுதி பாரிஸ் வேத போதக சபையினரிடம் (Paris Foreign Mission Society) ஒப்படைக்கப்பட்டது. இதன் காராணமாக பிரான்ஸ் நாட்டின் தூலுஸ் மாநிலத்தைச் சேர்ந்த சேசு சபையோர் முத்துக்குளித்துறைக்கு மறைப்பணியாற்ற வருகை புரிந்தனர்.

இந்த ஆணைப்படி வந்த முதல் இரு குருக்களில் ஒருவரே சுவாமி பாக்கியநாதர் ஆவார். இவர் பிரெஞ்சு நாட்டினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் யூசுபியுஸ் டி மொன்ட் ( USEBIUS DE MONT) . யூசுபியுஸ் என்பதற்கு பக்திமான் என்பது பொருளாக அமைகிறது. இவர் தூலுஸ் நகரை தனது பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 

சங். பாக்கியநாதர் சுவாமிகள் தூத்துக்குடிப் பகுதிக்கு வந்த போது இவ்விரு குருக்கள் தவிர வேற குருக்கள் இல்லாத நிலையில்  இவர் வேம்பாற்றை மையமாகக் கொண்டு கடினமான மறைப்பணியாற்றினார். வந்த இரு ஆண்டுகளுக்குள் வேம்பாற்று பரதவர்களால் பனையூர் என அழைக்கப்பட்டதும், பின்னாளில் கட்டமீன்கள் அதிகம் கிடைக்கும் இடமான கட்டாப்பாடு என அழைக்கப்பட்டதுமான வேம்பாற்றிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தற்போது பெரியசாமிபுரம் என்ற இடத்தில் மறைப்பணியாற்றும்போது காலரா நோயால் பாதிக்கப்பட்டு 1858 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அன்று தனது 44 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார். 

வெள்ளைக்கார சுவாமிகள் என அழைக்கப்பட்ட இவர்  வேம்பார் தூய ஆவி ஆலயப் பங்குத்தளத்தில் பணியாற்றி மரித்ததால் இவரது உடலை கட்டாப்பாடிலிருந்து பக்தி சிரத்தையுடன் வேம்பாற்றில் அப்போதிருந்த பரிசுத்த ஆவி ஆலயத்தின் முன் பகுதியில் இவரை அடக்கம் செய்தனர். கட்டாப்பாடில் சங். பாக்கியநாதர் சுவாமிகள் மரித்த இடத்தில் குருசடி கட்டப்பட்டு மக்களால் இன்று வரை வேண்டுதல்கள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறே கட்டாப்பாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இன்றளவும் பாக்கியம் என்ற பெயரை சூட்டி சங். பாக்கியநாதர் சுவாமிகளை நினைவு கூர்ந்து வருவதும் குறிப்பிடத்தகுந்தது.

வேம்பாற்றின் இரண்டாவது ஆலயம் சிதைவுற்றதும் மூன்றாவது புதிய ஆலயம் 1915 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.  அவ்வாலயத்தின் உட்புறத்தில் திருப்பலி பீடத்திலிருந்து வலப்புறத்தில் 2 அடி தொலைவில் இவரது கல்லறை மாற்றி அமைக்கப்பட்டது. இவரது கல்லறையின் மேலுள்ள கல்வெட்டின் பின்புறம் டச்சுப் பட்டாலியன் ஒருவரின் மனைவியின் கல்லறைக் கல்வெட்டு இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

இவரது கல்லறைக் கல்வெட்டில் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.....

P. EUSUBIOS DEMONT .S.J
OBIIT 25. DECEMB.1858
AN. AETATIS SUAE. 44
R.I.P
எனக் குறிக்கப்பட்டுள்ளது.

தகவல்: தம்பி ஐயா பர்னாந்து 

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com