மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கான வரவேற்பு
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கான வரவேற்பு மற்றும்
பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
மன்னார் மறைவாவட்டத்தின் மூன்றாவது புதிய ஆயராக பொறுப்பேற்கும் நிகழ்வு சனிக்கிழமை (30.12.2017) நடைபெற இருப்பதால் மன்னார் நகரம் விழாக்கோலம் பூண்டு வருவதுடன் சகல ஆயத்தங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் வட்டாரம் தெரிவிக்கின்றது.
புதிய ஆயரை வரவேற்பதற் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மன்னார் தள்ளாடிச் சந்தியில் இருந்து மோட்டார் வாகனப் பவனி ஆரம்பமாகி மன்னார் பிரதான பாலத்தை வந்தடையும். மன்னார் பெரிய பாலத்தடியில் புதிய ஆயர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்படுவார். பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் நாதஸ்வரம், பாண்ட் மற்றும் இன்னிய வாத்தியம் முழங்க புதிய ஆயர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குப் பவனியாக அழைத்துச் செல்லப்படுவார்.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தை அடைந்ததும் பேராலயத்தின் பிரதான வாயிலில் சர்வமதத் தலைவர்கள்இ சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் போன்றோர் புதிய ஆயருக்கு வாழ்த்துத் தெரிவிப்பர். பின்னர் புதிய ஆயர் உட்பட அனைத்து ஆயர்கள் குருக்கள் பேராலய மண்டபத்திற்கு சென்று அங்கு திருப்பலிக்குரிய ஆடையை அணிந்துகொள்வர். பின்னர் பேராலய மண்டபத்திலிருந்து வீதி வழியாகப் பவனியாக வரும் இவர்களைத் தமிழ்ப் பண்பாட்டு முறைப்படி சிறுமியர் நடனமாடி வரவேற்று பேராலய வாசல்வரை அழைத்து வருவர்.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்கள் திருப்பலியை ஆரம்பிப்பார். திருப்பலியின் வாழ்த்துரைக்குப் பின்னர் புதிய ஆயரின் நியமனம் தொடர்பான திருத்தந்தையின் மடல் (Pயியட டீரடட) திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர் மேதகு நியூஜன் வன் ரொட் ஆண்டகை அவர்களினால் ஆங்கிலத்தில் வாசிக்கப்படும். தொடர்ந்து அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பும் வாசிக்கப்படும். திருத்தந்தையின் நியமன மடல் வாசிக்கப்பட்டவுடன் இந்தப் புதிய நியமனத்தை வரவேற்பதன் அடையாளமாக அனைவரும் கரவொலி எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தைப் புதிய ஆயருக்குக் கையளிப்பதன் அடையாளமாக அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை பேராலயத் திறப்பை புதிய ஆயருக்குக் கையளிப்பார். தொடர்ந்து பேராலய நற்கருணைப் பேழையின் திறப்பை பேராலயப் பங்குத்தந்தை புதிய ஆயருக்குக் கையளிப்பார்
.
பின்னர் ஆயருக்குரிய ஆட்சியதிகாரங்களைக் குறிக்கும் செங்கோலை அப்போஸ்தலிக்க பரிபாலகர் புதிய ஆயருக்கு வழங்குவார். தொடர்ந்து அப்போஸ்தலிக்க பரிபாலகரும்இ கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை அவர்களும் புதிய ஆயரை அழைத்துச்சென்று மறைமாவட்ட ஆயருக்குரிய பேராலயத்தின் அதிகாரபூர்வ இருக்கையில் அமர்த்துவர். பின்னர் மன்னார் மறைமாவட்டக் குருக்களும்இ மன்னார் மறைமாவட்டத்தில் பணி செய்யும் குருக்களும் வரிசையாக வந்து புதிய ஆயரின் மோதிரத்தை முத்தமிட்டு தமது வாழ்த்துக்களையும்இ வணக்கத்தையும் கீழ்ப்படிவையும் தெரிவிப்பர்.
தொடர்ந்து குருக்கள் புதிய ஆயரைச் சூழ்ந்து நிற்கும் நிலையில் தமக்கு வணக்கமும் கீழ்ப்படிவும் வழங்குதற்கான உறுதிமொழியை புதிய ஆயர் குருக்களிடமிருந்து பெற்றுக்கொள்வார். தொடர்ந்து துறவற சபைகளின் தலைவர்கள்இ பிரதான திருச்சபைகளின் தலைவர்கள்இ மன்னார் மறைமாவட்டத்தின் பொதுநிலைப் பிரதிநிதிகள் போன்றோர் புதிய ஆயருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பர். தொடர்ந்து உன்னதங்களிலே கீதத்துடன் புதிய ஆயரின் தலைமையில் திருப்பலி தொடர்ந்து இடம்பெறும்.

அத்துடன் இலங்கையில் உள்ள ஏறக்குறைய அனைத்து ஆயர்களும் இதில் பங்குபற்றுவதாக அறிவித்துள்ளனர். தென் பகுதியில் இருந்து வரும் ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுமக்களில் பெரும்பாலானோர் 29ஆம் திகதி மாலையே மடுத்திருப்பதிக்கு வந்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலர் காலையில் மடுத்திருப்பதிக்கு வந்துசேர்வதாகவும் அறிவித்துள்ளனர்.
அனைவரும் காலை 8.30 மணிக்கு மடுவில் இருந்து புதிய ஆயரை வாகனப்பவனியாக மன்னார் நோக்கி அழைத்துச் செல்வர். மன்னார் தள்ளாடிச் சந்தியை இவர்கள் அடைந்தவுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் பவனியாக புதிய ஆயர் மன்னார் பாலம்வரை அழைத்துச் செல்லப்படுவார்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராலயத்தில் நடைபெறும் திருவழிபாடுகளில் பங்கேற்கும் எல்லாரும் பேராலயத்திற்குள் உள்வாங்கப்படமுடியாத நிலையில் பேராலயத்திற்கு வெளியே பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளே நடைபெறும் திருவழிபாடுகளை பந்தல்களுக்குள் இருந்து காண்திரையில் காண்பதற்கு ஏற்ற வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய ஆயர் தள்ளாடியை வந்தடைந்ததும் அங்கு இரானுவத்தினரால் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும் என இராணுவ வட்டாரம் தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)