Servite Convent of Vembar
வேம்பார் இல்ல வரலாறு
தூய ஆவி இல்லம்
ஏழு கடல் துறையின் முதல் துறையான வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மறை மாவட்டத்திற்கு உட்பட்ட இவ்வூரில் கிறிஸ்தவ வேதத்தினை பரப்ப புனித சவேரியார் (1542 - 1547) இவ்வூருக்கு வந்து, ஆற்றங்கரையின் ஓரத்தில் குடிசையை அமைத்து, மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். குளத்தில் விழுந்து இறந்த ஒரு பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்து மக்களின் விசுவாசத்தை வளர்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மறை பரப்ப வந்த வெளிநாட்டுக் குருக்களும் விசுவாசத்தை வளர்க்க உழைத்துள்ளனர்.
1883-ல் பங்குத் தந்தையாக இருந்த ராயப்பன் சுவாமி அவர்களால் ஆரம்ப பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு இரு பால் மாணவரும் கற்று வந்தனர். பின் 1905-ல் ஆண், பெண் தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஆண்களுக்கு 5-ம் வகுப்பு வரையிலும், பெண்களுக்கு 4-ம் வகுப்பு வரையிலும் நடைபெற்றுள்ளது. இப்பள்ளியை உள்ளூர் வாசிகளே (அமலோற்பவ மாதா ஜூபிலி கிளப்) நிர்வகித்து வந்துள்ளனர். 1920-21ல் தலைமை ஆசிரியருக்கும் (தாமஸ்பிள்ளை) நிர்வாக உறுப்பினர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பள்ளியை 1925-ல் வால சுப்பிரமணியபுரத்திற்கு (தெற்கு வேம்பார்) புனித தோமையார் ஆலய வளாகத்திற்குள் மாற்றியுள்ளனர்.
1923-ல் சங்.S.மரியதாஸ் சுவாமிகள் காலத்தில் திரு.குருஸ் மிக்கேல் விக்டோரியா அவர்களின் பெரும் முயற்சியால் புனித செபஸ்தியார் பாடசாலை பரிசுத்த ஆவி ஆலய வளாகத்தில் துவங்கப்பட்டது. பெண்களின் ஆன்மீகக் காரியங்களைக் கவனிக்க கன்னியர் தேவை என்பதை உணர்ந்த மரியதாஸ் சுவாமிகள் அப்பொழுது தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஆயராக இருந்த ரோச் ஆண்டவரின் பரிந்துரையின் பேரில் திருச்சியில் 1854 –ல் துவங்கப்பட்டு சீரும் சிறப்புமாக பணியாற்றிக் கொண்டிருந்த புனித வியாகுல மாதா சபைக் கன்னியரை வேம்பார் (பரிசுத்த ஆவி) பங்குக்கு அழைத்தனர். 1925-ஆம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி புனித வியாகுல மாதா சபைக் கன்னியர் நால்வர் வேம்பார் வந்து சேர்ந்தனர். அவர்களை ஊர்மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி ஆரவாரத்தோடும் வரவேற்றனர்.
கன்னியர்கள் தங்குவதற்கு இப்போது இருக்கும் இடத்திலே முக்கால் ஏக்கர் பரப்பில் 54 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட இல்லம் ஒன்றும் 110 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட அழகிய பள்ளியும் கட்டினர். கன்னியர்களுக்கென கட்டப்பட்ட இல்லமானது, 1925 மே மாதம் பரிசுத்த ஆவியின் பெருவிழாவன்று (31-ம் தேதி) வணக்கத்துக்குரிய ரோச் ஆண்டகை அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு அர்ச்.மார்கரீத் மரியம்மாள் மடம் என்ற பெயரால் திறந்து வைக்கப்பட்டது. அர்ச்.மார்கரீத் மரியம்மாள் பெயரே பள்ளிக்கும் வழங்கலாயிற்று. இப்பள்ளியில் நான்கு வகுப்புகள் வரை மட்டுமே இருந்தன. நான்கு வகுப்புகளிலும் கன்னியரே கற்பித்தனர்.
இக்கால கட்டத்தில் வேம்பாரில் நாயக்கர்கள் மறவர்கள் ஊடுருவல்கள் அதிகமாக இருந்தது. பெரும்பாலும் பரதவ குல மக்களே இங்கு வாழ்ந்து வந்தனர். இவர்கள் இலங்கை வணிகத்தாலும், உள்ளூர் கடல் தொழிலால் கிடைத்த பொருளாதார வசதியாலும் செழிப்புற்று வாழ்ந்தனர். இதன் காரணமாக ஏராளமான குடும்பங்கள் இருந்ததால் பள்ளிகளில் போதுமான அளவு மாணவர்கள் இருந்தனர்.
இதனிடையே 1930 - ஆம் ஆண்டு மூக்கையூரிலும், 1942 - ஆம் ஆண்டு பெரியசாமிபுரத்திலும், 1949 - ஆம் ஆண்டு சிப்பிகுளத்திலும், 1951 – ஆம் ஆண்டு வேம்பார் தோமையார் பங்கிலும் புதிய கன்னியர் மடங்கள் உருவாகின. இந்நான்கு மடங்களும் வேம்பார் மடத்துடன் இணைக்கப்பட்டு வேம்பார் செர்வைட் சொசைட்டி என்ற அறக்கட்டளையாக உருவானது. மேற்கண்ட ஐந்து மடத்தை சேர்ந்த கன்னியர்களுக்கான தியானகளும், பயிற்சிகளும் வேம்பார் மடத்திலே நடைபெற்றன. அக்காலத்தில் கன்னியர்களுக்கான தியானங்கள் நடைபெறும் போது வேம்பார் கன்னியர் மடம் திருவிழா கோலம் பூண்டு காணப்படும்.
1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் அங்கு சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் குடும்பங்கள் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. எனவே பள்ளியில் மாணவர்கள் குறைந்தனர். அப்பொழுது பங்குத்தந்தையாக இருந்த சூசைநாதர் சுவாமிகள் அர்ச்.மார்கரீத் மரியம்மாள் பள்ளியை 1964 – ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் பள்ளியோடு இணைத்து நடுநிலைப்பள்ளியாக்கினர். புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த திரு.ராஜகுலசேகரன் பர்னாந்து அவர்கள் தலைமைப் பொறுப்பை அருட்சகோதரிகளுக்கு கொடுத்தார். அருட்சகோதரி பெனிட்டா மேரி ஒருங்கிணைந்த புனித செபஸ்தியார் நடுநிலைப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.
1951 – ஆம் ஆண்டு வேம்பார் தோமையார் பங்கிலும் புதிய கன்னியர் மடங்கள் உருவாகினும் அங்கு கன்னியர் இல்லம் கட்டப்படும் வரையிலும் வேம்பார் (பரிசுத்த ஆவி) மடத்திலிருந்தே கன்னியர்கள் புனித பீற்றர் பள்ளிக்கு பணி செய்ய சென்று வந்தனர்.
1977-ல் கருணை இல்ல குழந்தைகள் மற்றும் வேம்பார் மக்களின் உடல்நலத்தினை கருத்தில் கொண்டு வியாகுல அன்னை சபைக் கன்னியர்களை பணியாளர்களாகக் கொண்டு சிறிய மருந்தகம் (DISPENSARY) கருணை இல்லத்தின் அருகே கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. பல குழப்பங்களுக்கு மத்தியில் அம் மருத்துவமனை புனித தோமையார் ஆலயப் பங்கிற்கு மாறி 7.10.77-ல் சாக்ரோஸ் மருத்துவமனை என்ற பெயரில் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
10.8.1997 ல் மதுரை மாநிலத் தலைவி அருட்சகோ.ரோகாசிற்றா மேரி அவர்கள் வேம்பார் இல்லத்தை பார்வையிட்டு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் 07.10.97 அன்று பெரிய இரும்புக்கதவு அமைக்கப்பட்டது. மதுரை மாநிலத்திலிருந்து தூத்துக்குடி மரிய நட்சத்திர மாநிலம் என்னும் பெயரில் தனியாக 1998-ல் நிறுவப்பட்டது.
02.12.2000 இல்லம் துவங்கி 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இல்லம் பழுதுபார்க்கப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது. மின் இணைப்புகள் அனைத்தும் பழுதாகியிருந்தால் அனைத்து இணைப்புகளும் சரிசெய்யப்பட்டது. 6.2.2001 பெரியசாமிபுரம் பங்குத்தந்தை இல்லாத கால கட்டத்தில் திருவழிபாடுகளில் பங்கு கொள்ள வசதியாக அங்கிருந்த சகோதரிகள் இவ்வில்லத்தில்வந்து தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார்கள்.
2௦16 ஜூன் மாதத்திலிருந்து நான்கு மறைமாநிலங்கள் இரண்டு மறைமாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. வேம்பார் யூனிட் பாளையங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்ட மரிய நட்சத்திர மறைமாநிலத்தில் சேர்க்கப்பட்டது. வேம்பார் இல்லத்தின் மேல்தளம் பாதிக்கப்பட்டு கட்டைகள் விழும் நிலையில் இருந்ததால் கட்டிடம் பழுதுபார்க்கும் வேலை 25.01.2017 ல் ஆரம்பமானது. சுண்ணாம்பு சுவர் அனைத்தும் கொத்தி பூசப்பட்டது. அறைகளிலும் கோவிலிலும் புதிய டைல்ஸ் போடப்பட்டது. ௦6-௦6-17-ல் கான்கிரீட் போட்டப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் பங்குத்தந்தை சகாய ராஜ் வல்தாரிஸ் அவர்கள் புதுப்பிக்கப்பட்டிருந்த நற்கருணைப் பேழையை மந்திரித்து, திரு இருதயப் படத்தையும் ஸ்தாபித்தார். 28-06-17 இல்ல வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில் கன்னியர் இல்லம் சுத்தம் செய்யப்பட்டு இல்லக் கோவிலில் புதிய பங்குத்தந்தை பிரதீபன் லிபோன்ஸ் அவர்களால் நன்றித்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
- நி. தேவ் ஆனந்த்