வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 22 October 2019

தமிழரின் நாவாய் சாத்திரம்
தமிழரின் கடல் வாணிபம் மிகத் தொன்மையானது. தமிழர்கள் பெரிய பாய்மரக் கப்பல்களிலே சரக்குகளை ஏற்றிக்கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்துள்ளனர். தமிழர் நாவாய் வைத்து வாணிபம் செய்ததற்கு ஆதாரமாகப் பானை ஓடுகள், காசுகள், சுவரோவியங்கள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் இலக்கியங்களும் தமிழரின் கடலோடிய ஆற்றலைப் பறைசான்றுகின்றன.

தொல்பழங்காலப் பாறை ஓவியங்களில் படகு உருவங்கள் விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை, தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. கீழ்வாலையில் படகின் மீது நின்ற நிலையில் துடுப்புடன் பயணம் செய்யும் மனித உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. காமயகவுண்டன்பட்டியில் படகின்மீது ஒரு மனிதன் நிற்பது போன்று காணப்படுகிறது.

தமிழக அரசு தொல்லியல் துறை இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அகழ்வாய்வு செய்தபோது கருப்பு, சிவப்புப் பானை ஓடுகளும் கப்பல் உருவம் பொறித்த இரு பானை ஓடுகளையும் கண்டறிந்துள்ளனர். அவற்றுள் ஒன்றினை ரோமானியக் கப்பலின் உருவமாக ஆய்வாளர் கருதுகின்றனர். கடலில் செல்லுகிறவர்கள் தங்களோடு மகளிரை அழைத்துக்கொண்டு போகிற வழக்கம் தமிழருக்கில்லை என்பதை, ""முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை'' என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் கரிகாலன் வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ள செய்யுளில் (புறநானூறு-66) கரிகாலனுடைய மூதாதையான சோழன் ஒருவன் கடலில் நாவாய் ஓட்டியதை,

""நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக''

என்ற பாடலடிகளால் அறியமுடிகிறது. வெளிநாட்டிலிருந்து வந்த யவனர் கப்பல்கள், பொன்னொடு வந்து அப்பொன்னுக்குரிய பண்டமாற்றாக மிளகினை ஏற்றிச் சென்றனர். இச்செய்தியை அகநானூறு,

""யவனர் தந்த வினைமாண் நன்கலம்,
பொன்னொடு வந்து கறியோடு பெயரும்''

என்று கூறுகிறது. பல்லவர் காலத்தில் வெளியிடப்பட்ட காசு ஒன்றில் கப்பலில் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் பாய்மரம் காட்டப்படவில்லை. இரகுநாத நாயக்கர் கடல் வணிகத்தில் ஆர்வம் கொண்டு, தரங்கம்பாடியில் டெனிஷ்காரர்கள் வணிகத்தின் முக்கியத் துவத்தை அறிந்து காசுகளை வெளியிட்டுள்ளார். அதில் கப்பல் உருவம் பொறித்த காசுகளையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி திருக்கோயில் கோபுரத்தில் ஐந்து நிலைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் வடக்குப் பக்கச் சுவர்ப் பரப்பில் அரேபிய வணிகக் கப்பலொன்று குதிரைகளைத் துறைமுகத்தில் இறக்கும் காட்சி ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. கப்பலில் கொடிமரமும் பாய்மரமும் காட்டப்பட்டுள்ளன. குதிரைகளைக் கரைக்குக் கொண்டு செல்ல படகு ஒன்றும் வரையப்பட்டுள்ளது. கடற்பகுதியில் மீன்களும் சங்குகளும் சுற்றித் திரிகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வோவியங்களை முனைவர் சா.பாலுசாமி ஆய்வு செய்து "சித்திரக்கூடம்' எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலிலுள்ள சிற்பம் குதிரை வணிகத்தை எடுத்துக்காட்டுவதாகக் கப்பல் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் குதிரை, ஒட்டகம், யானை ஆகியன காட்டப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்கு மனையடி சாத்திர நூல்கள் உள்ளது போல் கப்பல் கட்டுவதற்குக் கப்பல் சாத்திரம், நாவாய் சாத்திரம் ஆகிய நூல்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. கப்பல் சாத்திரத்தில் கப்பல் அளவுகள், வேம்பு, இருப்பை, புன்னை, நாவல், வெண்தேக்கு, தேக்கு ஆகிய மரங்கள், கயிறு, பாய்மர வகை, நங்கூர வகை முதலிய விவரங்களும் கூறப்பட்டுள்ளன. சிறந்த மரக்கலம் "தீர்கா உன்னதா' என்று பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது.

நாவாய் சாத்திரத்தில் கப்பல் கட்டுவதற்கு மரத்தைத் தேர்வு செய்தல், கப்பல் கட்டும் முறைகள், கப்பலின் உறுப்புகள், கப்பலைச் செலுத்தும் முறைகள், மரக்கலம் செய்வதற்கான நல்ல நாள், மரம் வெட்டிவரச் சாத்திரம் ஆகியன கூறப்பட்டுள்ளன. இந்நூலில் கப்பலைக் குறிக்க நாவாய், வங்கம், கலம், ஏரா, தோணி, யாத்திரை மரம், படகு, ஓடம், கப்பல் முதலிய பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வோலைச் சுவடியில் கப்பலின் படம் ஒன்று கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. இவ்வோலைச் சுவடியை முனைவர் சு.செüந்திரபாண்டியன் என்பவர் பதிப்பித்துள்ளார்.

- கோதனம். உத்திராடம்

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com