வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 22 October 2019

பட்டினப்பாலையில் வெளிநாட்டு வாணிகம்
கரிகால் பெருவளத்தானின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினம் துறைமுக நகரமாகவும் இருந்ததால் உள்நாட்டு வணிகம் போலப் பன்னாட்டு வணிகமும் சிறப்பாக நடைபெற்றது. சோழ நாட்டிற்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் உள்ள நாடுகளிலிருந்து பல பொருட்கள் வந்தன. கடல் தாண்டிய நாடுகளிலும் வணிகம் நடைபெற்றதால் துறைமுகத்தில் அரியவும், பெரியவுமான பொருள்கள் நிறைந்து காணப்பட்டன.

மக்களின் வாழ்க்கை நாகரிக முறையில் வளர்ச்சியடைய அதற்கேற்பத் தேவைகளும் பெருகின. தேவைகளை நிறைவேற்ற பிற நாட்டினரோடு வணிகம செய்தனர். இதற்கு நீர் வழி போக்குவரத்துத் துணை நின்றது. பண்டைய தொழில்கள் பெரும்பாலும் கடல்நீர் வழி போக்குவரத்தையே நம்பி இருந்தன. தமிழ் வணிகர் நன்முயற்சி செய்து கடல்காற்றின் பருவநிலை உணர்ந்து நாவாய் செலுத்தும் தொழிலில் ஈடுபட்னர். உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு பிற நாடுகளுக்குச் சென்று விற்று அந்நாடுகளில் உள்ள பொருட்களை வாங்கினர். காவிரிப்பூம்பட்டினம்.

சோழநாட்டின் முக்கியமான துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்தது. சங்ககாலத்தில் சோழ நாட்டில் காவிரியாறு கடலில் கலக்கின்ற இடத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் உலகப் புகழ் பெற்றிருந்தது காவிரிப்பூம்பட்டினம். ‘மருவூர்ப்பாக்கம்’, ‘பட்டினாப்பாக்கம்’ என்று இரண்டாகப் பரிந்திருந்தது. துறைமுகத்தையடுத்த மருவூர்ப்பாக்கத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மக்களும் வணிகர்களும் வசித்து வந்தனர்.

துறைமுகத்தையடுத்த மருவூப்பாக்த்தில் பிறநாடுகளிலிருந்து கப்பல் ஓட்டி வந்த மாலுமிகள், கப்பலோட்டிகள் தங்கியிருந்தனர். அவர்கள் பிற நாடுகளிலிருந்து வந்தமையால் பல மொழிகளைப் பேசினர். யவனர்களும் அக்கூட்டத்திலிருந்தனர்.

“மொழி பல பெருகிய பழிதிர் தோத்துப்

புலம்பெயர் மாக்கள் கலந்தினிதுறையும்

முட்டாச்சிறப்பின் பட்டினம்”

(பட்டி.216-218)

எனக் காவிரிபூம்பட்டினம் சிறப்பிக்கப்டுகிறது. இதன்வழி அந்நகர மக்கள் தம் நகருக்கு வரும் அயல் நாட்டினரிடம் காட்டிய அன்பை வெளிக்காட்டுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் தமிழ் நாட்டுக் கப்பல் வாணிகர்கள் பலர் இருந்தனர். இத்துறைமுகத்தில் வந்திறங்கிய பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக கப்பல்களின் மூலமாகக் கொண்டு வரப்பட்டன. குதிரைகள் கடல் வழியாக பாரசீகம், சிந்து போன்ற நாடுகளிலிருந்து வந்திறங்கின அரசர்களின் படைகளின் குதிரைகள் முக்கிய இடம் பிடித்தன. கடல்வழியாக மிளகும், வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்மிளகு சேர நாட்டு மலைச்சரிவுகளில் கிடைத்தது. சேர நாட்டு மிளகை யவனர்கள் பெரிய நாவாய்களில் கொண்டு சென்றுள்ளதனை அறியமுடிகினற்து.

தமிழ்நாட்டு வாணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது போல அயல்நாட்டு வாணிகர்களும் தமிழகத்திற்கு வந்து வாணிகம் செய்தனர் என்பதனை,

“பல் ஆயமொடு பதி பழகி வேறு வேறு உயர்நத

முதுவாய் ஒக்கல் சாறு அயர் மூனர் சென்று தொக்காங்க

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும”;

(பட்டி.213-218)

இப்பாடல் வழி அறியலாம். அக்காலத்தில் வாணிகத்தில் உலகப்புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே அயல் நாடுகளிலிருந்து பல மொழிகள் பேசும் மக்கள் தங்கியிருந்ததைக் காணமுடிகிறது வியாபாரத்திற்காகக் காவிரிப்பூம்பட்டினத்திலே பல பண்டங்கள் வந்து குவிந்திருந்தன.

அப்பொருள்கள் உள் நாட்டிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்தவை. வேற்று நாடுகளிலிருந்து குதிரைகள் கடல் வழியாக வந்திருக்கின்றன. அவைகள் உயரமானவை, விரைந்து ஓடும் தன்மையுடையவை, நிலத்தின் வழியே வண்டிகளில் கொண்டு வரப்பட்ட கரிய மிளகு மூட்டைகள், இமயமலையிலே பிறந்த சிறந்த மாணிக்கங்கள், உயர்ந்த பொன்வகைகள், மேற்குத் தொடர்ச்சி மலையிலே விளைந்த சந்தனக் கட்டைகள், அகில கட்டைகள், தெற்கக் கடலிலே விளைந்த முத்துக்கள், கீழைக்கடலிலே தோன்றிய பவளங்கள், கங்கை நதி பாயும் நிலங்களிலே விளைந்த செல்வங்கள், இன்னும் பல அருமையான பண்டங்களும், மிகுதியான பண்டங்களும் பூமி தாங்க முடியாமல் நிறைந்து, செல்வங்கள் செழித்துக் கிடக்கின்றன என்பதனை,

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங் கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியம் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்”

(பட்டி.185-193)

இப்பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. இவ்வடிகளில் முதலாவதாகக் குறிப்பிடப்படும் புரவி என்கிற குதிரை இந்திய நாட்டு விலங்கு அன்று. ஆனால் இந்திய நாட்டின் அனைத்து அரசுகளும் விரும்புகின்ற ஒன்று. ஓர் அரசாங்கத்தின் நால்வகைப் படையான தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படையுள், குதிரை படைக்குத் தேவையான ஒன்று.

அரேபிய வணிகர்கள் மிகுந்த இலாபத்திற்குக் குதிரைகளை விற்பதுடன் அதை வாங்குவதற்க அரசர்களும் போட்டி போடும் நிலையில் இருந்தனா. அதனால் குதிரை வந்தவுடன் முதலில் வாங்குவதற்காக அரசு ஊழியர்கள் துறைமுகத்தில் காத்து இருப்பர். தமிழ்நாட்டில் குதிரைகள் இறக்கமதி செய்யப்பட்டாலும் அவை இங்கு நீண்ட நாள் உயிர் வாழ முடியவில்லை. தட்ப வெப்பநிலை, உணவுப் பழக்கம் இவற்றால் அவை நோய் வாய்ப்பட்டன. அத்துடன் அடிக்கடி நுட்பம் பற்றி அரேபிய வணிகர்கள், வெளிப்படக்கூறாமல் மறைத்து வைத்ததால் வெறும் கால்களுடன் பல மைல் னரம் ஓடும் குதிரைகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் உயிர் நீத்தனர்.

இதனால் கப்பல் எப்போதும் வரும் என்று காத்திருந்து பெற்ற அரிய செல்வமாகக் குதிரை திகழ்ந்ததால் ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவி’ என்று சிறப்பிக்கப்பட்டது. சுங்க்கம் பண்டைக்காலத்தில் இறக்குமதிப் பொருள்களுக்கும், ஏற்றுமதிப் பொருள்களுக்கும் அரசு வரி விதித்தது. இவ்வரிகளுக்கு உல்கு, சுங்கம் என்ற பெயர்கள் வழங்கின. இத்தகைய வரியே அரசின் முக்கிய வருமானமாகும். காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் துறைமுகத்தில் இறக்குமதி பண்டங்களுக்கும், ஏற்றுமதி பண்டங்களுக்கும் சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளன.

நிலத்திலிருந்து வந்த பண்டங்களும், நீர் வழியாக வந்த பண்டங்களும் சுங்கச ; சாவடிக்குள் அனுப்பப்படுகின்றன. அவைகள் சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டதற்கு அடையாளமாகச் சோழனுடைய சின்னமாக புலி முத்திரையிடப்பட்டு, பண்டத்தின் நிறைக்கும், அளவுக்கும் ஏற்ப வரி வாங்கப் பட்டுள்ளது. இதனை,

“நீரினின்றும் நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்

அளந்து அறியாப் பல பண்டம்

வரம்ப அறியாமை வந்து ஈண்டி

அருங்கடிப் பெருங்காப்பின்

வலியுடைய வல் அணங்கின் நோன்

புலிப் பொறித்து புறம் போக்கி

மதி நிறைந்த மலி பண்டம்

பொறி மூடைப் போர் ஏறி”

(பட்டி.129-137)

என்னும் பாடல் வலியுறுத்துகிறது. நல்ல பாதுகாப்பையும், சிறந்த காவலையும் உடைய சுங்கச் சாவடியிலே இருந்து பொருள்களை வெளியிலே அனுப்புகின்றனர். இதனால் சுங்கவரி விதிக்கப்பட்டு வந்ததைக் காணலாம். பண்டங்கள் பாழடையாமலும், திருட்டுப் போகாமலும் சுங்கச் சாவடியிலே பாதுகாக்கப்பட்டன. இக்காலத்தில் இருப்பதைப் போல பண்டைக் காலத்திலும் இறக்குமதிப் பொருள்களுக்கும் ஏற்றுமதி பொருள்களுக்கும் அரசாங்கம் வரி விதித்தது. இவ்வரிக்கு ‘உல்கு’, ‘சுங்கம்’ என்ற பெயர்கள் வழங்கின. இத்தகைய வரியே அரசங்கத்தின் முக்கிய வருமானமாக அமைந்திருந்தது. காவிரிப்பூம்பட்டினத்து துறைமுகத்தில் இறங்கும் பண்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களுக்கும் சுங்க வரியுண்டு. நிலத்திலிருந்து வந்த பண்டங்களும் நீர் வழி வந்த பண்டங்களும் முதலில் சுங்கச் சாவடிகளுக்குள் அனுப்பட்டுள்ளன.

அரசாங்க சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டதன் அடையாளமாகச் சோழனுடைய புலி முத்திரை இலச்சினையாக இடப்பட்டது. பண்டத்தின் நிறைகளிலிருந்த கடல் மார்க்கமாக வந்த பண்டங்களை நிலத்திலே இறக்கவும் உள் நாட்டிலிருந்து தரைமார்க்கமாக வந்த பண்டங்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவதற்காகக் கடலில் உள்ள கப்பல்களில் ஏற்றவும் அளவற்ற பண்டங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன.

இதன் மூலம் சுங்க வரியின் விளக்கமும் இவ்வரி மூலம் பொருள் பாதுகாப்பாக இருந்தது என்பதையும் அறிய முடிகின்றது. காவிரிப்பூம்பட்டினம் வணிகச் சிறப்புமிக்க தலைநகரமாகவும் துறைமுகமாகவும் திகழ்ந்தது. உள்நாட்டு வாணிகமும், பன்னாட்டு வாணிகமும் செம்மையாக நடைபெற்றது. பண்டமாற்று வணிகம், நாணய வணிகமும் நடைபெற்றன.

உள்நாட்டு வணிகத்தில் அங்காடியின் அமைப்பும் தேவையும் விளக்கப்பட்டுள்ளன. வணிகர்களின் நடுநிலைமையும், உண்மையும். அறநெறி புலப்படுத்தப்பட்டுள்ளன. பன்னாட்டு வணிகத்தில் கடல்வழி கப்பலில் வந்த குதிரைக்கு முன்னுரிமை தரப்பட்டது. இறக்குமதி ஏற்றுமதிப் பொருள்களுக்கு உல்குவரி வசூலிக்கப்பட்டது. பல மொழி பேசும் பன்னாட்டு மக்களும் ஓரினமாக் காவிரிப்பூம்பட்டினத்தில் கலந்து வாழ்ந்தனர் என்பதைப் பட்டினப்பாலை வழி அறியமுடிகிறது.



Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com