வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 22 October 2019

கப்பலும் கட்டுமரமும்
2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி ஒன்றரைக்கோடி இந்திய மீனவர்கள் ஏறத்தாழ இரண்டு லட்சத்து எட்டாயிரம் (2,08,000) பாரம்பரிய மீன்பிடிப் படகுகளையும், ஐம்பத்தையாயிரம் (50,000) இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளையும் ஆயிரத்து இருநூற்று ஐம்பது (1,500) மின் விசைப் படகுகளையும், நூறு (100) ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

பழங்காலத்தில் அருகிலிருக்கின்ற தீவுகளுக்குச் சென்று வருவதற்காக மனிதன் சிறு படகுகளைப் பயன்படுத்தினான். மரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்த சிறு படகு ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் இருந்தது.அந்தப் படகுகளை அவர்கள் ஆழமற்ற நீர்நிலைகளில் மீன்பிடிக்கவும் பயன்படுத்தினார்கள். இன்றும் இத்தகைய படகுகள் அதன் ஆரம்ப காலத் தோற்றத்திலேயே ஆஸ்திரேலிய மற்றும் பாலினேசியப் பழங்குடிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

காற்றின் ஆற்றலை அறிந்து கொண்ட பின்னர் மனிதன் காற்றின் போக்கிற்கு ஏற்றவாறு நெடுந்தொலைவு பயணம் செய்யும் வகையில் பாய்மரத்தை உருவாக்கினான். 'தோணி' என்று தென்னிந்திய மக்களால் அழைக்கப்படுகின்ற ஒருவகைப் படகு இந்தியத் துணைக்கண்டம், கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை, அரேபியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது.

மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இந்த வகையான படகுகளைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. இன்னொரு பண்டைய தமிழ் இலக்கிய நூலான 'சேந்தன் திவாகரம்' நீண்ட கடல் பயணம் செல்லும் மரக்கலங்களை வகைப்படுத்துகிறது :-

1. வங்கம்,
2. பாதை,
3. தோணி,
4. யானம்,
5. தங்கு,
6. மதலை,
7. திமில்,
8. பாறு ,
9. சதா
10. போதன்தொல்லை
என்று பத்து வகைப்படும் என குறிக்கிறது
.
தோணியின் மற்ற பெயர்களாக பகடு, பஃரி, அம்பி, ஓடம், திமிலை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இது தவிர மலையாள மொழியில் வல்லம், வத்தல், வஞ்சி என்று படகுகளைக் குறிக்கின்ற சொற்களெல்லாம் பண்டைய தமிழ்ச் சொற்களேயாகும். சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வரும் இன்னொரு வகையான படகு தமிழ் மொழியில் ‘பரிசல் ' என்று அழைக்கப்படுகிறது. இது பிரம்பால் பின்னப்பட்ட கூடைபோல் இருக்கும். இன்றளவும் இது பயன்பாட்டில் உள்ளது.

அகநாநூறின் சில செய்யுள்கள் தமிழர்களின் தோணிகள் பெரியதாகவும், அதிக பயணிகளையும் பொருட்களையும் ஏற்றிச் செல்லத்தக்கதாகவும் இருந்ததாகச் சொல்கிறது. வழக்கமாக வேம்பு, நாவல், இலுப்பை ஆகிய மரங்களை நீரில் மூழ்கியிருக்கின்ற தோணியின் அடிப்பாகங்களைக் கட்டுவதற்கும், தேக்கு வெண் தேக்கு மரங்களை பக்கவாட்டு, மேற்பகுதிகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

'தோ' [Dhow] என்று அழைக்கப்படுகின்ற அரேபிய நாட்டுப் பாரம்பரியக் கப்பல் தோற்றத்திலும் உச்சரிப்பிலும் தமிழ்நாட்டுத் தோணியை ஒத்திருக்கிறது. சாதரணமாக தோணி ஒரு பாய்மரத்தைக் கொண்டது என்றாலும் பல பாய்மரங்கள் கொண்ட தோணிகளும் பயன்பாட்டில் இருந்து வந்தன. இந்த வகையிலான தோணிகள் பழங்காலத்தில் இந்தியா, பாகிஸ்தான், அரேபியா மற்றும் ஆப்பிரிக்கக் கிழக்குக் கடற்கரைகளில் புழங்கி வந்தன.

சிறிய அளவிலான தோணிகள் பன்னிரண்டு பணியாளர்களையும் பெரிய தோணிகள் முப்பது பணியாளர்களையும் கொண்டிருந்தன. இவை நீண்ட அடிப்பாகத்தையும் 300 முதல் 500 டன் எடையையும் கொண்டிருந்தன. ஒரு உடைந்த வெண்கல மணியொன்று 1836ஆம் ஆண்டில் 'வில்லியம் கொலேன்சோ' [William Colenso] என்ற பாதிரியாரால் நியூசிலாந்து நாட்டின் வடபகுதியில் 'வாங்கரெய்' [Whangarei] என்ற இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. அது மாவோரி பூர்வ குடிகளால் உருளைக்கிழங்கு வேக வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்த மணியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை தமிழ் எழுத்துக்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டன. 'முகையதீன் பக்சின் கப்பலின் மணி' என்று அவை மொழி பெயர்க்கப்பட்டன. அந்த மணி ஐநூறு ஆண்டுகள் பழமையானது. அந்த மணிக்கு வில்லியம் கொலென்சொ 'தமிழ் மணி' என்று பெயரிட்டார்.

சீன நாட்டின் காண்டன் [Conton] பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுக் குறிப்புகள் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் நீண்ட பயணம் செய்திருப்பதை உணர்த்துகின்றன. தமிழ் மக்கள் உலகுக்கு அளித்த மற்றுமொரு மதிப்பிட முடியாத பரிசு 'கட்டுமரம்'. இரண்டு அல்லது மூன்று மரத் துண்டுகளை இணைத்து கயிறால் கட்டப்பட்டதுதான் கட்டுமரம். இது ஒரு மனிதனை மட்டுமே சுமக்கக் கூடிய அளவுக்கு சிறியது. அதில் இருப்பவரின் கால்கள் கூட பெரும்பாலும் நீரில்தான் இருக்கும்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 'பரவர்கள்' என்ற மீனவ மக்களே கட்டுமரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலங்களில் கட்டுமரங்களைச் செலுத்த துடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் நீண்ட பயணம் செய்யும் நோக்கத்தில் பாய்மரங்களும் இணைக்கப்பட்டன. இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்ற 'கட்டமரான்' [Cattamaran] என்ற ஆங்கிலச் சொல் இணைத்துக் கட்டப்பட்ட மரம் என்று பொருள் தருகின்ற கட்டுமரம் என்ற வார்த்தையிலிருந்தே வந்தது.

தமிழ்நாட்டுக் கட்டுமரங்கள் தம் பழைய அமைப்பிலிருந்து கொஞ்சமும் மாறாமலேயே இருக்கின்றன. கட்டுமரங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்பாகங்களைக் கொண்டவை. தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள பல்வேறு வகையான கட்டுமரங்கள் பாலினேசியப் பூர்வகுடி மக்களின் கட்டுமர அமைப்பினை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் கட்டுமரம் என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கப் படுகின்றன. எனவே, இந்த கட்டுமரம் தமிழர்களின் கண்டுபிடிப்பு என்பதை நிறுவ முடியும்.

பதினைந்தாம் நூற்றாண்டுக் காலத்தில், தமிழ்நாட்டில், சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கடற்படையைக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பெரும்பான்மையான கப்பல்கள் கட்டுமர செயல்பாட்டின் அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டிருந்தன.

சோழர்களின் சில கப்பல்களின் சிறப்புகளைக் காண்போம்.

• 'தரணி' - ஆழ்கடல் போர்களில் இந்த வகைக் கப்பல்கள் பயன் படுத்தப்பட்டன

• 'லோலா' - காவல் பணிகளுக்கும் சிறு அளவிலான தாக்குதல்களுக்கும் இவை பயன்பட்டன.

• 'திரிசடை'  -  இது மூன்று பாய் மரங்களைக் கொண்டிருந்தது. வேகம் குறைவு என்றாலும் இந்தக் கப்பல் கனரக ஆயுதங்களைத் தாங்கி பல்முனைத் தாக்குதல்களில் பயன்படுத்தப் பட்டது.

ராஜ ராஜ சோழன் தனது கப்பல்களைக் கட்டும் பணியில் அரேபிய மற்றும் சீன நாட்டுப் பணியாளர்களை அமர்த்தியிருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தீப்பந்துகளை வீசக்கூடிய சீன நாட்டுப் பொறியமைப்பை சோழக் கப்பல்கள் பெற்றிருந்தன. இந்த மாதிரியான சிறப்புகளால் சோழர்கள் இலங்கை, மலேயா, இந்தோனேசியா, கம்போடியா ஆகிய நாடுகளின் மீது கடல்வழி படையெடுப்புகளை நடத்தி கி.பி 984க்கும் 1042க்கும் இடைப்பட்ட காலங்களில் அந்நாடுகளை ஆட்சி செய்தார்கள்.

சிறப்பான கடற்படையைக் கொண்டிருந்த ராஜேந்திர சோழன் கி.பி 1007 ஆம் ஆண்டில் விஜய நகரப் பேரரசின் மீது படையெடுத்தான். எதிரியின் கடற்படையை அழித்தது மட்டுமல்லாமல் 'கெடா ' பகுதியைக் கைப்பற்றி மலேயா தீபகற்பத்தில் சோழ ஆட்சியையும் நிறுவினான். பூம்புகார் நகரிலிருந்து பத்தொன்பது கல் தொலைவில் கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைவுகள் கி.பி 200- 848க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சோழர்களின் கப்பலைச் சேர்ந்தவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இந்தச் சிதைவுகளை மாதிரியாகக் கொண்டு அந்தக் கப்பலின் அடிப்பாகத்தைச் செய்து அதை திருநெல்வேலி கடல்சார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளார்கள். சோழர் காலத்தைச் சேர்ந்த கப்பலின் உருவங்களைக் கொண்ட கற்சிற்பங்கள் கம்போடிய நாட்டு 'அங்கோர்வாட்' [Anghorvat] கோவிலிலும், இந்தோனேசிய 'போரோபுதுர்' [Poropudur] கோவிலிலும் இருக்கின்றன. இவை சோழர்களின் கப்பல் கட்டும் திறனை பறைசாற்றுகின்றன.

இந்தோனேசியாவிலுள்ள பாலித்தீவு இன்றளவிலும் அழியாது வேரூன்றிய தமிழ்க் கலாசாரத்தைக் கொண்டிருக்கிறது.

• எண்பத்தேழு கல் நீளமும் ஐம்பத்தாறு கல் அகலமும் மட்டுமே கொண்ட இத்தீவில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுக்குள்ளாக தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்கள் இரண்டாயிரம் உள்ளன.

• 'யோக்யகர்த்தா' [ Yogyakarta] நகரில் அமைந்துள்ள பிரம்பனான் கோவில் [Perumpanan] அங்கே ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களின் கட்டிடக் கலைத்திறனுக்கு ஒரு அழிக்க முடியாத ஆதாரமாகத் திகழ்கிறது.

பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்நாட்டு மரக்கலங்கள் எழுநூறு பேர் வரையில் ஏற்றிச் செல்லத்தக்கதாக இருந்தன. தமிழ் மக்கள் கப்பல் கட்டும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததையும் அவர்கள் சிறந்த மாலுமிகளாக இருந்ததையும் இது எடுத்தியம்புகிறது.

டைக்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கிடையே அமைக்கப்பட்ட சோழர்களின் குடியிருப்புகள் சோழதேசம் என்று அழைக்கப்பட்டன. காலப்போக்கில் சோழதேசம் என்ற சொல் உச்சரிப்பு மருவி 'சல்தே' [Chaldea ] என்றானது.

இறந்து பதம் செய்யப்பட்ட எகிப்தியர்களின் உடல்களில் [Mummy] இருந்த துணிகளில் இருந்த இந்தியச் சாயமும் [Indian ink], 'பிர்ஸ் நிம்ருட் ' [Pirs Nimrut] என்ற இடத்தில் இருந்த 'நெபுகட் நெஸ்ஸா [Nepukatnezza] மன்னனின் மாளிகையிலும் 'உர்' [Ur] என்ற இடத்தில் இருந்த நிலாக்கடவுள் கோவிலிலும் கண்டெடுக்கப்பட்ட தேக்கு மரத்துண்டுகளும் தமிழ் நாட்டிலிருந்தே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் மேற்கு நாடுகளுடனான தமிழர் வணிகத் தொடர்புகளை விளக்குகின்றன.

பண்டைய தமிழ் எழுத்துகள் பொறித்த சில உடைந்த பானைத் துண்டுகள் 'க்வாசிர் அல் க்வாடிம்' '[Quseir-al-Qadim] மற்றும் 'பெரினிகே' [Bereneke] ஆகிய எகிப்திய செங்கடல் துறைமுகங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்த எழுத்துக்கள் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்த எழுத்துக்கள் 'உறிப்பானை' என்ற தமிழ்ச் சொல்லைக் குறிக்கின்றன.

செங்கடல் வழியாக தமிழ் நாட்டுக்கும் ரோம் நகருக்கும் இடையே இருந்த வியாபாரத் தொடர்புகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் அழுத்தமான ஆதாரங்களாகத் திகழ்கின்றன. செங்கடல் பகுதிகளில் தமிழ் மொழியின் வளமைக்கு மற்றுமொரு சான்றும் உள்ளது.

'ஆக்ஸிரிங்கஸ் பேப்பிராய்' [Oxyrhynkas papyri] என்ற பண்டைய கிரேக்க மொழி நாடகத்தின் கதாபாத்திரங்கள் தமிழ் மொழியில் பேசியதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த உரையாடல்களில் ஏறத்தாழ 1800 கடல் சார்ந்த தமிழ் மொழி வார்த்தைகள் இருந்ததாக மொழி வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

இது தவிர தென் அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற 'மாயன்' பூர்வகுடி மக்களின் முன்னோடிகள் உண்மையில் பண்டைக் காலத்து தமிழ்க் கடலோடிகளே என்ற கருத்தும் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது. மாயன் மக்களின் கருத்த நிறமும், அவர்களுடைய கற்சிற்பங்களில் காணப்படும் தலைப்பாகை அணிந்த மாவுத்தர்களுடன் கூடிய இந்திய யானை உருவங்களும், தமிழ்நாட்டின் தாய விளையாட்டை ஒத்திருக்கும் அவர்களின் சித்திரங்களும், தமிழர்களின் கட்டிடக்கலையை ஒத்த அவர்களின் கல் கட்டுமானங்களும் இந்தக் கருத்துக்கு உறுதியான சான்று தருகின்றன

'மார்க்கோ போலோ' என்ற ஐரோப்பியக் கடலோடி 1292 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்தியக் கப்பல்களைப் பற்றிச் சொல்கிறார்.: -

'மரத்தால் அவை கட்டப்பட்டிருந்தன.ஒவ்வொரு பாகமும் நல்ல முறையில் பலகைகள் பொருத்தப்பட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருந்தன. காய்ந்த சுண்ணாம்பும் தாவர இழைகளும் கலந்த கலவையில் ஏதோ ஒரு மரத்திலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் சேர்க்கப்பட்டு உறுதியாக்கப்பட்ட பூச்சு கப்பலின் அடிப்பாகத்தில் பூசப்பட்டிருந்தது.'

பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க்கப்பல்கள் அடுக்குகளாகக் கட்டப்பட்டன. கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தால் கூட பாதிப்பு எதுவுமின்றி தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் அது இருந்தது. தோணி, கட்டுமரம் ஆகியவற்றின் கண்டுபிடிப்பு மனித நாகரிகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. மனித சமுதாயத்தின் இந்த மிகப்பெரிய கொடையை வழங்கியதில் தமிழர்களின் பங்குக்காக தமிழர்களாகிய நாமும் பெருமை கொள்ளலாமே.

நன்றி : பழங்காலத் தமிழர் வரலாறு.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com