வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 13 May 2020

மூத்த கடலோடிகள்

   (கடற்கரையில் வாழ்ந்த தமிழர் கடலோடு ஒன்றிணைந்து வளர்ந்த அனுபவத்தை ஆதாரங்களுடன் விளக்குகிறது இக்கட்டுரை)

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த கடலோடிகளாகப் பரதவர்களும், இஸ்லாமியரும் அமைகின்றனர். நெய்தல் நில மக்களைக் குறிக்க பரவர், பரதர், பரதவர் என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் இடம் பெற்றுள்ளன. பரவர் என்ற சொல் பொதுவாக மீனவர்களைக் குறிக்க, பரதர் என்ற சொல் வணிகர்களைக் குறிக்கிறது. கடலில் சிறு படகுகளைச் செலுத்தி மீன்பிடித்து வந்த மக்களுள் ஒரு பிரிவினர் அவ்வனுபவத்தின் வளர்ச்சி நிலையாக ஆழ்கடலில் மரக்கலங்கள் செலுத்தி வணிகர்களாக மாறிய பின்னர் பரதர் என அழைக்கப்பட்டுள்ளனர்.

கடலில் சிறு படகுகளைச் செலுத்தி மீன்பிடித்து வந்த மக்களுள் ஒரு பிரிவினர் அவ்வனுபவத்தின் வளர்ச்சி நிலையாக ஆழ்கடலில் மரக்கலங்கள் செலுத்தி வணிகர்களாக மாறிய பின்னர் பரதர் என அழைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி என்ற ஊரிலுள்ள பழமையான பிராமிக் கல்வெட்டொன்றில் “மாப்பரவன்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ‘மா’ என்ற சொல் ‘பெருமை’ ‘செல்வம்’ ஆகியவற்றைக் குறிக்கும். (திவாகரம், 1363, 1539). எனவே பெருமை மிக்க பரவன், செல்வமுடைய பரவன் என்ற சொல்லுக்கு முன் ‘மா’ என்ற அடைமொழி இடம் பெற்றுள்ளது. பெரும் வணிகர்களாகப் பரதவர் விளங்கியதைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர்கள், மன்னனும் விரும்பும் அளவுக்குச் செல்வமுடையவர்களாக விளங்கியதை ‘அரசு விழைதிருவிற் பரதவர் மலிந்த பயங்கெழு மாநகர்’ என்று குறிப்பிடுகிறது.

எனவே கரையோர மீன்பிடிப்பை ‘திமில்’ (மீன் பிடிக்கவும், முத்துக் குளிக்கவும் பயன்படுத்தப்பட்ட திமில் என்ற கலனைக் ‘கொடுந்திமில்’, ‘திண்திமில்’ எனச் சங்க இலக்கியங்கள் பாகுபடுத்துகின்றன. போன்ற சிறு படகுகளின் துணையுடன் நிகழ்த்திய பரதவர்களில் ஒரு பிரிவினர் ஆழ்கடலில் செல்லும், மரக்கலங்களின் உரிமையாளர்களாகவும்,அதைச் செலுத்தும் தொழில் நுட்பம் அறிந்த கடலோடிகளாகவும், மரக்கலங்களில் பொருட்களை அனுப்பி வாணிபம் செய்பவர்களாகவும் மாறியுள்ளனர் என்று உய்த்துணரலாம்.

இவர்கள் தென்தமிழ்நாட்டின் கடற்கரை ஓரப்பகுதிகளில் மட்டுமின்றி இலங்கைக் கடற்கரைப் பகுதியிலும் கடல் தொழில் புரிந்துள்ளனர். இலங்கையில் கிடைத்துள்ள தொல்தமிழ்க் (தமிழ்ப்பிராமி) கல்வெட்டுகளில் பரத என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பரதவர்களிடமிருந்து ஈழநாட்டுப் பரதவர்களைப் பிரித்துக் காட்டும் வகையில் ஈழப் பரத என்ற சொல் அனுராதபுரம் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்செய்திகள் பரதவர்களின் தொன்மைச் சிறப்பினை வெளிப்படுத்துகின்றன.

மனுச் சஞ்சாரம் அருமையாயிருந்த அக்காலத்தில், அவ்விடங்களில் அடப்பன்மார் என்று வழங்கப்பட்ட பரவர் வனாந்தரத்துக்குள் மறைந்திருந்த மெழுகு, மயில்தோகை, புலித்தோல், யானைத் தந்தம் முதலிய திரவியங்களை முன் காசுகொடுத்து வாங்கி, பிற தேசங்களுக்குக் கொண்டு போகும்படி காலிக்கு வந்திருந்த ஐரோப்பிய வியாபாரிகளுக்கு விற்று வந்தார்கள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இதைக் குறிப்பிடும் ஜே. ஆர்.மிரண்டாவும், ஜே. வி. ரோட்ரிகோபும் (1947 : 3) (சந்தன மாதவின் கோவில் சரிதை) என்ற நூலில் இலங்கையிலுள்ள காலி என்ற துறைமுக நகரத்தின் கோட்டைக்குள்ளிருக்கும் முக்கிய தெருக்களில் ஒன்று பரவத் தெரு என்று அழைக்கப்பட்டு வருவதாக எழுதியுள்ளனர். இச்செய்தியின் படி இப்பரதவர்கள் வணிகர்களாகவும், மரக்கலங்களின் உரிமையாளர்களாகவும், மரக்கலங்களின் தலைவர்களாகவும், அரசுத் தூதுவர்களாகவும் விளங்கியுள்ளனர்.

பதினாறாம் நூற்றாண்டில் அரேபிய மூர்களுடன் ஏற்பட்ட மோதலையடுத்து இராமேஸ்வரம் தொடங்கிக் கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் வாழும் பரதவர்கள் அனைவரும் போர்ச்சுக்கீசியர்களின் துணையுடன் கத்தோலிக்கர்களாக மதம் மாறி, இன்று வரை அதில் நிலைத்துள்ளனர். இத்தகைய பாரம்பரியம் கொண்ட பிரிவினர் கடலோடிகளாகவும் விளங்கி வருகின்றனர். தோணியில் இயந்திரம், சிப் போன்ற நவீன சாதனங்கள் பொருத்தப்படும் வரை, தம் அனுபவ அறிவின் அடிப்படையிலேயே இயற்கையின் செயல்பாடுகளை அறிந்து அதற்கேற்பத் தோணியைச் செலுத்தி வந்துள்ளனர். பரதவர்களை அடுத்து, இஸ்லாமியர் கடலோடிகளாக விளங்கியுள்ளனர். குலசேகரன்பட்டிணம், காயல்பட்டிணம், கீழ்க்கரை அதிராம்பட்டிணம், முத்துப்பேட்டை போன்ற கடற்கரை ஊர்களில் இஸ்லாமிய வணிகர்கள் மற்றும் கடலோடிகளின் செல்வாக்கு அதிக அளவில் இருந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் வெல்லிங்டன் நகரிலுள்ள தோமினியன் அருங்காட்சியகத்தில் கப்பலில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இம்மணியின் மீது முகைதீன் பக்சுடைய கப்பலுடைய மணி என்ற தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. மணியின் மீது பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்தின் எழுத்தமைதியின் அடிப்படையில் பதினெட்டு அல்லது பத்தொம்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்ததாக இம்மணியின் காலத்தை இரா.நாகசாமி கருதுகிறார். பா.ஜெயக்குமார் (2001:91) இம்மணியின் எழுத்துப் பதிப்பு பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறார். அத்துடன் கடற்பயணத்தின் போது ஓசை எழுப்புவதற்காக இம்மணி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிறார். தமிழக இஸ்லாமியர்களின் தொலைதூரக் கடற்பயணத்திற்கான சான்றாக இக்கப்பல் மணி அமைகிறது. இவ்வாறு பதரவர்களையடுத்து இஸ்லாமியர்கள் கடலோடிகளாகத் திகழ்ந்துள்ளனர்.

சேதுபதி மன்னரின் ஆரதவு பெற்ற பெரிய தம்பி மரக்காயர் என்பவர் பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக் கடற்கரையில் ஆதிக்கம் செலுத்திய டச்சுக்காரர்களின் வாணிப நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார். (சிவசுப்பிரமணியன், ஆ., 2006 : 69 ‡ 74) தொன்மையான கடலோடிகளான நம் முன்னோர் உருவாக்கிய தோணி என்ற மரக்கலம் இன்று பல்வேறு மாறுதல்களை உள்வாங்கி தூத்துக்குடியில் நிலைத்து நிற்கிறது.

 - அருட்சகோதரி. விமலி FIHM,

                    இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com