வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 7 May 2020

கடலன் கல்வெட்டு
அநுராதபுர சாசனம் தமிழர்களாகிய சமணர்களைப் பற்றியும் கப்பலோட்டும் தமிழர்களை பற்றியும் குறிப்பிடுவதோடு, இளபரத எனும் ஒருவனையும் குறிப்பிடுகிறது. பரதர் சமூகத்தவரையே இலங்கைப் பிராமிச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன என்ற கருத்தை முன்பு இளைஞரான இத்தாலிய ஆய்வாளர் ஒருவர் முன்வைத்தார்.

அந்த குறிப்பு அண்மைக்கால ஆய்வுகளினால் உறுதியாகிவிட்டது. பொலன்னறுவையிற் கிடைத்த கல்வெட்டு ஒன்று பரதன் ஒருவனைப் பற்றி குறிப்பிடுகின்றது. அது அவனைச் ‘சாகரிக’ என்று வர்ணிக்கின்றது.

‘சாகரிக’ என்பது கடலன் என்பதன் பிராகிருத மொழிபெயர்ப்பாகும்.

கடலன் என்பது புராதனமான தமிழகத்துச் சாசனங்களிற் பாண்டியர்கள் தொடர்பாகச் சொல்லப்படுகிறது. கடலன் வழுதி என்பது அவற்றில் காணப்படுகின்ற ஒருவகை வர்ணனை. அவன் கடல் வாணிபம் செய்பவன் என்ற விளக்கம் இந்த கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள கப்பல் வடிவத்தினால் உறுதியாகின்றது.

பரத என்று குறிப்பிடப்படுபவர் மீனவர் என்று கொள்வதற்கு நாணயம் ஒன்றில் காணப்படுகின்ற விபரங்கள் ஆதாரமாகின்றன.

Polanaruwaஅந்த நாணயத்தின் ஒரு புறத்தில் ‘பரத திசக’ (பரதனாகிய திசனுடையது) என்ற வாசகம் பிராகிருத மொழியிலும் பிராமி வரி வடிவங்களிலும் எழுதப்பட்டுள்ளது. மறுபுறத்தில் மீன் உருவம் அமைந்திருக்கின்றது. பரத எனும் திசன் குலத்தால் மீனவரோடு தொடர்புடையவன் என்பது இதனாற் புலனாகிறது. பரதனைப் பற்றி 20க்கும் மேற்பட்ட சாசனங்களில் காணப்படுவது குறிப்பிடக்கூடியது.

புராதன காலத்து இலங்கையில் வாழ்ந்த பிராமணரிற் சிலர் தமிழராய் இருந்தனர். அரண்மனையிற் பிராமணரைப் புரோகிதராக நியமிப்பது வழக்கம். அநுரா என்ற அரசி அதிகாரம் செலுத்திய காலத்தில் நீலிய என்ற தமிழ்ப் பிராமணன் புரோகிதராக இருந்தான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. கிழக்கிலங்கையிலும் சைவசமய தொடர்புடைய பிராமணர் இருந்தனர் என்பதை அந்நூல் மூலமாக அறிய முடிந்தது. கலந்த என்ற பெயருடைய கிராமத்திற் சிவலாயம் இருந்தமை பற்றிய குறிப்பு அதிலே உண்டு. 

சாசனங்களிலும் மகா வம்சத்திலும் காணப்படுகின்ற குறிப்புகளின் அடிப்படையிற் பரத, வணிகர், பிராமணர் எனப் பல தொழில்கள் புரிகின்ற சமூகத்தவர்கள் இலங்கையில் தமிழ் சமுதாயத்தில் அடங்கியிருந்தார்கள் என்பது இப்போது தெளிவாகின்றது. வட இலங்கையில் உள்ள வரலாற்றுச் சார்புடைய தமிழ் நூல்களில் ஆதிகால வரலாற்றைப் பற்றி அறிவதற்கு அவை எந்த வகையிலும் பயன்படவில்லை.அவை காலத்தாற் பிற்பட்டவை. 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. 

ஆரிய சக்கரவர்த்தியின் குலத்து, யாழ்ப்பாணத்து அரசர்களுக்கு முற்பட்ட சமுதாய நிலைகள் பற்றி அவற்றின் ஆசிரியர்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை. பெருங்கற்காலப் பண்பாடு பரவியபோது காலப்போக்கில் சில ஊர்களை மையமாகக் கொண்டு சிற்றரசுகள் தோன்றியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஆனைக்கோட்டையில் பெருங்கற்காலக் கல்லறை ஒன்றிற் கண்டெடுக்கப்பட்ட வெண்கல மோதிரம் ஒன்றில் கோவேதன் என்ற சொல் காணப்படுகின்றது.

கலாநிதி சி.பத்மநாதன்
ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com