வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 17 May 2020

பரதவர் ... பரதர் / பரவர் .
கடலும் கடல் சார்ந்த நிலங்களில் வசித்து வந்த மக்கள் பரதவர் என்று இலக்கியங்கள் அழைத்தன. சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் ஆகியோர் நெய்தல் நிலத்து மக்கள் என்றும் இந்த இலக்கியங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். பரதவர் என்பது பரதர் என்று குறுகி உள்ளது. பரவை என்ற சொல்லுக்கு பெரும் நீர்ப்பரப்பு அல்லது கடல் என்று பொருள். பரவை என்ற சொல்லிலிருந்து பரவர் என்ற சொல் பிறந்துள்ளது.

"பரதவர் நுளையரோடு பறியர், திமிலர் சாலர்
கருதியக் கடலர் கோலக்கழியரே நெய்தல் நில மக்கள்",
 
                      -சூடாமணி நிகண்டின் சூத்திரம் 77
 
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த மக்கள் இவர்கள் என்பது இதன் மூலம் புலப்படும். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் இவர்களே என்பது ஆய்வாளர்களின் கூற்று. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்களைத் தென் திசை ஆண்ட *குறுநில மன்னர்கள் எனவும் கழக அகராதி பொருள் கூறுகிறது. (*குறுநில என்பது ஆய்வுக்கு உரியது).  
 
'அரசர் முறையோ பரதர் முறையோ (சிலப்பதிகாரம் (23--160)'
  
என்ற சிலப்பதிகார வரியின் வாயிலாக பரத குலத் தலைவன் அரசனுக்கு நிகரானவன் என்று அறியலாம். தற்காலத்தில் கடற்புரத்தை ஒட்டி வாழும் மக்கள் பரதவ குல சத்திரியர்கள் என்ற குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல், மீன் பிடித்தல், கடலில் பெருமீன் வேட்டையாடுதல், கலம் செலுத்துதல் போன்ற வீரமிக்க தொழில்களில் பரதவர்கள் சிறந்து விளங்கியதாக சங்க இலக்கியங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. நெய்தல் நில மக்கள் முத்துக்களையும், வலம்புரிச் சங்குகளையும் காணிக்கையாகச் செலுத்தி, தங்கள் கடல் தெய்வத்தை வழிபட்டனர்.
 
பாண்டிய நாட்டுச் செல்வமாகத் திகழ்ந்த கொற்கை முத்து பற்றி சங்க இலக்கியங்களும் வடமொழி இலக்கியங்களும் புகழ்ந்து பேசுகின்றன. குறுந்தொகை பாடல் 123 இல் இடம்பெறும் மீன் வேட்டம். திமில் வேட்டுவர் போன்ற சொற்கள் மூலம் மீன் பிடித் தொழிலின் சிறப்பைத் தெரிந்து கொள்ள உதவுகின்றன.

இனிதுபெறு பெருமீன் எளிதினில்மாறி (நற்றிணை 239:3)

 குன்றியனார் என்ற புலவர் நற்றிணை வரிகள் மூலம் பரதவர் கடலில் பிடித்த சுறா இறால் போன்ற மீன்களைப் பரதவர் மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றியதைக் குறிப்பிடுகிறார். உப்பு விளைவித்து வணிகம் செய்தோர் உமணர் என்றும் பெயர் பெற்றிருந்தனர். "நோன்பகட் டுமணர் ஒருகையொடு வந்த" என்னும் சிறுபாணாற்றுப்படை வரிகள் மூலம் எருதுகள் இழுத்துச் செல்லும் உப்பு வண்டிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
 
உமணர் தந்த உப்பு கொடை நெல்
 
 
என்ற வரிகள் மூலம் "உப்பை நெல்லுக்கு மாற்றியதை" புலவர் உலோச்சனார் கூறுகின்றார்:

 
நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்
கொள்ளிரோ வெனச் சேரிதொறும் நுவலும் (அகநானூறு 390)
 
நெல் லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரி விலை மாறு கூறலின் (அகநானூறு 44)
 
  
போன்ற அகநானூற்றுப் பாடல்கள் மூலம் நெல்லும் உப்பும் ஒரே மதிப்பில் இருந்தன என்று தெரிந்து கொள்ளலாம். பண்டமாற்று வணிகம் சங்க காலத்தில் நிலவியதும் இதன் மூலம் புலப்படுகிறது. பரதவர் சங்குகளுக்காக கடலுக்குள் மூழ்கியதையும் அவற்றை கள்ளுக்காக விற்றது பற்றியும் அக நானூறு கூறுகிறது. (அகம் 296- 8, 9, 350: 11-13).
 
 அகநானூறு பாடல்கள் 296- 8, 9; 350: 11-13 பரதவர்கள் சங்கு குளிப்பதற்காக கடலுக்குள் மூழ்கியதையும் இவ்வாறு கிடைத்த சங்கினை கள்ளுக்காக விற்றது பற்றியும் பேசுகின்றன. பத்துப்பாட்டு தொகை நூல்களில் ஒன்றானதும் ஆற்றுப்படை ஒன்றானதுமான பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலின் 320 முதல் 335 வரையிலான வரிகள் பரதவர் பற்றிய விரிவான செய்திகளை நமக்குத் தருகின்றன.
 
 மதுரைக்காஞ்சி என்ற பத்துப்பாட்டு நூல் பாண்டிய நாட்டுக் கடற்கரை நெடுகிலும் சங்கும் முத்தும் விற்கப்பட்ட செய்தியினை நமக்குச் சொல்கிறது. பாண்டிய நாட்டுத் துறைமுகங்களில் அரபு நாட்டின் குதிரைகள் வந்து இறங்கிய செய்திகளை மதுரைக் காஞ்சி பதிவு செய்துள்ளது. குதிரை பயிற்றுவிப்போராகவும் இவர்கள் பணியாற்றியுள்ளனர்.
  
முத்துசாமி இராமையா A.D.I.Sc.,
 Information Science & Documentation,
 Indian Statistical Institute
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com