வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 16 July 2020

மாசிக்கருவாடு

மாசி மீன் என்பதனை ஆங்கிலத்தில் Maldivian fish என்கின்றனர் ஆனால் உண்மையில் அது நம் தமிழகத்தோடும் ஈழத்தோடும் அதிக தொடர்புடைய ஒரு வகை உயர்ரக மீனாகும். மாசி மீன் என்பதை சூரை மீன் (Pelagic fish) எனவும் வழங்கலாம். காரணம் இவை கடலின் அலை போல கூட்டமாக வாழும் ஒருவகை மீனினம்.

டூனா மற்றும் ஸ்கிப்ஜாக் மீன்களை போல நெருக்கமாக இவை நீந்துவதால் இவற்றை அறுவடை செய்வது மிக சுலபம். ஆழ்கடல் மீன் என்பதால் தமிழரின் கடல் வணிப வாழ்வியலோடு பழங்காலந்தொட்டே இந்த மாசிமீன் தொடர்புடையதாக இருந்து வருகிறது. தமிழர்களை போல மலையாளிகளும், சிங்களர்களும் மாலத்தீவு மக்களும் இம்மீனுக்கு அடிமையானவர்கள் ஆவர்.

பழங்காலத்தில் கடல் வாணிபத்தில் அதிகமாக ஈடுபட்டு வந்த நம் மக்களுக்கு மாதக்கணக்கான கடல் பிரயாணத்தின் போது உடன் எடுத்துச்செல்ல ஏதுவான உணவாக நெல்லுமா ஒரட்டியும் மாசிக்கருவாட்டுச்சம்பலும் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. நெல்லுமா ஒரட்டி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் எனில் மாசிச்சம்பல் பத்து நாளுக்கு கூட கெடுவதில்லை. முந்தைய காலங்களில் மரக்கட்டை போல கடினமாக இருந்த அந்த கருவாடு தற்போது நவீனமாக அரைத்து்பொடியாக்கி எளிமையாக நம் கைகளில் கிடைக்கச்செய்துள்ளார்கள்.

மாசி மீனை கருவாடாக்குவதில் சில குறிப்பிட்ட நுணுக்கங்கள் உண்டு. பிடிபடும் மீன்களை தலை, குடல், இறக்கை, வால் மற்றும் மீனின் நடுமுள் ஆகியவற்றை நீக்கிவிட்டு அரைவேக்காடாக கொப்பரைகளில் உப்பு போட்டு வேக வைப்பார்கள். பின் வேக வைத்த மீனை இருட்டு அறை அல்லது கடற்கரை மண்ணில் குழி பறித்து கம்புகள் நட்டு அதில் குத்தி வைத்து வைக்கோல் போட்டு மூடி புகையில் பாதி அவிப்பார்கள், இதனை தான் வெள்ளைக்காரர்கள் Smoked Preservation என்கின்றனர். இவ்வாறு புகையில் வேகவைத்த மீன் அடுத்த மூன்று நாளுக்கு வெய்யிலில் காய வைக்கப்படும். முற்றிலுமாக நீர் வற்றி காய்ந்த பிறகு அந்த மீன் மரக்கட்டையை போல இறுகிப்போய்விடும். அதன் நிறமும் கொஞ்சம் உளுத்துப்போன மரக்கட்டை மாதிரியே மாறிவிடுகிறது. பிறகு அது இரண்டு வருடம் வரை கெடாது,நாற்றம் வராது. அதன் சுவையும் அலாதியாக கூடிவிடும்.

தமிழகத்தின் கடற்கரை மக்களுக்கு சூரை மீன், வாளை மீன், சீலா மீன் (நெய்மீன்) போன்றவை பச்சை மீனாக உண்பதை விடவும், இப்படி கருவாடாக மாற்றி உண்பதே மிக பிடிக்கும். விலை உயர்ந்த மீன் வகைகளை கருவாடாக மாற்றி, சீசன் மாத்திரமல்லாது வருடம் முழுக்க உண்ணும் பழக்கம் அவர்களிடத்தில் உண்டு. கருவாடு என்பது தமிழர்கள், இந்தியர்கள் உணவு என்பதை மீறி இங்கிலாந்து முதல் ஜப்பான் வரையிலும் ஒரு உன்னத உணவாக கொண்டு சேர்த்த பெருமை தமிழர்களுக்கு உண்டு.

பலநாட்கள் கப்பல் பிரயாணம் செய்வோருக்கு ஏதுவான உணவாக ஒரொட்டியும் மாசி சம்பலும் கை கொடுக்கும் என்றால் அது மிகையல்ல. புளியிட்டு தயாராக்கப்படும் உணவுகள் ஒரு வாரம்வரை கெடுவதில்லை அதுபோலத்தான் இந்த மாசி கருவாடும்.

மாசி சம்பல் செய்முறை:
(Raw chambal)

மாசி துண்டை நன்றாக அம்மியில் தட்டி, காய்ந்த மிளகாய் அதனுடன் சிறிய வெங்காயம் நறுக்கி போட்டு கொஞ்சமாக தேங்காய் துருவி அனைத்தையும் சேர்த்து பிசைந்து உப்புடன் சில சொட்டுகள் எலும்பிச்சை சாறு சேர்ந்து கருவேப்பிலையுடன் சேர்த்து இறுதியில் கிடைப்பதே மாசி சம்பல் ஆகும்.

Cooked chambal:

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி/ கொஞ்சம் அம்மியில் நசுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு ஒரு சிட்டிகை சீரகம் பொறிய விட்டு, வெங்காயம் தக்காளியை போட்டு அதில் கொஞ்சம் மிளகாய்ப்பொடி, உப்புத்தூள் தூவி தண்ணீர் சேர்க்காமல் மீதமான தீயில் வேக வைத்த பிறகு இறுதியாக மாசிப்பொடியை தூவி சிறிது நேரம் பிரட்டியெடுத்தால் நாவிற்கு சுவையான சம்பல் ரெடி. ஒரட்டி மாத்திரமல்லாது, இட்லி, இடியப்பம், ஆப்பம், தோசை மற்றும் சாம்பார் சாதம், ரசம் சாதம் இவற்றுக்கும் சக்கையாக பொறுந்தும் ஒரு சைடிஷ் இது.

தமிழர்களுடன் தொடர்புடைய மலேசிய, இந்தோனேசிய, தாய்லாந்து மற்றும் கொரிய மக்களுக்கும் இந்த சம்பல் நாவில் எச்சில் ஊறச்செய்யும் ஒரு விருப்பமான பதார்த்தம் ஆகும். இதன் தயாரிக்கும் முறை இப்போது வெவ்வேறாக மாறியிருந்தாலும் அதன் தேவை எப்போதும் ஒரே போலவே இருந்து வருகிறது. மற்ற கருவாட்டு உணவுகளை அதன் நாற்றம் காரணமாக உண்ண விரும்பாத குழந்தைகள் கூட இந்த மாசிக்கருவாட்டினை வெருப்பதில்லை.

வெளிநாட்டுவாசிகளுக்கு சால்மன் மீன் தான் விலையுயர்ந்தது என்றால் நமக்கு இந்த மாசி மீன் தான் விலையுயர்ந்தது. அவர்கள் குட்டி குட்டி மஞ்சள் டூனா மீன்களை சார்டின்களாக மாற்றியதற்கு முன்னரே நாம் மாசி மீன்களை வைத்து வெளுத்து வாங்கியவர்கள்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com