காவிரிபூம்பட்டின பண்டகசாலை
வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்ற
ஏழகத் தகரோடு உகளும் முன்றில்
பட்டினப்பாலை - 14
தெளிவுரை:

மேகங்கள் கடலில் இருந்து எடுத்த நீரை மலையில் சேர்த்தன அந்நீர் மீண்டும் கடலிலே சேர்ந்து, அது போல் கடலில் வந்த பொருட்களை நிலத்தில் இறக்கியும், நிலத்திலிருந்து வந்த பொருட்களை நீரில் செல்லும் கப்பல்களில் ஏற்றியும் பரப்பினர், அங்கணம் வந்த பொருட்கள் அளந்து அறிய இயலாத பல பொருட்கள் வந்திருந்தன, அந்த பொருட்களை கடுமையான காவல் பொருந்திய சுங்க சாவடியில் சோழரின் புலிச்சின்னம் பொறித்து வெளியே அனுப்பினர், மதிப்பு மிக்க, கிடைத்தற்கறிய பொருட்கள் மூங்கில் கூடைகளில் மலை போல் குவித்து வைக்கப்பட்டன, அம்மலையில் மேகங்கள் தவழ்வது போல் வருடை மான்கள் இருந்தன, கூர்ந்த நகங்களை கொண்ட ஆண்நாய்களுடன், ஆட்டு கிடாய்களுடன் பண்டக சாலையின் முன்புறம் தாவி குதித்து விளையாடின.