வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 24 July 2020

பனிமய மாதா திருவிழா - ஆயர் வேண்டுகோள்

பனிமய மாதா திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்: ஆயர் வேண்டுகோள்

தூத்துக்குடியில் வருகிற 26ம் தேதி துவங்க உள்ள பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும், திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சி, மற்றும் யூடியூப் சானலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். என ஆயர் ஸ்டீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

பல லட்சம் மக்கள் பங்கு பெறும் தூத்துக்குடி உலகப் பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டில் நடைபெற உள்ள திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், கத்தோலிக்க ஆயர் ஸ்டீபன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஆயர் ஸ்டீபன் கூறியதாவது: முத்துநகரின் குலதெய்வமாக கருதப்படும் பனிமய மாதாவின் பெருவிழா கடந்த 438 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிபவனி, திருவிருந்து விழா, நற்கருனை பவனி ஆகியவை நடைபெறாது.

திருவிழா வருகிற 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி பெருவிழா அன்று தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன், பாளையங்கோட்டை ஆயர் அந்தோணிசாமி, பணி நிறைவு பெற்ற ஆயர் ஜூடு பால்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தினமும் காலை 5.30, 6.30, 7.30, 8.30 மணிக்கு திருப்பலி நடைபெறும். திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சி, மற்றும் யூடியூப் சானலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். கரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவும், தூத்துக்குடி நகரில் ஏற்படும் சிக்கல்கள் களையப்படவும் இந்த ஆண்டு இறைமக்கள் தங்களது இல்லங்களில் இருந்தே அன்னையிடம் மன்றாடி இறையாசி பெற வேண்டுகிறோம் என்றார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, "வரும் ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பனிமய மாதா ஆலய திருவிழாவில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்" என்றார். முன்னதாக திருவிழா தொடர்பான அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில், ஆயர் ஸ்டீபன், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வருகிற 26ம் தேதி திருவிழா துவங்க உள்ள நிலையில், பனிமய மாதா ஆலயத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதியைச் சுற்றி பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 800 போலீசார் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com