வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 1 July 2020

சங்க இலக்கியத்தில் கடல் வணிகம்
தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர். இவற்றிற்கு வரலாற்றுச் சான்றுகளும், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும், கல்வெட்டுச் சான்றுகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளனர்.சங்க இலக்கியங்களும் தமிழர்கள் வேறு நாட்டினரோடு கடல் வணிகம் கொண்டிருந்தனர் என்பதற்குப் பல்வேறு சான்றுகள் தருவதை பின்வருமாறு காணலாம்.

நற்றிணைப் பாடலொன்றில் (295: 5, 6) பல்வேறு நாட்டிலிருந்தும் தமிழகத்தின் துறைமுகங்களுக்கு நாவாய்கள் வந்தன என்பதை அறிய முடிகின்றது!

"வேறு பன்னாடிற் காறர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெருத்துன"
(நற்றினை 295 - 5 - 6)

அக்காலத்தில் தமிழகத்தில் சிறப்புற்றிருந்த, முத்தும், பவளமும், சங்கும், ஆரமும், அகிலும், மிளகும், வெண் துகிலும், பிற நாட்டினரின் மனதைக் குறிப்பாகக் கிரேக்கர், உரோமர் மனதை அதிகம் கவர்ந்தன. இவர்களைத் தமிழ் இலக்கியம் யவனர் என அழைக்கின்றது! அவர்கள் பொன்னைக் கொண்டு வந்து தமிழகத்திற்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பண்டமாற்றாக மிளகை எடுத்துச் சென்றனர் என்ற செய்தி அகநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலம் (149: 9,10) தெரிய வருகின்றது.

" யவனர் தந்த வினைமா ணன் கலம்
பொனனொடு வந்து கறியொடு பெயரும் "
அகநானுறு (149, 9, 10)

இதனால் பொன்னும் மிளகும் பண்டமாற்றாகப் பயன்படுத்தப்பட்டதை பின்வருமாறு அறியலாம்! நெடிய பாய்மரத்தோடு கூடிய மரக்கலங்கள் பொன்மிகுதற்குக் காரணமாகிய சிறந்த பொருட்களைக் கொண்டு வந்தன என்றும், துறைமுகங்களில் மேலை நாட்டுக் குதிரைகளும், பிற பொருட்களும் மரக்கலங்களில் வந்து இறங்கின என்றும் கீழ்வரும் அடிகளால் அறியலாம்!

சோழ நாடு

சோழநாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய பூம்புகார் கடலோடு கலக்குமிடத்தில் அமைந்துள்ளது! இங்குப் பெரிய கப்பல்கள் பிற நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்து இறக்கின என்றும், அக்கப்பலின் பாய்கள் விரித்த நிலையிலே இருந்தன என்றும் புறநானூற்றுப் பாடல்வரிகள் (30:10-14) கூறுகின்றன! அந்நிய நாடுகளிலிருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாக காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், பல பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் பட்டினப்பாலை வரிகள் (125-141) குறிப்பிடுகின்றன. .

பல்பொருளும் குவிந்து கிடக்கும் காவிரிப்பூம்பட்டனத்துப் பண்டகசாலை...

வெளியே அனுப்புவதற்காகக் குவிந்து கிடக்கும் பண்ட மூட்டைகளின் மீது சோழனுடைய புலி வடிவம் முத்திரையிடப்பட்டு இருந்தன! புலி முத்திரையிடப்பட்ட பண்டங்கள் தான் வெளியேற முடியும். முத்திரையிடப்படாத பண்டங்கள் வெளியேற முடியாது.

ஏற்றுமதியும், இறக்குமதியும் இவ்வளவு கட்டுக் காவலுடன் அக்காலத்திலே தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன என்பதற்கு இதுவே நல்ல சான்றாகும்.இந்த ஏற்றுமதி இறக்குமதிகளைக் குறித்து எவ்வளவு அழகாக உவமானத்துடன் பட்டினப்பாலை உரைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்...

மழைக்காலத்தில் மேகங்கள் கடலிலே முகந்த நீரைக் கொண்டு போய் மலைகளிலே பெய்விக்கின்றன. மலைகளிலே பெய்த நீர் அம்மலைகளிலேயே தங்க விடுவதில்லை. அந்த நீரை ஆறுகளும், கால்வாய்களும் கடலிலே கொண்டு போய்ச் சேர்க்கின்றன.இவ்வாறு கடல்நீர் மலையேறுதலும், மலைநீர் கடற்பாய்தலும் மாரிக்காலத்தில் நடைபெறும் காட்சி.

இதைப்போன்று காவிரிப்பூம்பட்டினத்திலே எப்பொழுதும் கடல் வழியாகப் பண்டங்கள் வந்து நிலத்திலே இறங்கிக் கொண்டிருக்கின்றன. நிலத்தின் வழியாகப் பல பண்டங்கள் நீரில் மிதக்கும் கப்பல்களிலே ஏற்றப்பட்டன! பட்டினப்பாலை பாடல் வரிகள் 185-193 வாயிலாக:

குதிரை, மிளகு, மணி, பொன், அகில், முத்து, ஆரம், துகில், ஈழ நாட்டு உணவு போன்ற பொருட்கள், காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களாக விளங்கிய செய்தியை அறிய முடிகின்றது!

மேலே கூறியவற்றைக் கொண்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காவிரிப்பூம்பட்டினம் ஒரு வணிக நகரமாக விளங்கியதை அறியலாம்...

பூம்புகாரின் செல்வ வளம் நிறைந்த வீதிகள்...

தொண்டை நாட்டிலுள்ள நீர்ப்பெயற்றுத் துறையில் வெள்ளிய தலையாட்டத்தையுடைய குதிரைகளையும், வடநாட்டு நுகர் பொருள்களையும் ஏற்றி வந்த நாவாய்கள் நிரம்பக் காணப்பட்டதாகப் பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (319-321) கூறுகின்றன!

சேர நாடு

தமிழகத்தின் மேற்குக் கடற்கரையாகிய சேர நாட்டுக் கடற்கரையில் முசிறி துறைமுகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்! இங்கு மிளகு பெருமளவில் கிடைத்தது. இத்துறைமுகத்தில் நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி பற்றிய செய்தியைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று பின்வருமாறு வருணிக்கின்றது!

மீன்களை விற்று அதற்குப் பண்டமாற்றாகப் பெற்ற நெற்குவியல்கள் காண்போர் மயங்கும் வகையில் கழிகளில் இயங்கும் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வரப்பட்டன. மலையில் விளைந்த பொருள்களையும் கடலிலிருந்து கிடைத்த பொருள்களையும் கலந்து பாணர்களுக்கு வழங்கும் முசிறி நகரச் சிறப்பையும் காணலாம்!

பாண்டிய நாடு :

வெளிநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பொருட்களில் மிளகைப்போல் சிறந்தது முத்து ஆகும். பாண்டிய நாட்டின் வளம் பொருந்திய துறைமுகமாகிய கொற்கையில் முத்துக் குளித்தல் சங்ககாலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றதை அகநானூறு (130:9-11) எடுத்து இயம்புகின்றது! இந்தியாவிலே முத்துக் குளிக்குந் தொழில் பாண்டிய நாட்டிலுள்ள கொற்கையிலே சிறப்புற்றிருந்தது. முத்துக்குளிக்கும் இத்தொழில் தமிழகத்தில் உயர்தரமான ஓடங்களையும், தோணிகளையும் நாவாய்களையும் கட்டுவதற்கு ஒரு காரணமாகவும் விளங்கியது! கொற்கை.

அதோடு யவனர்கள் பாண்டிய நாட்டைத் தேடித் தங்கள் கப்பல்களில் பொற்காசுகளையும் பொற்கட்டிகளையும் ஏற்றிக்கொண்டு வரவும் காரணமாய் இருந்தது!.  இதுகாறும் கூறியவற்றால் தமிழர் சங்க காலத்துக்கு முன்பும் சங்க காலத்திலும் கடல் வணிகத்தில் சிறந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது!

நன்றி: தங்கபழனி 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com