வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday 27 July 2020

இடிந்தகரை கடற்கரை அமைப்பு

தற்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரியாத 
இடிந்தகரை கடற்கரை அமைப்பு



இடிந்தகரை கடற்கரையின் அமைப்பு:

இடிந்தகரை ஊருக்கு கிழக்கே மேற்கேயுள்ள சுமார் 5 கி.மீ நீளம் கொண்ட நீண்ட கடற்கரைப் பகுதி வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.கிழக்கிலிருந்து மேற்காக கடற்கரையின் பிரிவுகளைப் பார்ப்போம்.

அருவிக்கரைப் பரப்பு

இடிந்தகரை ஊரின் கிழக்கு எல்லை.ஆறும் கடலும் சங்கமிக்கும் வெண்மணல் பரப்பால் நிரப்பப்பட்ட பரந்து அகன்ற முகத்துவாரம்.இப்பகுதி கடலின் ஆழம் மிகவும் குறைவு.

அருவிக்கரை முனை

அருவிக்கரை பகுதியில் நிலப்பரப்பு முனை போன்று கடலை நோக்கி நீட்டிக் கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.இதை அடுத்த கடற் உட்பகுதி தொண்டு என்று வழங்கப்படுகிறது.

நக்கி ஓடை

காட்டோடை ஒன்று கடலுடன் சேரும் பகுதி.இப்பகுதியில் தலை வடிவில் பெரிய பாறை உள்ளது.இது பருந்தலை பார் எனப் படுகிறது.

கொடுவாய் முனை

நத்தைகளால் உண்டான படிம பாறைகளின் வாய்ப்பகுதி விளிம்புகள் ஒழுங்கற்று உடைந்து கடலுக்குள் நீட்டிக்கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இப்பகுதியிலிருந்த நத்தைகள் பெருமளவில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டு கடற்கரைப் பகுதியில் படிமமாகி இப்பாறைத் தொடர் உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இப்பாறைத் தொடரின் முடிவுப் பகுதியிலிருந்து கிழக்கில் கடற்கரைக்குச் செல்ல கீழிறங்கும் பகுதி இறங்கும் கொடுவாய் எனப்படுகிறது.

கொடுவாய் முனை அந்தோனியார் கோவில்

புனித அந்தோனியார் கோவில் உள்ள பகுதி.

குடாக்கரை - கிடாங்கரை

கொடுவாய் முனையின் தொடர்ச்சியான மேற்குப்பகுதி.சுண்ணாம்பு பாறைகளளானது.இடிந்தகரை என்று ஊருக்குப் பெயரைத் தந்த பகுதி.அமைதியான, ஆழமான வளைவான கடற்பரப்பு என்பதால் இப்பெயர். இதையடுத்து மூரைப் பாரும்,நாலு முக்கு பாரும் உள்ளன.

குளம்பல்

“குளம் போல்” குடாப்பகுதியில் கடல் நீர் அமைதியாக காணப்படுவதால் குளம்பல் எனப் பெயர் பெற்றது.இது பாறைகள் நிறைந்த பகுதி.

குளம்பல் பாறை

குளம்பல் பகுதியில் இருந்த வட்டவடிவ பாறை குளம்பல் பார் அல்லது வட்டப்பாறை எனப்பட்டது.சுனாமிக்குப் பிறகு தூண்டில் பாலம் இதன் மேல் அமைக்கப்பட்டதால், இப்பாறை மறைந்துவிட்டது.

குருசடி தாவு

மரச் சிலுவை ஒன்று கரை ஒதுங்கிய பகுதி.இச்சிலுவையை வைத்து குருசடி ஒன்று கட்டப்பட்டதாலும், தாழ்வான ஆழமான பகுதி என்பதாலும் இப்பெயர் பெற்றது.இப்பகுதியில் ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ருவரி மாதங்களில் தங்க நகைத் துண்டுகள் கரை ஒதுங்குவதுண்டு.

தியோபிளேரன் பாறை

தியோகு என்பவருடைய வீட்டிற்கு நேர் தெற்கே உள்ள பெரிய பாறை தியோபிளேரன் பார்எனப்படுகிறது.இந்தப் பகுதியில் முன்பு வீடுகள் இருந்ததாக கருதப்படுகிறது.கடல் நீர் முன்னேறியதால் வீடுகள் மூழ்கியதாக கூற ப்படுகிறது.

வாழைத்தோட்டம்

கடற்புறத்திற்கு எப்படி வாழைத்தோட்டம் என்ற பெயர் வந்தது என்பது புதிராக உள்ளது.முன்னர் இப்பகுதியில் கடல் பின்னே இருந்ததாகவும்,இப்பகுதியில் வாழைத்தோட்டம் இருந்ததாகவும் சொல்வாருண்டு.

பண்ணிப்பிள்ளை ஓடை

அகன்ற ஓடை ஒன்று கடலில் சேரும் இடம்.

மீன் வாடி

மீன் விற்பனைச் சந்தை

கொப்புளி பாறை

மனிதர்களின் தொப்புள் வடிவத்திலான கடல் சாமந்தி எனப்படும் கடல் வாழ் விலங்குகள் இப்பகுதி பாறைகளில் ஒட்டி வாழ்வதால் இப்பெயர் பெற்றது.கொப்புளி என்பது தொப்புள் என்பதன் மரூவு ஆகும்.

ஜானிப் பிள்ளை ஓடை

மழை நீர் ஓடை ஓன்று கடலுடன் சேரும் இடம்.

தேளிப்பாய் முனை

தேளி மீன்கள் அதிகம் பாய்வதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். கட்டுமரப் பாயின் கீழ் முனை மூட்டுப்பாயும்,தாமான் பாயும் தேளிப்பாய் என்ற முக்கோண வடிவ துண்டால் இணைக்கப்பட்டிருக்கும்.இப்பகுதியில் உள்ள நிலப்பரப்பு முனை முக்கோண வடிவில் கடலினுள் நீட்டிக்கொண்டிருக்கும்.இதுவும் இப்பெயர் வரக் காரணமாக இருக்கலாம்.இதையடுத்த முனைப் பகுதி கிளாப்பரப்பு முனை எனப்படுகிறது.

செங்கழுநீர் நீர் ஓடை

இடிந்தகரையின் வடமேற்கே உள்ள உயரமான சுண்ணாம்புக் கல் நிரம்பிய பகுதி முறம்பு என்று அழைக்கப்படுகிறது.மழைக்காலங்களில் மழைநீர் இங்கிருந்து பெருக்கெடுத்து ஓடி செம்மண் பூமி வழியாக வருவதால் செந்நிறமாகி செங்கழுநீர் ஓடை எனப் பெயர் பெற்று கடலில் கலக்கும் இடம்.

பெரிய முள்ளி
முட்கள் போன்று கூர்மையான இலைகளைக் கொண்ட தரைப் படர் முள்ளிக் கொடிகள் இந் நிலப்பரப்பில் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் பெற்றது .

சின்ன ஓடை
சிறிய மழைநீர் ஓடை ஒன்று கடலில் சேரும் இடம் .

சமஞ்சோடை
பாறைகள் நிறைந்த ஓடைப் பகுதி .

வெள்ளை
பாறைகள் இல்லாத வெண்ணிற சமதள மணற்பரப்பு.வெள்ளைப் பகுதியை அடுத்த கடற்கரை பகுதிகளுக்கு வரிசையாக மரக்குண்டு முனை,தில்லை நக்கி ஓடை ,பெரிய ஓடை, கருங்கல் முடுக்கு ,கிணத் தோடை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகள் தட்டையான கடற்கரை பரப்பை கொண்டவை.எனவே கட்டு மரங்களை எளிதாக ஏற்றி இறக்க இயலும்.

யானைக்கல்

இடிந்தகரை கடற்கரையின் மேற்கு எல்லை. யானை போன்ற தோற்றத்தில் பெரிய பாறை ஒன்று கடற்கரை ஓரத்தில் உள்ளது.இரண்டாம் உலகப்போரில் தாக்கப்பட்ட கப்பல் ஒன்று தரைதட்டிய இடம்.

பெரியமுள்ளி முதல் யானைக்கல் வரை ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் கட்டுமரங்களை ஏற்றி இறக்க வசதியான அழகான கடற்கரை பகுதி.தற்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையதின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் மீனவ மக்கள் பயன்படுதவியலாத நிலையாகிவிட்டது.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com