கூரப்பாய்
பண்டைக் காலங்களில் இருந்தே காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தியே கடலோடிகள் கட்டுமரங்களை பாய் என்ற சாதனம் மூலம் கடலில் செலுத்தி மீன்பிடித்து வந்தனர்.இடிந்தகரை கடலோடிகள் பாயை "கூரப்பாய்" என்று அழைக்கின்றனர்.
பாய் தடித்த உறுதியான 21 மீட்டர் நீளமுள்ள மல் துணியை குறிப்பிட்ட வடிவில் வெட்டி தைக்கப்பட்டு செய்யப்பட்டது. இது கிட்டத்தட்ட முக்கோண வடிவில் இருக்கும்.இந்த துணியின் உறுதியை அதிகரிப்பதற்கும் அதிலுள்ள நுண் துளைகளை அடைத்து காற்றின் உந்து சக்தியை அதிகரிக்கவும் வாரம் தவறாமல் துவர்த் தண்ணீரில் ஊற வைப்பர்.

மறுநாள் அதனை வெயிலில் உலர்த்தி, பாயின் ஓரங்களில் பிறையப்பட்டிருக்கும் கண்ணிகளை வலுவான கயிறு கொண்டு பருமல் எனப்படும் மூங்கில் அல்லது தேக்கு களையில் கட்டி கட்டுமரத்தின் அணியத்தில் உள்ள வாரிக்கலில் பொருத்தி பயன்படுத்துவர்.இப்படி கட்டப்படும் கூரப்பாய் காற்றைத் தடுத்து,காற்றின் திசைக்கேற்ப கட்டுமரத்தை ஓடச் செய்கிறது
தற்போதைய பிளாஸ்டிக் கட்டுமரங்களில் மல் துணிப்பாய்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் இழைகளினாலான பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. துணிப் பாய்களைப் போன்று இவற்றை துவர்த் தண்ணீரில் ஊறவைக்க வேண்டிய தேவை இல்லை.