வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 13 August 2017

விடிந்தகரை 1.1
என் சொந்தங்களுக்கு விடிந்தகரை என்னும் வீரமிக்க பரதவ சரித்திர தொடரை எழுத தொடங்குவதற்குத் முன்பு சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், நம்மை நாமே புரிந்து கொள்ளவும் வேண்டுமென வேண்டுகிறேன். இன்று தமிழ் உலகில் வாழும் எந்த இனத்திற்கும் இல்லாத பெருமை கொண்டவர்கள் நாம். நமது பரதவர்கள். ஆதி முதல் இன்று வரை நமக்கான வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டவர்கள் நாம். 


சங்கத்து இலக்கியமானாலும், பண்டை பாரத இதிகாசம் ஆனாலும், பரதவர் என்னும் ஒற்றைச் சொல்லே இன்று வரை பிறழாமல் பயணப்பட்டு வந்து நம் தலை மேல் மகுடமாய் ஏறி நிற்கிறது. 1500 களில் பாராண்ட பரத குலத்து பாரம்பரிய முத்துகுளித்தலும், பரதவக் கடலும் மதுரை நாயக்க அரசால் அரேபிய மூர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. சொந்த மண்ணிலேயே சித்திரவதைகளுக்கும், சீர்கேடுகளுக்கும் ஆளாகிப் போயினர் தொல் பாண்டி பரதவர்கள். மீண்டும் தன் மாட்சிமையைப் பெற்றெடுக்க போராடத் துணிந்த பரதவர்கள் போர்த்துக்கீசியரிடமிருந்து ஆயுதம் வாங்க கொச்சினுக்குப் போனார்கள். 

துப்பாக்கிக்குப் பதிலாக தூக்கிக்கொண்டு வந்தது என்னவோ சிலுவையைத்தான். அன்று முதல் பாரமான மத சிலுவை பரதவர்களின் தோள்களிலே சுமத்தப்பட்டது. சுற்றி சூழ் பகைவர்களிடமிருந்து தப்பிப் பிழைக்க எடுத்த முடிவு 1530 களிலிருந்து 1700 களுக்குள் பாண்டி பரதவனுக்குள் மூன்றில் இரண்டு பங்கை மதத்திற்காகவும், தன்மானத்திற்காகவுமே காவு கொடுத்தது. துவக்கத்தில் பாதுகாத்த போர்த்துக்கீசியர் சவேரியார், கிருமினாலி, ஹென்றிகஸ் போன்ற தூயவர்கள் பின்னால் இந்த பரதவ சமூகம் திரண்டதைக் கண்டதுமட்டுமில்லாமல் அவர்கள் போர்த்துகீசிய ஆட்சியாளர்களை ஒதுக்கியதால் ஜெஸ்யூட் என்னும் சேசு சபைக்கும், போர்த்துகீசிய ஆட்சியாளர்களும் இடையேயான அதிகாரப் போட்டி உருவானது. 

அதன் காரணமாகவே போர்த்துகீசியர்களாலும் பரதவர்கள் துன்புறுத்தப்பட்டனர். எண்ணிலடங்காதவர்கள் அடிமைகளாக பல நாடுகளுக்கு போர்த்துகீசிய கேப்டன்களால் விற்கப்பட்டனர். ஆனாலும் மக்களோடு மக்களாயிருந்த சேசுசபைத் துறவிகள் இதற்காக லிஸ்பன் போர்த்துகீசிய அரசிடம் மன்றாடியது. இங்குள்ள நாயக்க வடுகர்களிடமும் போராடியது. சவேரியார் முதற்கொண்டு அவரைப் பின்தொடர்ந்த பாதிரியார்கள் வரை வாளெடுத்துப் போராடி இச்சமூகத்தைப் பல இன்னல்களிலிருந்து மீட்டெடுத்தனர். 

ஆனாலும் என்னவோ காலங்கள் கழியக்கழிய போர்த்துக்கீசிய ஆட்சியாளர்களுக்கும், பரதவகளுக்கும் இடையேயான நல்லிணக்கம் குறைந்தே போனது. வேதாளைப் போர்க்களத்தில் போர்த்துகீசியர்களுடன் நின்று போரிட்ட பரதவரின் வீரம் செறிந்த வரலாறுகள் மறைக்கப்பட்டன. பரதவரின் இரப்பாளியை சிறையெடுக்க தானே தனி வியூகம் வகுத்த பரதவரின் சாணக்கியத்தனம் அன்றே போர்த்துகீசியர்களுக்கு வெளிக்காட்டாத வங்சினத்தை வளர்த்து வந்தது. 1600 களில் குமரி முதல் வேம்பாறு வரை பரதவர்கள் ஒடுக்கப்பட்ட போது டச்சுக்காரர்கள் வருகையால் அதிகாரத்தை இழந்து விடுவோமே என பயந்திருந்த போர்த்துகீசியர் நாயக்கர்களின் உறவை தக்க வைத்துக் கொள்ள பரதவருக்கு உதவ மறுத்தனர். 

நிலைமையை உணர்ந்த சேசுசபையினரும் பரதவர்களை ஆசுவாசப்படுத்தவே முயன்றனர். ஆனால் அன்றைய இளம் பரதவர்கள் துணிந்து எடுத்த முடிவுதான் இச்சரித்திரக் கிறுக்கல். இக்கதைக்குப் பின்னர் தான் மன வேகத்தோடு சேசு சபையின் ஒரு குழுவினர் இங்கிருந்து தூய தோமா துயிலிடத்திற்கு அதாவது சென்னை மயிலாப்பூருக்குச் சென்று சேசு சபையை பரப்ப எத்தனித்தனர். ஆக வரலாறே நம்முடையது. நம்மைச் சுற்றியே வரலாறு. வரலாற்றில் தொலைத்துப் போனவர்கள் வேண்டுமானால் வீணாய்க் கிடக்கலாம். ஆனால் வரலாற்றைக் கொண்டவர்கள் மட்டுமே வரலாறு படைக்க முடியும். இனி ஒரு விதி செய்வோம். பரதவன் பாராள வழி செய்வோம். இது துவக்கம் தான். 

அன்புடன் 

கடல்புறத்தான்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com