வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 15 August 2017

பரதவர்களின் பதவி பெயர்கள்

பரதவர்களின் பழங்காலப் பதவி பெயர்கள் - 3

முத்துக்குளித்துறைப் பரதவரின் நீண்ட வரலாற்றுச் சுழற்சியில் அவர்கள் கிறிஸ்தவம் தழுவிய நிகழ்விற்கு முற்பட்ட தொல்பழங்காலத்திலே அவர்களிடம் ஒரு வலிமை மிக்க கட்டுக் கோப்பான சமூகத் தன்னாட்சி அமைப்பு முறையும் (An Autonomous body and Rule) இருந்ததற்கான தடய எச்சங்களாக பட்டங்கட்டி, அடப்பன், ஞாயம் போன்ற பதவி பெயர்கள் தங்கிய குடும்பங்கள் இன்றும் கடலோரக் கிராமங்கள் சிலவற்றில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணும் போது அவை பற்றி ஆய்ந்தரியத் தூண்டும் எண்ணங்கள் எழுவது இயல்பு தானே.

ஞாயம் :

ஞாயக்காரன் என்ற சொல் தான் மக்களின் பேச்சு வழக்கில் தேய்ந்து சுருங்கி ஞாயம் ஆகியிருக்க வேண்டும். ஆராச்சிமணியும், அரண்மனையும், அரசபீடமும் பண்டைய தமிழகத்தில் இருந்ததாகவும், அரசனே நீதி வழங்கியதாகவும், பல இலக்கியச் சான்றுகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் பார்த்திருந்தாலும், மன்னன் வாழ்ந்த தலைநகரை விட்டு வெகு தொலைவிலிருந்த ஊர்களிலும், கிராமங்களிலும் வழக்குகள் எவ்வாறு தீர்க்கப்பட்டன என்பதைச் சிறிது சிந்தித்தால் ஞாயம் என்ற பெயருக்கு விடை கிடைக்கலாம். 

வழிவழியாக கண்டு, கேட்டு, அடைந்த அனுபவ அறிவால் சில முதியவர்கள் ஊரில் ஏற்படும் வழக்குகளுக்கு தீர்வு கூறியிருக்கலாம் என்ற ஊகம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பதற்கு சான்றாக 

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே 

பாதாள முனி படருமே – மூதேவி 

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே 

மன்னோரம் சொன்னார் மனை 

என்ற வெண்பாப் பாடலைக் காணலாம். வழக்கு மன்றங்களில் ஒரு தலை சார்பாக, நீதிக்குப் புறம்பாக தீர்ப்பு சொன்னால் ஏற்படும் விளைவுகளைக் கூறும் அப்பாடல் ஊருக்கு ஊர் ஞாயம் வழங்கும் ஞாயகாரர்களை ஒருவரோ அல்லது பலபேர் கொண்ட ஒரு குழுவாகவோ மன்றங்களில் தீர்ப்பு கூறினார் என்பது புலனாகும். 

அன்றாட வாழ்வில் இயற்கை மூலங்களை எதிர்த்துப் போராடிப் பொருளீட்டும் பரதவர் இயல்பாகவே இறைபயம் கொண்டவர்கள், அவர்களிடையே ஏற்படும் பூசல்களையும் வழக்குகளையும் தீர்த்துவைக்கும் ஞாயக்காரர்கள் பண்டைய நாட்களில் இருந்தார்கள் என்பதற்கு புனித சவேரியாரை புனிதர் நிலைக்கு உயர்த்த பல ஆய்வுகள் நடத்திய போது மணப்பாட்டில் புனிதர் 71 வது சாட்சியாக சான்று பகர்ந்த கஸ்பார் த மிராண்டா என்பவரைப் பற்றிக் கூறும்போது Ordinary Judge என பதிவு செய்யப்பட்டிருப்பது காணத்தக்கது. (Monumenta Xavieriana Vol II Page 541 – dated 1616 August 27 – see 71st witness). 

- செல்வராஜ் மிராண்டா 

நன்றி : பரவர் மலர் 2017


குறிப்பு : வேம்பாற்றில் காணப்படும் கி.பி. 1602 ஆண்டின் கல்லறைக் கல்வெட்டு பரதவரிடையே பட்டங்கட்டி, அடப்பனர் ஆகிய பதவிகள் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது. 

மேலும் அவ்விரு பதவிகளை சுவாம் வாசு என்பவர் கொண்டிருந்தார் என்பதையும் பறைசாற்றுகிறது. மேலும் வேம்பாற்று பெரிய அடப்பனார் சந்தியாகு மாதவடியான் பர்னாந்து அவர்களையும், அவர்களது வம்சத்தினரையும் ஞாயக்காரர் வம்சம் என்றும் அழைக்கப்படுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com