சமயத்தில் சங்கமித்த சமூகம் - 4

அபிதான சிந்தாமணியில் அரக்கர்களால் பல்வேறு துன்பங்கள் ஏற்படும் போது, சிவபெருமான் அவர்களை அழிக்க சரவணப்பொய்கைக்கு கார்த்திகேயனை அனுப்பியதாகவும், அவருடன் வந்த படை வீரர்கள் பரதவர்கள் என்றும், உலகம் பெரும் கடல் பெருக்கில் அழிந்த போது அவர்கள் தோணியில் ஏறி தப்பியதாகவும், தோணி தரை தட்டிய இடமே சீர்காழியிலுள்ள தோணிபுரம் என்றும் அங்கு தோணியப்பர் ஆலயம் உள்ளது என்றும் குறிபிடப்பட்டுள்ளது. இது சீர்காழி பெரிய கோயிலில் தோணியப்பர் பெரியநாயகியுடன் எழுந்தருளியிருக்கும் தோணி வடிவமாய் அமைந்த திருக்கோயில் உள்ள பகுதியாகும். இங்குள்ள மண்டபம் வலம்புரி மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது.

சூரபத்மனை (கடற்கொள்ளையனை) கந்தன் கொன்றதாக கந்தபுராணம் கூறுகிறது. சூரன் கடல்நடுவே வீரமகேந்திரபுரம் என்ற நகரை அமைத்து தேவருக்கு (பரதவருக்கு) தொல்லை கொடுக்க கந்தன் கடல் கடந்து சென்று போரிட மா மரமானான். (இதனை மா மரத்தின் பின்னால் அல்லது மரத்தில் ஒளிந்தான் எனக் கொள்ளலாம்.) அவனது ஆட்கள் சமரசம் அடைவே இறுதியில் கந்தன் சூரனைக் கொன்று அவனது சின்னங்களான சேவலையும், மயிலையும் எடுத்துக் கொண்டதாக கூறுவர். இதனாலே கந்தன் செந்தில்நாதன் என்னும் பட்டம் கிடைத்தது. இதற்கு அலைகளின் அல்லது படகின் தலைவன் என்ற பொருள் உண்டு. சூரனுக்கு மாமரம் போல கடம்ப மரத்தை காவல் தெய்வமாகக் கொண்ட கடல் கொள்ளையர்களை சேரன் செங்குட்டுவன் அடக்கியதாக பதிற்றுப்பத்துவிலும், சிலப்பதிகாரத்திலும் காணலாம்.
இதனால் மகிழ்ந்த இந்திரன் (வருணன்) தன் மகள் தெய்வானையை கந்தனுக்கு மனம் முடித்து வைத்தார். இதனால் பரவர்கள் முருகனை மச்சான் சாமி என்றே அழைப்பர். திருவாதவூர் புராணமும் தெய்வானையை பரத்தி என்றே குறிப்பிடுகிறது. பரவரின் வழக்கத்திலுள்ள தாலாட்டுப் பாடல்
“பரத்தி மகள் தேவானை குலவிளக்கா இங்கிருக்க..
குறத்தி மகள் வள்ளி பின்னால் போவானேன் குறவனாய்..”.
என்ற வரிகள் வழங்கப் பெறுவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. மேலும் "செட்டி கப்பலுக்கு செந்தூரான் துணை" என்ற சொல்லாடலும், பரதவ வணிக செட்டிகள் செந்தூரானுக்கு தேங்காய் உடைப்பார் என்றும் திருசெந்தூர் தல வரலாறு கூறுகிறது.

பரவர்கள் தங்களுக்குக் கிடைத்த முத்துக்களில் பத்தில் ஒரு பங்கினை திருசெந்தூர் கோவிலுக்கும், மற்றொரு பங்கினை கோவில் ஓதுவார்களுக்கும் வழங்கினர். மேலும் ஆவணித் திருவிழாவின் போது தேர் வடம் தொட்டுக் கொடுக்கும் கௌரவ உரிமையை பரதவ சாதித் தலைவருக்கும், வீரபாண்டியன் பட்டண அடப்பனாருக்கும் அளிக்கப்பட்டு இருந்தது போல கன்னியாகுமரி ஆலய வைபவங்களில் கௌரவ உரிமை கன்னியாகுமரி மூப்பனாருக்கு அளிக்கப்பட்டது.

கந்தனின் சின்னங்களாகக் கருதப்படும் சேவலும் ,மயிலும் பரதவரின் 21 சின்னங்களில் சிறப்பிடம் பெறுகிறது. குறிப்பாக மயில் சின்னம் பரதவ சாதித் தலைவரின் பல்லக்கிலும், வேம்பாறு, தூத்துக்குடி, வீரபாண்டியன்பட்டணம் ஆகிய இடங்களில் காணப்படும் பரதவக் கல்லறைக் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தகுந்தது. கந்தனின் ஆயுதமான 'வேல்' போன்ற அமைப்பிலே பரதவரின் கட்டுமரத் துடுப்பும் அமைந்திருப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
கந்தனின் நிறமான கரும்பச்சை நிறத்தை பரதவர்கள் தங்கள் குல நிறமாகக் கொண்டுள்ளனர். மணப்பாடு ஆதியில் 'கந்தபான புரம்' என்றே அழைக்கப்பட்டிருந்தது. இதுபோலவே பழனி முருகன் கோவில் திருவிழாவில் ஒருநாள் இரவு மலையில் தங்கி வழிபாடும் உரிமை பருவத ராஜ குலத்திற்கே அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் பரவர்களைப் போல மச்சான் சாமி என்றே அழைத்து முருகனின் மேலுள்ள உரிமையை அவர்கள் பன்னெடும் காலமாக நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
- தொடரும் -
- நி. தேவ் ஆனந்த்
சமயத்தில் சங்கமித்த சமூகம் - 4
Dev Anandh Fernando
21:30