வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 1 November 2017

அழிந்து வரும் தாழை மரம்
கடற்கரைப் பகுதிகளில் இயற்கையாக வளர்ந்து வரும் தாழை மரங்கள், பேரிடரைத் தடுக்க இயற்கை நமக்கு வழங்கிய கொடை. இலக்கியங்களில் நெய்தல் திணைக்குரிய மரமாகப் போற்றப்படும் தாழை, இராமேஸ்வரம் தீவு, மேலமுந்தல் தாழையடி ஏழுபிள்ளை காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் காணப்படுகின்றன. மணமிக்க தாழம்பூ பூக்கும் குறுமரமான தாழையை ‘கைதை’ எனவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அழிந்துவரும் இம்மரங்களை கடற்கரை முழுவதும் பயிரிட்டு வளர்க்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது, பாண்டேசி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவித்திலைத் தாவரமான தாழையின் தாவரவியல் பெயர் பாண்டனஸ் டெக்டோரியஸ் (Pandanus tectorius). மணற்பாங்கான கடற்கரைப்பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரங்களில் இது அதிகளவில் வளர்கிறது. இம்மரம் 25 அடி வரை உயரமாக வளரும்.

இதன் இலையின் ஓரங்களில் முள் இருக்கும். அடிமரத்தில் விழுதுகள் இருக்கும். பூவில் ஆண் பெண் வேறுபாடு உள்ளது. ஆண் பூ தான் மணமிக்க தாழம்பூ. வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் இப்பூ மலர்ந்த ஒரே நாளில் கீழே விழுந்து விடும். ஆண்மலர் காய் காய்ப்பதில்லை. பெண் வகையில் பூவும், காயும் அன்னாசிப்பழம் போன்ற அமைப்பில் இருக்கும். இராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் பகுதியில் பெண் மரம் அதிகளவில் காணப்படுகிறது.

தாழையின் சிறப்புகள்


தொடும்போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை கைதை என்கிறார்கள். குறிஞ்சிப்பாட்டில் 83வது மலராகக் குறிப்பிடப்படும் கைதை, தாழையின் மலரான தாழம்பூ ஆகும். நம்புதாளை, வேதாளை, தாழையூத்து, பூந்தாழை, தாழைக்காடு, தாழையூர், கூடுதாழை, பெரியதாழை என பல ஊர்கள் தாழையின் பெயரால் உருவாகியுள்ளன. தாழம்பூ கைதகப் பூ என சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.

இலக்கியங்களில் தாழை

குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தாழை குறிப்பிடப்படுகிறது. தலைவிரித்த பேய் போல தாழையின் பச்சை மடல்கள் பரவி விரிந்துள்ளதாக அகநானூறில் வெங்கண்ணனார் கூறுகிறார். நாரை கோதுகின்ற சிறகுபோல, தாழையின் அரும்புகள் விரிந்து மலர்வதாக குறுந்தொகையும், அன்னப்பறவை போல மலர்வதாக சிறுபாணாற்றுப்படையும் கூறுகின்றன. 

இலையில் உள்ள முட்கள் சுறாமீனின் பற்கள் போலவும், சொரசொரப்பான தாழையின் அடிப்பகுதி இறால் மீனின் முதுகு போலவும், கூர்மையான முனை உள்ள இதன் மொட்டு யானையின் தந்தம் போலவும், மலர் முதிர்ந்து தலைசாய்த்து நிற்பது மான் தலை சாய்த்து நிற்பது போலவும், தாழம்பூ மலர்ந்து மணம் பரப்புவது, விழா நடைபெறும் இடத்தில் கமழும் தெய்வமணம் போலவும் உள்ளதாக நற்றிணையில் நக்கண்ணையார் கூறுகிறார்.
சிவனின் சாபம் பெற்றதால் பூஜையில் தாழம்பூவை சேர்க்கமாட்டார்கள். ஆனால் உத்தரகோசமங்கை கோயிலில் மட்டும் வழிபாட்டில் தாழம்பூ சேர்த்துக்கொள்ளப்படுகிறது. தாழையின் நறுமணமிக்க மகரந்தத்தூளை திருநீறு என்பர். நீறு பூசியும் சிவன் தலையில் அது இடம்பெறவில்லை என குமரகுருபரர் பாடுகிறார்.

எட்டாம் நூற்றாண்டில் இருந்த திருப்புல்லாணியின் சூழலை வருணிக்கும்போது வெளுத்த மடல்களையுடைய கைதை இங்கு இருந்ததாக திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். ஆனால், தற்போது அங்கு இம்மரம் இல்லை.

பயன்கள்

மணமிக்க தாழம்பூ கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அம்மைநோய் கண்ட வீட்டில் தாழம்பூவைக் கட்டித் தொங்க விடுவதால் அக்கிருமிகள் அழிகின்றன. ஓலைச் சுவடிகளை பூச்சி அரிக்காமல் பாதுகாக்க இப்பூ பயன்படும். இதன் காயை அழகுக்காக விழாப்பந்தலில் கட்டித் தொங்கவிடுவர். இதன் விழுது வீட்டிற்கு வெள்ளையடிக்கவும், நார் ஊஞ்சலாடவும் பயன்படுகிறது. இதன் ஓலையில் இருந்து தாழைப்பாய் உருவாகிறது. தாழம்பூவில் இருந்து வாசனை தைலம் எடுக்கப்படுகிறது.

பாரம்பரிய நிலம் சார்ந்த மரங்கள் அழிந்து வருவதால் இயல்பான இயற்கைச் சூழ்நிலை மாறிவருகிறது. மண்ணரிப்பு, சுனாமி, கடல்சீற்றம் ஆகிய பேரிடரைத் தடுக்கும் தாழை மரங்களை கடற்கரைப் பகுதிகள் முழுவதும் அடர்த்தியாக வளர்ப்பதன் மூலம் ஆபத்திலிருந்து மக்களையும், கடற்பகுதிகளையும் பாதுகாக்க முடியும் என அவர் கூறினார்.

- இரா.பகத்சிங்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com