வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 7 November 2017

முதல் அச்சகம்

தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் ஒன்று புன்னைகாயல். தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள ஆத்தூரிலிருந்து கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இக்கிராமம். கத்தோலிக்க மீனவர்கள் வசிக்கும் இக்கிராமம் தமிழக பண்பாட்டு வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தை பெற்றுள்ளது. தமிழ்மொழி முதன் முதலில் அச்சேறியதும், முதல் தமிழ் நூல் பிரசுரிக்கப்பட்டதும் இக்கடற்கரையோர கிராமத்தில் தான். .

16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் தமிழகத்தின் சோழமண்டலக் கடற்கரையை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போது, முதலில் அவர்களின் தலைமையிடமாக இருந்தது புன்னைக்காயலே. எனவே போர்ச்சுக்கீசியரோடு வந்திருந்த கத்தோலிக்கப் பாதிரியார்களும் குறிப்பாக யேசு பாதிரியார்களும் இக்கிராமத்தையே தலைமையிடமாகக்  கொண்டிருந்தனர். ஏற்கனவே கடற்கரை ஓரங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்களைக் கத்தோலிக்க மறைக்குள் கொண்டு வந்திருந்த இப்பாதிரியார்களுக்கு, அவர்களுக்கு மறைகல்வி வழங்கிட சில நூல்கள் தேவைப்பட்டன. இச்சூழ்நிலையில் ஹென்ரிக்கஸ் என்ற போர்ச்சுகீசிய பாதிரியார் 1547 - ல் தமிழகம் வந்து சேர்ந்தார்

தமிழ்மொழியை கற்றதுடன், புன்னைகாயலில் 16-ம் நூற்றாண்டிலேயே ஒரு தமிழ் பல்கலைக்கழகத்தையும் உருவாக்கிய ஹென்ரிக்கஸ் அடிகளார் தமிழ் நூல் ஒன்றை அச்சிட முயன்று பெரும் வெற்றியை பெற்றார். அவரின் தொடக்க முயற்சிகள் தமிழகத்திற்கு வெளியேயும், பின்னர் தமிழகத்தில் புன்னைக்காயலிலும் நடைபெற்றன.

1578 அக்டோபர் 20ம் நாள் கேரளா மாநிலம் கொல்லத்தில் ”தம்பிரான் வணக்கம்” எனும் நூல் அச்சிடப்பட்டது. இது பதினாறு பக்கங்களை கொண்ட மறைகல்வி நூல். இந்நூல் மொழிபெயர்ப்பு நூலாகும். ஹென்ரிக்கஸ் அடிகளாரும், மனுவேல் பெட்ரோ எனும் பாதிரியாரும் இம்மொழிபெயர்ப்பு பணியைச் செய்திருந்தனர், பதினாறு பக்கங்களைக் கொண்ட இந்நூலே இந்திய மொழிகளில் பிரசுரமான, இந்தியாவிலேயே பிரசுரிக்கப்பட்ட முதல் நூல் எனும் பெருமையை கொண்டது. நூலின் முதல் பக்கத்தில் ஒரு படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது .

இதற்கு பின் 1579 நவம்பர் 14 ம் நாள் 122 பக்கங்களை கொண்ட " கிறிஸ்தியான் வண்க்கம்" எனும் நூல் கொச்சியிலிருந்து பிரசுரிக்கப்பட்டது. தமிழகம் தாய்மொழி தழிழைத் தன் மண்ணிலேயே அச்சேற்றுவதற்கு  இன்னும் ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

1586 –ல் அல்லது 1587-ல் புன்னைகாயலில் இருந்து "அடியார் வரலாறு" எனும் நூல் பிரசுரிக்கப்பட்டது. இந்நூல் 666 பக்கங்களை கொண்டிருந்தது. கல்வியறிவற்ற மீனவர்களின் உபயோகத்திற்கான நூல் இது என்பதால் மிக எளியநடையில் எழுதப்பட்டிருந்தது. தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் குறிப்பிடுவது போல “கிறிஸ்துவச் சிந்தனைகளைத் தமிழ் மூலம் வெளிப்படுத்த 16 –ம் நூற்றாண்டு செய்த மிகப்பெரிய முயற்சி இது”.

இந்நூலை அச்சேற்றுவதற்காக தமிழ் அச்சு உருளையை உருவாக்கியவர் ஜோவா டி பரியா எனும் போர்ச்சுகீசிய பாதிரியார். இதுவே முதல் அச்சு உருளையும் ஆகும். இந்த அச்சு இயந்திரம் அமைப்பதற்க்கும், பிற செலவுகளுக்காகவும் கடற்கரையோரம் வாழும் மீனவப் பக்தர்கள் 400 குருசோடக்களை போர்ச்சுகீசிய நாணயங்களை வழங்கினர்.

இப்பிரசுரத்தின் மற்றொரு முக்கிய அம்சம் இதற்காக பயன்படுத்திய காகிதம் ஆகும். இந்நூலின் காகித கலவையில் மூங்கில் வார்ப்படத்தை விட துணி வார்ப்படமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இக்காகிதம் சீனாவில் இருந்து பெறப்பட்டது என தீர்மானிக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர் சீனத்தோடு கொண்டிருந்த வணிகம், அரேபிய சீன வணிகம் மலபார் கடற்கரை வழியாக நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பவை இக்கருத்தை வலியுறுத்துகிறது .

இவ்வாறு தமிழ் மொழி 16 ம் நூற்றாண்டிலேயே அச்சேற்றப்பட்டது என்பதும் முதலில் அச்சேறிய நூல்கள் கத்தோலிக்க மறைக்கல்வி நூல்கள் என்பதும் குறிப்ப்ட்டத்தக்கது. ஹென்ரிக்கஸ் அடிகளாரின் இந்த அரிய முயற்சிக்காக அவர் ”தமிழ் அச்சு தந்தை” என அழைக்கப்படுகிறார். சீகன் பால்கு அடிகளார் தமிழகத்திற்கு வருவதற்கு 126 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழி அச்சேற்றப்பட்டு தமிழ் நூல் ஒன்று வெளியானது. தமிழ் அச்சுக்கலை வரலாற்றை இன்னும் தொன்மையாக்குகிறது.

- முனைவர் பிரான்சிஸ் 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com