வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 2 November 2017

OUR CHURCH'S - 5

தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம், தூத்துக்குடி

முத்துநகர் தூத்துக்குடி அன்னை மரியாளின் பக்தி மணம் கமழும் அழகிய நந்தவனம். இந்நகரின் மக்கள் அன்னைக்குப் பல்வேறு ஆலயங்கள் எழுப்பி அவளைப் பல்லாண்டுகளாகப் பரிவோடும், பக்திப் பெருக்கோடும் வழிபட்டு வருகின்றனர். அன்னை மரியாளுக்குத் தமிழகத்திலேயே உருவான முதல் ஆலயம் முத்துநகரின் சொத்தான பனிமய அன்னையின் பேராலயமே (கி.பி. 1582). அதற்கு அடுத்தப்படியாக இங்கு தோன்றியதுதான் பழமைச் சிறப்புமிக்க சிந்தாத்திரை மாதா ஆலயம். “சிந்தாத்திரை” என்றாலே “வெற்றிப் பயணம்” என்றுதான் பொருள்.

பயணிகளின் ஆலயம்

ஆழ்கடலில் முத்தும், சங்கும் குளிக்கச் செல்லும் கடலோடி மக்கள், பயணத்தை ஆரம்பிக்குமுன், தங்களின் படகுகளைச் சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்திற்கு முன்னால் கடலில் நிறுத்தி, அன்னையிடம் வேண்டுதல் மற்றும் பொருத்தனைகள் செய்வது வழக்கம். அதுபோல வெளியிடங்களுக்குப் பயணம் செல்லும் தோணித் தொழிலாளர்களும், தோணிகளில் சரக்குகளை ஏற்றிய பின், சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்தில் கூடிவந்து, தங்களின் கடல் பயணம் வெற்றிப் பயணமாக அமைய வேண்டுதல் செய்வர். சாதாரண மீன்பிடித் தொழிலாளர்கள் முதலாய் இந்த அருமையான வழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.

இன்றுகூட தூத்துக்குடியில் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள், “வடக்கே செல்லுதல்” என்னும் சம்பிரதாயத்தை நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடிக்கு வடக்கே அமைந்துள்ள சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்தைத் தரிசித்து, தங்களின் இல்லற வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக அமைய அன்னையை மன்றாடி, விருந்துண்டு, மகிழ்ச்சியோடு இல்லம் திரும்புகின்றனர். இன்னும் தினசரி வாழ்க்கையின் சுமைகளால் சோர்வுற்றிருக்கும் மக்களும், அன்னையின் தாய்மடியில் தலை சாய்த்து, கடற்கரை மணலில் அமர்ந்து, இதமான தென்றல் காற்றில் இனிமை காணத் திரளாக வருகின்றனர். இக்காரணங்களுக்காகவே முத்துநகர் மக்களின் இத்திருத்தலம் சிந்தாத்திரை மாதா ஆலயம் என சிறப்பாக அழைக்கப்படுகிறது. பழமைச் சிறப்பு மிக்க சிந்தாத்திரை மாதா ஆலயத்தின் வரலாற்றை இங்கு தொகுத்தறிவோம்.

அன்னையின் முதல் ஆலயம்

முதல் ஆலயமான பனிமய மாதா ஆலயம், முத்துக்குளித்துறையின் யேசு சபை அதிபராக இருந்த சுவாமி தியோகு தி குணா என்பவரின் அரிய முயற்சியினால் 1582-ம் ஆண்டில் உருவானது. அது போர்த்துக்கீசியர் முத்துக்குளித்துறையில் ஆதிக்கம் செலுத்திய காலம். ஆனால் வணிக நோக்குடன் இந்தியாவுக்கு வந்த உலாந்தர்கள் என்னும் டச்சுக்காரர்கள் 1658-ம் ஆண்டில் போர்த்துக்கீசியரிடமிருந்து தூத்துக்குடியைக் கைப்பற்றினர். பின்னர் முத்துக்குளித்துறை முழுவதும் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் போர்த்துக்கீசியரின் ஆதிக்கமும்;, அவர்களுக்குப் பாப்பரசர் 6-ம் அலெக்ஸாண்டர் வழங்கியிருந்த ஞான அதிகாரச் சலுகையும் முத்துக்குளித் துறையில் வீழ்ச்சியுற்றன.

டச்சுக்காரர்கள் கத்தோலிக்க மறையின் எதிரிகள். ‘கால்வீனியம்’ என்னும் பதித மதத்தைப் பின்பற்றியவர்கள். கத்தோலிக்க மக்களின் நற்கருணை பக்தியையும், மாதா பக்தியையும் மிகத் தீவிரமாகக் கண்டனம் செய்தனர். கத்தோலிக்க ஆலயங்களை இடித்தனர் அல்லது தங்களின் வணிகக் கூடங்களாக மாற்றினர். தூத்துக்குடியிலிருந்த முதல் பனிமய மாதா ஆலயத்தையும் 1695-ம் ஆண்டில் இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கினர். அங்கே தங்களின் இனத்தவரை அடக்கம் செய்ய “கிரகோப்” என்னும் கல்லறைத் தோட்டத்தை அமைத்தனர்.

ஆனால் டச்சுக்காரர்களின் இந்த மதவெறி முத்து நகரில் வெகுகாலம் நீடிக்கவில்லை. தங்களின் இலாபகரமான கடல் வணிகத்திற்குக் கத்தோலிக்கக் கடலோடி மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் தேவை என்பதை உணர்ந்தனர். எனவே தங்களின் மதவெறியை விரைவில் மாற்றிக் கொண்டனர். மாதா பக்தியைப் பழித்துரைப்பதையும் நிறுத்திக் கொண்டனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு டச்சு ஆளுநரின் அனுமதி பெற்று அக்காலத்தில் தூத்துக்குடி புனித இராயப்பர் கோவில் பங்குக் குருவாக இருந்த யேசு சபையைச் சேர்ந்த சுவாமி விஜிலியுஸ் மான்சி என்பவர் கிரகோப் கல்லறைத் தோட்டத்திற்கு எதிரே பனிமய மாதாவுக்கு 1713-ம் ஆண்டில் புதியதோர் ஆலயத்தைக் கற்களால் எழுப்பினார்.

முதல் குடிசைக் கோவில்

பனிமய மாதாவுக்குப் புதிய ஆலயம் உருவான பின்னர், ஏறத்தாழ 1713-ம் ஆண்டில், முத்துநகரில் வாழ்ந்த கத்தோலிக்க மக்கள், அதிலும் குறிப்பாகக் கடலோடி மக்கள், தங்களின் கடற்பயணங்களில் அன்னையின் ஆதரவையும், ஆசியையும் வேண்டி மன்றாட, சிந்தாத்திரை மாதா பெயரால் ஓர் ஆலயத்தை உருவாக்க விரும்பினர். தூத்துக்குடிக்கு வடக்கே கடலோரத்திலிருந்த புறம்போக்கு நிலத்தில் களி மண்ணால் சுவரெழுப்பி, ஓலையால் கூரைவேய்ந்து சிந்தாத்திரை மாதாவின் முதல் ஆலயத்தைக் கடலோடி மக்களே கட்டியெழுப்பினர். அக்காலத்தில் பனிமய மாதா ஆலயத்தைத் தவிர வேறு ஆலயங்களைக் கற்களால் கட்டுவதற்கு டச்சு அதிகாரிகள் தடைவிதித்திருந்தனர். நாளடைவில் இக்குடிசைக் கோவிலைச் சுற்றிச் சில மீனவ குடும்பங்களும் குடிசைகள் அமைத்துக் குடியிருக்க ஆரம்பித்தனர். இவ்வகையில் சிந்தாத்திரை மாதா ஆலயம் ஆரம்ப முதல் முத்துநகர் மக்களுக்கெல்லாம் பொதுவான திருத்தலமாக விளங்கிற்று. இது டச்சுக்காரர்களின் காலத்தில் பனிமய மாதா பங்கினை நிர்வாகம் செய்து வந்த யேசு சபைக் குருக்களின் கண்காணிப்பிலிருந்தது.

1759-ம் ஆண்டு முதல் முத்துக்குளித் துறையிலும், இங்குள்ள ஆலயங்கள் பற்றிய ஞான அதிகாரத்திலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. வணிகத்திற்காக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றி, 1782-ம் ஆண்டில் முத்துக்குளித்துறை முழுவதும் டச்சுக்காரர்களின் பலத்தை முறியடித்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் கத்தோலிக்க மக்களின் மதவழிபாடுகளில் அவசியமின்றித் தலையிட விரும்பவில்லை. இச்சூழ்நிலையில் முத்துக்குளிப்பவர்களும், சங்கு பிடிப்பவாகளும், தங்களின் சொந்த முயற்சியால், சிந்தாத்திரை மாதாவின் பழைய குடிசைக் கோவிலை அகற்றிவிட்டு, கற்களால் சிறியதோர் ஆலயத்தை அமைத்தனர். இவ்வாலயம் கடலோடி மக்கள் தங்களின் சங்குகளைச் சேமித்து வைக்கும் பண்டக சாலைக்கு அருகிலேயே அமைந்திருந்தது.

காலப்போக்கில் சிந்தாத்திரை மாதாவின் சிற்றாலயம் புயலுக்கும், மழைக்கும் பலியாக சிதைவுற்றது. எனவே பழைய போர்த்துக்கீசிய மிஷனைச் சேர்ந்த தனவந்தரான திருவாளர் சேவியர் இஞ்ஞாசி குரூஸ் டிவோட்டா என்பவர் சிதைந்துபோன சிந்தாத்திரை மாதா சிற்றாலயத்தை மீண்டும் கற்களால் கட்டியெழுப்பினார். அவரது மரணத்திற்குப் பின், அவரது புதல்வன் திரு. அந்தோனி டிவோட்டா ஆலயத்தின் இரண்டாவது பகுதியைக் கட்டினார். இவரது மகன் பிலிப்பு கயித்தான் டிவோட்டா ஆயத்தின் மூன்றாவது (முகப்புப்) பகுதியைக் கட்டி முடித்தார். அவரது காலத்திற்குப் பிறகு, திரு. சூசை டிவோட்டா என்பவர் அன்னையின் ஆலயத்தைப் பழுது பார்த்துப் புதுப்பித்தார். 1900-ம் ஆண்டில் ஆலயத்தின் கூரையின் ஒரு பகுதி கீழே விழுந்துவிட்டது. அதனை ரூ. 500 செலவில் திரு. பவுல் இஞ்ஞாசி பெர்னாந்து 1903-ம் ஆண்டில் செப்பனிட்டு, மீண்டும் புதுப்பித்தார். இவ்வாறு ஆலயம் புதிதாக உருவான பின், சில ஆண்டுகளாக அன்னையின் ஆபரணங்களும், ஆலயத்திறவுகோலும், ஏனைய உடமைகளும் தூத்துக்குடி பரதர் குல சாதித் தலைவன் அவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தன. ஆலயத்திற்கு முன்னால் பெரியதோர் குருசடியும் கட்டப்பட்டது. அதன் உச்சியிலுள்ள மரச் சிலுவையை இன்றைக்கும் மக்கள் பக்திப் பெருக்கோடு வழிபட்டு வருகின்றனர். அதன் முன்பகுதியில், ஒரு கடற் பயணத்தின் போது இறந்த சைய மத்தேசியாள் என்ற இளம் பெண்மனியின் எளிமையான கல்லறை உள்ளது.

ஆலயத்தின் ஞான அதிகாரம்

1773-ம் ஆண்டு முதல் சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்தின் ஞான அதிகாரம் பற்றிய ஒரு குழப்பம் ஆரம்பமானது. அதுவரை தூத்துக்குடி மக்களுக்கெல்லாம் பனமய மாதா ஆலயமே புதிய பங்குக் கோவிலாக இருந்தது. யேசு சபைக் குருக்கள் பங்குப் பொறுப்பை ஏற்றிருந்தனர். தூத்துக்குடி மக்கள் ஒரே மந்தையாக ஒரே ஆயரின் கண்காணிப்பில் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். சிந்தாத்திரை மாதா சிற்றாலயம், பனிமய மாதா பங்கு ஆலயத்தின் ஓர் இணை ஆலயமாக இருந்தது.

சில அரசியல் காரணங்களுக்காகப் பாப்பரசர் 14-ம் கிளெமென்ட் என்பவர் 1773-ம் ஆண்டில் உலகமெங்கும் யேசு சபையைத் தடை செய்தார். அதனால் முத்துக்குளித்துறையில் பணியாற்றி வந்த யேசு சபைக் குருக்களும் தங்களின் கண்காணிப்பிலிருந்த ஆலயங்களையெல்லாம் விட்டு வெளியேறினர். அவர்களுக்குப் பதிலாக, விசுவாசப் பரம்புதல் சபையானது, பாரீஸ் வேத போதக சபைக் குருக்களிடம் முத்துக்குளித்துறை ஆலயங்களை ஒப்படைத்தது. ஆனால் இவ்வேத போதக சபையில் குருக்களின் பற்றாக்குறையினால் இந்த ஏற்பாடு வெற்றி பெறவில்லை.

இதற்கிடையில் போர்த்துக்கல் அரசாங்கமானது, முத்துக்குளித்துறை ஆலயங்கள் மீது முன்னொரு காலத்தில் பாப்பரசர் வழங்கியிருந்த ஞான அதிகாரச் சலுகையை, மீண்டும் நிலைநாட்ட விரும்பியது. எனவே இந்தியாவில் இன்னமும் தங்களின் அதிகாரத்திலிருந்த, கோவாவிலிருந்து சில சுதேச குருக்களை முத்துக்குளித்துறை ஆலயங்களைக் கண்காணிக்கும்படி அனுப்பி வைக்குமாறு கோவா மறைமாவட்ட போர்த்துக்கீசிய ஆயருக்கு ஆணை பிறப்பித்தது. அதன்படி பனிமய மாதா ஆலயமும், சிந்தாத்திரை மாதா ஆலயமும், முத்துக்குளித்துறையின் ஏனைய ஆலயங்களும் கோவா குருக்களின் நிர்வாகத்தின்கீழ் வந்தன. இதுவே “கோவா மிஷன்” என அழைக்கப்பட்டது. 

ஆனால் யேசு சபைக் குருக்களின் காலத்திலிருந்த ஒழுங்குமுறைகளும், நிர்வாகத் திறனும், ஆன்மீக வழிபாடுகளும் கோவா குருக்களின் கண்காணிப்பில் சிறப்பாக அமையவில்லை. மேலும் போர்த்துக்கல் அரசாங்கம் முத்துக்குளித்துறை ஆலயங்களுக்கு முன்னொரு காலத்தில் வழங்கி வந்த பொருளுதவியும் இப்போது அறவே நின்றுவிட்டது. எனவே, பல ஆலயங்கள் போதிய பராமரிப்பும், குருக்களுமின்றி கைவிடப்பட்டன. சில ஆலயங்கள் பாழடைந்து போயின, பழுதுற்றுக் கிடந்தன. முத்துக்குளித்துறை ஆலயங்களில் மயிலாப்பூர் போர்த்துக்கீசிய மறைமாவட்ட ஆயர் உரிமை கொண்டாட ஆரம்பித்தார். இக்காலக் கட்டத்தில் சிந்தாத்திரை மாதா ஆலயமும் பாழடைந்து போயிற்று.

நிர்வாகக் குழப்பம்

ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த யேசு சபையைப் பாப்பரசர் 7-ம் பத்திநாதர் 1814ம் ஆண்டில் மீண்டும் புதுப்பித்தார். அதனைச் தொடர்ந்து பாப்பரசர் 16ம் கிரகோரியார் 1836ம் ஆண்டில் மதுரை அப்போஸ்தலிக்க மறைமாநிலத்தை உருவாக்கி, முத்துக்குளித்துறை ஆலயங்களை மீண்டும் யேசு சபைக் குருக்களின் கண்காணிப்பில் ஒப்படைத்தார். இப்புதிய ஏற்பாட்டின்படி, பிரான்ஸ் நாட்டில் துளுஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெர்த்ராண்ட், மார்ட்டின், கார்னியர், லூயிஸ் ராங்கி ஆகிய நான்கு யேசு சபைக் குருக்கள் முத்துக்குளித்துறை ஆலயங்களைப் பராமரிக்கும்படி விசுவாசப் பரப்புதல் சபையால் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவே “பிரெஞ்சு மிஷன்” என வழங்கலாயிற்று.

இந்நிலையில் முத்துக்குளித்துறை மக்கள், அதிலும் குறிப்பாகத் தூத்துக்குடி மக்கள், இவ்விரு ஞான அதிகாரங்களால் குழப்பமடைந்தனர். விசுவாக வாழ்வில் தடுமாறினார். ஒரு சாரார் தூத்துக்குடி சாதித் தலைவனாரின் ஆலோசனையின்படி கோவா மிஷன் குருக்களை ஆதரித்தனர். மற்றொரு சாரார் பாப்பரசரின் ஆணையின்படி யேசு சபைக் குருக்களை ஆதரித்தனர். இதனால் தூத்துக்குடி மக்கள் இரு பிரிவினராகப் பிளவுபட்டனர். சாதித்தலைவனின் ஆதரவின் கீழ் கோவா குருக்கள் பனிமயமாதா ஆலயத்தையுமு;, சிந்தாத்திரை மாதா சிற்றாலயத்தையும் தங்களின் நிர்வாகத்தில் வைத்துக் கொண்டனர்.

பிரெஞ்சு மிஷன் ஆலயம்

1838-ம் ஆண்டில் பாப்பரசர் 16-ம் கிரகோரியார் ‘முல்த்தா பிரெக்ளாரே’ என்ற பத்திரத்தின் மூலம், கோவா நீங்கலாக இந்தியா முழுவதும், செயலற்றுப்போன பதுரவாதோ என்னும் போர்த்துக்கீசிய ஞான அதிகாரச் சலுகையைத் தடை செய்தார். இதனால் கோவா மிஷன் மக்களுக்கும் பிரெஞ்சு மிஷன் மக்களுக்குமிடையே பிரிவினையும், மோதல்களும் மேலும் அதிகரித்தன. பனிமய மாதா ஆலய நிர்வாகத்தை இழந்த யேசு சபைக் குருக்கள், தங்களை ஆதரித்த பிரெஞ்சு மிஷன் மக்களின் வழிபாட்டுக்கென்று பெரியதோர் தனி ஆலயம் தேவை என்பதை உணர்ந்தனர். திரு. மனுவேல் வியாகுல மோத்தா என்பவரிடமிருந்து குறைந்த விலையில் ஒரு நிலம் வாங்கி, அதிலே யேசுவின் திரு இருதயம், மரியாயின் மாசற்ற இருதயம் என்ற பெயரால் பெரியதோர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். இவ்வாலயம் 1849-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. ஆனால் சிந்தாத்திரை மாதா ஆலயம் இன்னமும் கோவா மிஷன் குருக்களின் நிர்வாகத்தில்தான் இருந்தது. இந்த ஞான அதிகாரக் குழப்பத்தின் போதுதான் பழைய சிந்தாத்திரை மாதா ஆலயம் படிப்படியாக மூன்று பகுதிகள் கொண்ட ஆலயமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இது அநேகமாக 1773-ம் ஆண்டு முதல் 1903-ம் ஆண்டுவரையுள்ள காலத்தில் கட்டப்பட்டதாக வரையறுக்கலாம்.

இரட்டை ஆட்சி

ஞான அதிகாரம் காரணமாக முத்துக்குளித்துறை மக்களிடையே தீவிரமடைந்து வரும் பிரிவினையையும், பதட்டத்தையும் நீக்கும்படியாகப் பாப்பரசர் 9-ம் பத்திநாதர் 1857-ம் ஆண்டில் போர்த்துக்கல் அரசுடன் புதியதோர் ஒப்பந்தம் செய்தார். அதன்படி முத்துக்குளித்துறை ஆலயங்களில், பங்குகளில், மேற்சொன்ன இரண்டு ஞான அதிகார நிர்வாகத்தையுமே பாப்பரசர் அங்கீகரித்தார். இதுவே “இரட்டை ஆட்சி” என வழங்கலாயிற்று. அதன்படி பனிமய மாதா ஆலயமும். அத்துடன் இணைந்த சிந்தாத்திரை மாதா ஆலயமும் கோவா மிஷனுக்கு உட்பட்டு, மயிலாப்பூர் மறைமாவட்ட ஆயரின் நிர்வாகத்திற்கு அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டன.

இருப்பினும் இரு பிரிவினருக்குமிடையே இன்னமும் பகையும், பிளவும் நீடிக்கத்தான் செய்தன. எனவே போர்த்துக்கல் அரசுடன் பாப்பரசர் 13-ம் சிங்கராயர் 1886-ம் ஆண்டில் மீண்டும் ஓர் ஒப்பந்தம் செய்தார். அதன்படி முத்துக்குளித்துறையைச் சேர்ந்த, பனிமய மாதா ஆலயம், கீழவைப்பாறு பரலோக மாதா ஆலயம், புன்னைக்காயல் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மணப்பாடு தூய ஆவி ஆலயம், கூடுதாழை மரியன்னை ஆலயம் ஆகிய ஐந்து பங்குகள் மட்டும் மயிலாப்பூர் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டு, மற்ற ஆலயங்களும், பங்குகளும் யேசு சபைக் குருக்களின் பொறுப்பில் வைக்கப்பட்டன. இதனால் பனிமய மாதா பங்கோடு இணைந்த சிந்தாத்திரை மாதா ஆலயமும் ஆரம்பத்தில் மயிலாப்பூர் ஆயரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆனால் இவ்வாலயத்தின் மீதுள்ள ஞான அதிகாரம் இன்னமும் தெளிவற்ற நிலையிலிருந்தது. 

பாப்பரசர் 13-ம் சிங்கராயர் 1883-ம் ஆண்டில் “பிரெஞ்சு மிஷன்” பெயரால் திருச்சி மறைமாவட்டத்தை ஏற்படுத்தி, அதனை யேசு சபைக் குருக்களிடம் ஒப்படைத்தார். முத்துக்குளித்துறை முழுவதும் திருச்சி மறைமாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது. பாப்பரசரின் இந்தப் புதிய நிர்வாக அமைப்பினை செயல்படுத்தும் பொறுப்பு அக்காலத்தில் இந்தியாவில் பாப்பரசரின் பிரதிநிதியாக இருந்த மேதகு லடிஸ்லாஸ் செலஸ்கி ஆயருக்கு வழங்கப்பட்டது. அவருடைய ஆணையின்படி அன்று தூத்துக்குடிக்கு வடக்கே தனித்து நின்ற சிந்தாத்திரை மாதா ஆலயம் பனிமய மாதா பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 1893-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி, திருச்சி மறைமாவட்டத்தைச் சேர்ந்த திரு இருதயங்களின் ஆலயப் பங்கோடு இணைக்கப்பட்டது. ஞான அதிகாரக் குழப்பத்தினால் தூத்துக்குடி மக்களிடையே பிளவு ஏற்படுவதற்கு முன்னால், சிந்தாத்திரை மாதா ஆலயம் தூத்துக்குடி மக்களுக்கெல்லாம் ஒரு பொது திருத்தலமாக விளங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இது கடலோடி மக்களாலேயே கட்டப்பட்ட ஆலயம்.

நீதிமன்றத்தில் வழக்கு

மேதகு லடிஸ்லாஸ் செலஸ்கி ஆண்டகையின் ஆணைப்படி சிந்தாத்திரை மாதா ஆலயம் தூத்துக்குடி திரு இருதய ஆலயப் பங்கோடு இணைந்ததை ஆரம்பத்தில் மயிலாப்பூர் மறைமாவட்ட ஆயர் மேதகு ரீட் தா சில்வா ஆண்டகையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருடைய ஆளுகையிலிருந்த கோவா மிஷன் மக்கள் இந்த ஏற்பாட்டினை எதிர்த்தனர். அதன் காரணமாக ஆயர் ரீட் தா சில்வா தனது முடிவை விரைவில் மாற்றிக்கொண்டார். ஆனால் அன்று திரு இருதயங்களின் ஆலயப் பங்குக் குருவாக இருந்த யேசு சபைக் குரு ஹால் என்பவர் ஆயர் லடிஸ்லாஸ் செலஸ்கியின் ஆணையைப் பின்பற்றி, சிந்தாத்திரை மாதா ஆலயத்தை தனது நிர்வாகத்தில் வைத்துக்கொள்ளப் பெரிதும் முயன்றார். 

அவரது முயற்சியை முறியடிக்க, அன்றைய பனிமய மாதா ஆலயப் பங்குக் குருவாக இருந்த சுவாமி பெர்னார்டின் டி சூசா அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விவகாரங்கள் எல்லாம் விரைவில் விலக்கிக்கொள்ளப்பட்டன. சிந்தாத்திரை மாதா ஆலயத்தை முற்றிலும் திருச்சி மறைமாவட்ட ஆயருக்கே வழங்கிவிட மயிலாப்பூர் மறைமாவட்ட ஆயரும் முடிவு செய்தார். ஆனால் பனிமய மாதா ஆலயம் மட்டும், பாப்பரசர் 13-ம் சிங்கராயரின் முன்னைய ஒப்பந்தப்படி, இன்னமும் மயிலாப்பூர் ஆயரின் ஆளுகையின் கீழ்தான் இருந்தது.

குருஸ்புரம் பங்கின் இணை ஆலயம்

1923-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பாப்பரசர் 11-ம் பத்திநாதர், அதுவரை திருச்சி மறைமாவட்டத்தோடு இணைந்திருந்;த முத்துக்குளித்துறையையும், அதன் உள்நாட்டுப் பகுதிகளையும் தனியே பிரித்து தூத்துக்குடி மறைமாவட்டத்தை ஏற்படுத்தினார். மேதகு திபூர்சியுஸ் ரோச் ஆண்டகை அதன் முதல் ஆயரானார். அதுவரை மயிலாப்பூர் மறைமாவட்டத்தோடு இணைந்திருந்த முத்துக்குளித்துறையின் மேற்சொன்ன ஐந்து பங்குகளும் 1930-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி தூத்துக்குடி மறைமாவட்டத்தோடு முறைப்படி இணைந்தன. அதற்கு முன்பிருந்தே சிந்தாத்திரை மாதா ஆலயம் தூத்துக்குடி திரு இருதயங்களின் ஆலயப் பங்கின் இணை ஆலயமாக இருந்து வந்தது.

திரு இருதயங்களின் ஆலயத்தின் வட திசையில் அங்கும் இங்குமாக அமைந்திருந்த சில முக்கிய இணை ஆலயங்கள் நாளடைவில் தனிப் பங்குகளாக மாறின. அவ்வகையில் உருவானதுதான் குரூஸ்புரம் புனித சூசையப்பர் பங்கு. இப்பங்கு 1955-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி உதயமாயிற்று. அன்று முதல் இன்று வரை சிந்தாத்திரை மாதா ஆலயம் குரூஸ்புரம் பங்குத் தந்தையின் கண்காணிப்பில், முத்துக்குளித்துறை மக்களுக்கெல்லாம் அன்னை மரியாளின் அருட்கொடைகளை வாரி வழங்கும் திருத்தலமாக சிறப்புற்று விளங்குகிறது.

அன்னையின் புதிய ஆலயம்

பழுதடைந்து வந்து சிந்தாத்திரை மாதா ஆலயத்தை 1984-ம் ஆண்டில் குரூஸ்புரம் பங்குக் குருவாக பொறுப்பேற்ற சுவாமி ஜோசப் பென்சிகர் பழுது பார்த்துப் புதுப்பித்தார். ஆலயத்தின் சுவர்களை உயர்த்தி, பழைய கூரையை அகற்றிவிட்டு அஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்தார். அவர் ஆரம்பித்த வேலையை 1988-ம் ஆண்டில் குரூஸ்புரம் பங்குத்தந்தையாக இருந்த சுவாமி ளு.கபிரியேல் தொடர்ந்து முடித்தார். புதிய ஆலயத்தின் இருபுறமும் சூரிய தடுப்பு விதானம் அமைக்க திரு. லியோ மச்சாது என்பவர் பெரிதும் உதவினார். இவ்வாறு குரூஸ்புரம் பங்குக் குருக்களும், பொதுமக்களும் நல்கிய உழைப்பினாலும் பொருளுதவியாலும் புதுப்பொலிவுற்ற சிந்தாத்திரை மாதா ஆலயத்தை அன்றை ஆயர் மேதகு ளு.வு. அமல்நாதர் திருநிலைப்படுத்தித் திறந்துவைத்தார்.

அன்னை மரியாள் அருளும் வெற்றிப் பயணம் நமது கடலோடி மக்களுக்கும், ஆன்மீக நலம் நாடும் அனைத்து மக்களுக்கும் இன்று தொடர்கிறது என்பதின் அடையாளமாகத்தான் அழகுற விளங்குகிறது சிந்தாத்திரை மாதா திருத்தலம்.

இத்திருத்தலம் நம் வாழ்க்கைப் பயணத்தின் விடிவெள்ளி! 
கடற் பயணங்களில் இறைவன் தந்த பாதுகாப்பான நோவாவின் பெட்டகம்! துன்பக் கடலில் அமிழ்ந்து போகும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்கம்! 
புதுமனத் தம்பதிகளுக்கு இன்ப வாழ்வுதரும் இனிய ஓடம்!

மொத்தத்தில் சிந்தாத்திரை மாதா திருத்தலம் அனைத்து மக்களுக்கும் அடைக்கலம் தரும் அற்புத துறைமுகம்.
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com