வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 19 May 2018

விடிந்தகரை 3.01

கலவரம் வருமா? 

கடும்பகை சூழுமா?

பார் ஆண்ட பரதவ வம்சம் படுகுழியில் விழுமா?...

சித்தர் உவரி பரதவ மாமுனியை காணவில்லை. தன்னை திருவணையில் விட்டு விட்டு மாயமாய் போனாரோ என எண்ணிய கங்கனார் மேற்கே பார்க்க, அம்மச்சா கோவிலுக்குள் நிரம்பி வழிந்த வெளிச்சத்தை கண்டதுமே
நீண்ட காலமாக பூட்டி கிடந்த கிழக்கு வாசல் திறக்கப்பட்டதை உணர்ந்ததுமே நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க படபடத்தார் கங்கனார் பரதவ வர்மன். மாபரவன் மாமுனி கண் இமைக்கும் நேரத்தில் கடலும் கரையுமாக கண்டபடி சதிராடுவதை நினைத்து உள்ளுக்குள் சலனப்பட்டார்.

முயன்றும் முடியாத இறுதியில் தான் அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாள் அம்மச்சா கோவில் விழாவை சிறப்பாக நடத்த, வடக்கு ரதவீதியில்
முத்தாரம்மன் சன்னிதி முன்னால் மணலில் சிக்கி கொண்ட தேரை மீண்டும் தன்நிலைபடுத்த தன்னை நாடினார், ஆனாலும் தான் அழைக்கும் முன்பே உவரி மாமுனி வந்து சேர்ந்தார். இப்போது தன்னை திருவணையில் விட்டுவிட்டு அம்மச்சா கோவிலின் கிழக்கு வாசலை திறந்து பூசை செய்கிறார்.

உதவி செய்ய வந்தவரிடம் பரதவரை கொன்ற கதை பேசி வீண்விவாதம் செய்தது அவருக்கு வெறுப்பாகி விட்டதோ... என நினைத்தபடி அம்மச்சா கோவில் கிழக்கு வாசலை பார்த்தபடி இருக்க, அம்மச்சா கோவில் வெளிச்சம்
நொடிப் போழுதில் மறையவும் மலை போல மாரியா ஒண்ணு எழும்பியடித்து திருவணையை முழுமையாய் மூடி நனைத்து வழியவும் சரியாய் இருந்தது ஆனாலும் கங்கன் பரதவர்மனின் உடைகள் நனையவில்லை. பழைய புகை மூட்டத்திலிருந்து சுருட்டு கங்குடன் பரதவ மாமுனி வெளி வந்தார்.

தக்சயா..
சிலேனப்படாதே!

உன் எண்ணம் வண்ணமே அனைத்தும் முடியும். நீ அழைத்து நான் வரவில்லை தக்சயா அம்மச்சாவின் தீன குரல் தீண்டி வந்தேன், ஆத்தாளை கண்டேன். அவள் அருளாலே நடக்க போகும் அனைத்தையும் கண்டேன். சித்தர்களின் புலம்பல் தெளிவில்லாதது நமது அறிவிற்கு புலப்படாதது என்பதை மனதாலும் அறிவாலும் உணர்ந்த கங்கன் மீண்டும் சித்த மாமுனியிடம் கேட்டார்.

ஐயரே எதை கண்டீர்கள், கலவரம் வருமா? கடும்பகை சூழுமா? பார் ஆண்ட பரதவ வம்சம் படுகுழியில் விழுமா... அம்மச்சா ஆத்தா ஏதும் சொன்னாளா ?
என கேட்க கேட்க முறுவலித்த மாமுனி, பாறை முட்ட கலகலத்தார், இடையறாது சிரி சிரியென சிரித்து முடித்தார்.

தக்சயா……. தக்சயா கொடி உரிமையை விட்டு கொடுக்க வேண்டி நின்றேன். பிட்டுக்கு மண் சுமந்த பெருமாள் போல என் பிள்ளைகளும் நானும் பெட்டி பெட்டியாய் மண் சுமக்கும் காட்சி கண்டேன். அறம்பாடும் நானே வாளெடுத்து சிரம் அறுக்கும் காட்சி கண்டேன்.

தக்சயா ஊரையே கொல்வாய் நீ, கங்கன் காணாமல் போவானப்பா, என தீர்க்கத்தரிசனம் பேசி நிறுத்தியவர் சற்று நேரம் அமைதியானார். துக்கம் தொண்டையை அடைக்க கரகரத்த முனகலாய் இனிமேல் ஆத்தாளுக்கும் நமக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லையப்பா என ஓலமிட்டு அழுதார். அஞ்சா மாமுனியின் அழுகை குரல் கங்கனை கரைத்தது. 

அவன் கண்களில் கடலின் உப்பு நீர் வழிந்தது அப்போதும் பாறையில் கடலின் உப்பு நீர் வழிந்து பாறையை கழுவிக்கொண்டிருந்தது ஏதோ ஒப்பந்தத்திற்கான முன்னுரையாகவே காலத்திற்க்கு தெரிந்தது. நீண்ட அமைதிக்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள பெருமூச்சு விட்டபடி மீண்டும் பேச தலைபட்ட மாமுனி சொன்னார்.

ஆனாலும் புதிய யாகமுறை நாளை செய்வோம். அதுவும் பரதவ இடத்தில் தான். அரச சபை எனக்கு ஆகாது தக்சயா. உன் தரவாட்டுக்கு அரசனை வரச்சொல் குமரி துறையிலே வெள்ளியலிலே இருந்து அவனுக்கு விளக்கம் சொல்கிறேன், என நீண்ட நெடும் பேச்சை நிறுத்தி மீண்டும் சுருட்டை வாயருகில் தூக்க......... மீண்டும் மறைந்து போவாரோ என பயந்து ஓடிப்போன கங்கன் அவரை தடுத்து,

ஐயரே... கிளம்புவோம் குமரிதுறையிலே குழப்பம். எனக்கும் தெரிகிறது என்றதும். தக்சயா நீ கங்கனாகத்தான் வாழ்கிறாய் என அருகே வந்து கட்டி அணைத்தார். வீட்டு திண்ணையின் ஓரத்திலே தனி ஆளாய் வெளி வந்தார் கங்கனார். கங்கனாரை பாத்த ஆத்தா ராசா... இங்கதான், இருந்தியா மோனே... என கட்டிபிடித்து உச்சி முகர்ந்தாள்.

ஊழிகாலம் முதல் வரலாறுகளோடும், சரித்திரங்களோடும், சாட்சியாக பயணப்படும் காலம், இனிமேல் நடக்கவிருக்கும் காட்சிகளை நினைத்து தனக்குள் புலம்பிகொண்டது. அது காலத்தின் புலம்பலா? அல்லது பரதவ குலத்தின் துலங்கலா? காலத்தோடு நாமும் பயணப்படுவோம்.

உங்களுடன் உங்கள்

...........கடல் புரத்தான்............
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com