வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 10 November 2019

பார்
‘பார்’ என்றால் என்ன?’ தமிழ் தெரிந்த இலக்கிய ஆர்வலர் ஒருவரிடம் இப்படி கேட்டுப் பாருங்கள். அவர் ‘உலகம்’ என்பார்.

‘பார் என்றால் என்ன?’ நெய்தல் நிலம் சார்ந்த கடலோடி ஒருவரிடம் கேளுங்கள். அவர் ‘பார் என்றால் கடலடியில் உள்ள பாறை’ என்பார்.

ஆம். பார் என்பது இன்று உலகத்தைச் சுட்டி நிற்கும் தமிழ்ச்சொல்தான் என்றாலும், உண்மையில் அது கடற்பாறையை அல்லது கடலோரத்தை, கடலடியில் உள்ள தரைப்பகுதியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச்சொல் ஆகும். காரணம், ஒருகாலத்தில் ஒட்டுமொத்த உலகப்பந்திலும் ஆழி சூழ்ந்திருந்தது. அந்த ஆழியின் அடியில் அமிழ்ந்திருந்த பார்கள் மெல்ல தலைதூக்கி பின்னர் உருவானதுதான் இந்த தரை உலகம்.

வள்ளுவர் பெருமான் அவரது குறளில் பார் என்ற சொல்லை எந்த அடிப்படையில் பயன்படுத்துகிறார் பாருங்கள்.

‘இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும்’ என்கிறார் நம் பாட்டன். அதாவது, ‘காவல் இல்லாத கப்பல் அல்லது தோணி பார் தாக்கி உடைபடும்’ என்கிறார் வள்ளுவர்.

தமிழில் கடற்பாறையை, கடலோரத்தைக் குறிக்கும் இந்த பார் என்ற சொல், பல்வேறு நாட்டு மொழிகளில் கடல் அல்லது கடற்கரை என்ற பொருளில் புழங்குகிறது.

எடுத்துக்காட்டாக, அரபு மொழியில் ‘அமிர் அல் பாஹ்ர்’ (Amir-Al-Bahr) என்றால் கடலின் மன்னன் என்று பொருள். இந்த அமிர் அல் பாஹ்ர் என்ற சொல்லில் இருந்துதான் கடற்படைத் தளபதியைக் குறிப்பிடும் அட்மிரல் என்ற ஆங்கில வார்த்தை உருவானது. பாஹ்ரைன் என்ற அரபுச் சொல்லுக்கு இரண்டு கடல்கள் என்பது அர்த்தம்.

பாரசீகம் எனப்படும் பெர்சியன் மொழியிலும் பார் என்பது கடற்கரையைத்தான் குறிக்கும். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபார் (Zanzibar) என்ற தீவின் பெயர், பாரசீக மொழியைச் சேர்ந்த சென்ஜிபார் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதற்கு ‘கருப்புக் கடற்கரை’ என்பது பொருள். (Zenji-கருப்பு, Bahr-கடற்கரை).

பார்வா (Parva) என்ற சொல் கொண்டாட்டத்தைக் குறிக்கும் அந்நிய மொழிச்சொல் என்பார்கள். ஹோலிப் பண்டிகைக்குப் பின் பார்வதி பிறந்ததால், அவள் பார்வதி எனப் பெயர் பெற்றாள் என்றும் சிலர் கூறுவார்கள்.

ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னதுபோல, பார் என்பது கடற்கரையைக் குறிக்கும் தமிழ்ச்சொல். வதி என்றால் வாழ்பவள் என்று பொருள். பார்வதி என்ற அங்கயற்கண்ணி, கடற்கரையில் வாழ்ந்த பெண் என்பதால் அவள் பார்வதி எனப் பெயர் பெற்றாள் என்பதே உண்மை.

பாரிஜாதப்பூ என்ற ‘தேவலோகப்பூ’ உண்மையில் கடலோரம் மலர்ந்த பவள மல்லிகைப்பூ. ஆகவே, ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்று எழுதிய பாரதி ஒரு பைந்தமிழன் என்றால், ‘பார் தாக்கப் பக்குவிடும்’ என்று குறள் எழுதிய வள்ளுவன் ஒரு தொல்தமிழன்.
-  மோகன ரூபன் 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com