கடல் வாணிபத்தின் தொட்டில்!
கடல் வாணிப போக்குவரத்துக்கு ஆதாரமாக விளங்குவது, துறைமுகம். துறைமுகம் என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கிச் செல்வதற்குரிய இடம். இங்கு கப்பல்களுக்கு வேண்டிய பொருட்கள், தொழிலாளர்களுக்கு இருப்பிடம் போன்ற வசதிகள் வழங்கப்படும். துறைமுகங்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பறைசாற்றும் முக்கிய அம்சம்.

இயற்கையால் பாதுகாக்கப்பட்ட ஆழமான நீர்நிலையைக் உள்ளடக்கிய நிலவடிவம் துறைமுகம். கப்பல்கள் பாதுகாப்போடு நங்கூரமிடலாம்; அலைகளின் வேகமும் குறைவாக இருக்கும்; புயல்காற்றின் பாதிப்பு இருக்கமுடியாது என்பதை கணக்கில் கொண்டு, துறைமுகங்கள் அமைந்தன. பண்டைய துறைமுக நகரங்களின் பெயர் பட்டினம் என்றும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பெருநகரங்கள் பட்டணம் என்றும் அழைக்கப்பட்டன. தேங்காய்பட்டினம், காயல் பட்டினம், முசிறிபட்டினம், காவிரிப்பூம்பட்டினம் இப்படி பல துறைமுகப் பட்டினங்கள் இயற்கைத் துறைமுகங்களாக விளங்கின.
இயற்கைத் துறைமுகத்துக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது, மும்பை துறைமுகம். தமிழ்நாட்டில் தோணிப் போக்குவரத்து நடக்கின்ற தூத்துக்குடியும் பழைய துறைமுகமே. செயற்கைத் துறைமுகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு, சென்னைத் துறைமுகம். இந்தியாவின் 7,517 கிலோ மீட்டர் நீளமான கடலோரப் பகுதியில் 12 முக்கியத் துறைமுகங்களும், 187 சிறிய அளவிலான துறைமுகங்களும் இயங்கி வருகின்றன. இந்தியாவின் பெரிய துறைமுகங்களின் வரிசையில், மும்பை, கோவா, கொச்சி, விழிஞ்சம், விசாகப்பட்டினம் என்று, பிரபலமான 6 இயற்கைத் துறைமுகங்கள் இருக்கின்றன.
தமிழகத்தின் முக்கியத் துறைமுகங்களாக, சென்னைத் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஆகியவை விளங்குகின்றன. சிறிய துறைமுகங்களாக, சென்னை எண்ணூர், நாகபட்டினம், புதுச்சேரியில் காரைக்கால் ஆகியவை உள்ளன. துறைமுகங்கள் கடல் வாணிபம் செய்வதற்காக மட்டுமின்றி, நாட்டின் கடல் பாதுகாப்பை உறுதிசெய்யும் அரணாகவும் இருக்கின்றன.
- ஜெ.பிரபாகர்
Thanks: www.dinamalar.com