வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday 19 November 2019

பரதர் நாடு பிரகடனம்
பரதகுலத்தவரின் தனி நாடு பிரகடனம்

வருடம்  கிபி 1603

பரதகுல எழுச்சி  ஆம் பரதவர்கள்  1604ல் இருந்து  1610  வரை   உலகில் தனித்து  வாழ்ந்த தனித்துவமான  வரலாறு 

தூற்றுக்குடிக்கு அருகே உள்ள   பாண்டியன் தீவு அல்லது முயல் தீவு (HARE ISLAND) என்று அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள தீவு போர்த்துகீசியர் காலத்தில் ராஜதீவு ISLE DES RESIS என்று அழைக்கப்பட்டது. அந்த காலத்தில் இத்தீவு முற்றிலும் கடலால் சூழப்பட்டிருந்தது. இன்றிருக்கும் தரைவழி அன்று இல்லை. பரத வணிகர்களின்   கப்பல்களும் வெளி நாட்டினர்  கொண்டு வரும் வணிக கப்பல்களும்  வணிக கூலங்கள் அதாவது பண்டகங்களை பாதுகாக்கும் பண்டக சாலையாக  இந்த தீவு பயன்படுத்த  பட்டது

-------------------------------------------

பரதகுல பாண்டியனின் எதிரியான  நாயக்கனின் அராஜகம் 

கிபி 1311 ல் மாலிக்காபூரால் பரதகுல பாண்டியர்கள்  வீழ்ச்சி  அடைந்த பிறகு  பரதகுல மக்கள்  ஒடுங்கி  போய்  நெய்தல்  நிலத்தில்  பாண்டியாபதி தலைமையில் வாழ்ந்து கொண்டிருந்த  காலத்தில் 

1600 ஆம் ஆண்டுகளில்  மதுரையை ஆண்டு வந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கனின்  நம்பிக்கைக்கு உரிய  பரதகுல மக்கள்  மீது  நாயக்கனுக்காக அராஜகங்கள் செய்ததால்  பரதகுல மணப்பாட்டு பரதவர்களால்  வெட்டி கொலை செய்யப்பட்ட  வெட்டும்  பெருமாள்   இழந்து  இருந்த  முத்து கிருஷ்னப்ப நாயக்கன்  பரதவர்களை பழிவாங்கும்  நோக்கத்துடன், கயத்தாறு  குறுநில மன்னனுடன்  ஒரு ஒப்பந்தம்  செய்து கொண்டான் . அதன்படி  6000 பணம்  எனும் பெருந்தொகையை  பரதர்களிடம் இருந்து  வரியாக வசூலித்து  தரும்படி ஏவினான்.

முத்துக்குளித்துறை பரத மக்கள் மீது 6000 பணம் என்னும் தொகையை வரியாக விதிக்கப்பட்ட தொகையை கட்டமுடியாமல் திக்குமுக்காடி  போயினர்  பரவர்கள் அதற்கு  காரணம்  கிபி 1603ம் ஆண்டில் முத்துச்சலாபம்  சரியாக  நடைபெறவில்லை. ஆகவே வரி செலுத்த முடியாது  என  நாயக்கன் ஆனையை ஏற்க மறுத்தனர் 

 மதுரை நாயக்கன், தனது படையுடன், விஜயநகர பேரரசின் வடுகர் படையையும் கயத்தாறு  மன்னனின் சிறுபடையும்  சேர்ந்து, ஏறத்தாள 3000 போர்வீரர்கள்,யானைப்படை, குதிரைப்படை சகிதமாக தூற்றுக்குடியை தாக்கி மக்களின் வீடுகளைச் சூறையாடினான். தற்போதைய கெரக்கோப் மைதானத்தில்  அன்று அமைந்து இருந்த  போர்ச்சுகீஸியர்  தலைமை இல்லத்தையும் அதை ஒட்டி இருந்த  இயேசு சபைத் இல்லத்தையும் இடித்துத் தகர்த்தனர்.

அதற்கு  முன்பாகவே  பரதர் மாதாவாம்  பனிமயத்தாயின் திருச்சுரூபம், பாதுகாப்பான  ஒரு இடத்திற்கு  கடத்தப்பட்டு இருந்தது.
அதோடு இணைந்திருந்த பனிமய மாதா ஆலயத்தையும், குருமடத்தையும், புனித இராயப்பர் கோவிலையும் நெருப்பு வைத்து அழித்தனர். பதினெட்டு நாட்களாக இருந்த முற்றுகைக்குப்பின் இயேசு சபை பொருளாளராக இருந்த சுவாமி கஸ்பார் தப்ரோ (Gaspar De Abreu) வை பிணைக் கைதியாகக் கொண்டு சென்றனர். நாயக்கனின்  படையெடுப்பு மீண்டும்  தொடரும்  என்பதை அறிந்த   அன்றய பரதகுலாதிபன், பாண்டியாபதி,  தொன் ஜெரோனிமுஸ் தெக்குருஸ் பீரிஸ் ( 1590 - 1615 ) கப்பம் கட்டாமலே யுத்தத்தை தவிர்க்க ஒரு வியூகம் தீட்டினார்.

 அதன்படி எழுகடற்றுறை பட்டங்கட்டிகளும் மற்றும்  சமூதாய பெரியோர்களும், புன்னைக்காயலில் கூடி வரிப்பிரச்சனை பற்றி கலந்துரையாடினர். இறுதியில் சிவந்தி நாத பிள்ளை என்னும் அதிகாரியை பரதகுல மக்களுக்காக பரிந்து பேசி வரியைக் குறைக்க கயத்தாறு மன்னனிடம் அனுப்பி வைத்தனர். அதற்கு கயத்தாறு மன்னன் இணங்க மறுத்தான்.

 இரண்டாவது முறையாக பரதகுல பாண்டியாபதியும் எழுகடற்றுறை பட்டங்கட்டிகளும்,மற்றும்  முத்துக்குளித்துறையின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும்  புன்னைக்காயலில் கூடினர்.

சமூதாய கூட்டம் இறுதியில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை பிரகடனப்படுத்தினார்கள். 

பிரகடனப்படுத்திய பரதகுல பெருமக்கள் 

தொன் ஜெரோனிமுஸ் தெக்குருஸ் பீரிஸ் முத்துக்குளித்துறை முழுவதுக்குமான சாதித் தலைவன்)

பிரான்சிஸ் டி மெல்லா - தூற்றுக்குடிக்கு மட்டுமான சாதித் தலைவர்

ஜான்  டி குருஸ் - (முத்துக்குளித்துறை முழுவதற்குமான பொருளாளர்)

அந்தோணி டி குருஸ் - (கொம்புத்துறைப் பட்டங்கட்டி)

ஜான் டி குருஸ் - (பரதகுலாதித்தன், தூற்றுக்குடி)

ஜான் பெர்னாண்டஸ் கொரைரா - (தூற்றுக்குடி)

தொம் பேதுரு காகு -  (முத்துக்குளித்துறை முழுவதற்குமான தலைமைக் கணக்குப்பிள்ளை)

பவுல் மச்சாது - (புன்னைக்காயல்)

தொம்மை டி குருஸ் - (வைப்பாறு)

தொம்மை டெனிஸ் - (மணப்பாடு)

தொம்மை வாஸ் டி லீமா - (வேம்பாறு)

தொம்மை பீரிஸ் - (வைப்பாறு)

பேதுரு வாஸ் - (தூற்றுக்குடி)

தொம்மை டி குருஸ் வீர நாராயணத் தேவர்

மத்தேயு தல்மெய்தா வல்நாசியார்

மனுவேல் டி குருஸ் - தூற்றுக்குடி

தாமஸ் குருஸ் - (வீரபாண்டியன் பட்டணம்)

மனுவேல் டி மேஸ்கித்தா - (வேம்பாறு)

ஜான் டி மிராண்டா  - (வேம்பாறு)

தொம்மை டி குருஸ் ஆரிய பெருமாள் - ( மணப்பாடு)

மத்தேயு டி மொறாய்ஸ் - (பழையகாயல்)

ஜான் டி குருஸ் - (தூற்றுக்க்குடி)

தொம்மை பர்னாந்து குத்திப்பெரிலார் - (ஒவிதோர், தூற்றுக்குடி)

பெர்த்தொலமே விக்டோரியா - (ஒவிதோர், தூற்றுக்குடி)

------------------------------------

பரதகுல வரலாற்று  பிரகடனம்

கிபி 1603 ல்  எடுக்கபட்ட பிரகடனம்  இனி பரதகுல மக்கள்  எந்த ஒரு மன்னனுக்கும் குடி மக்கள்  ஆக மாட்டார்கள்    இப்போது  வாழும் இடத்தை விட்டு ஒட்டு மொத்தமாக  பாண்டியன்  தீவில்  குடியேறி தனி நாடாக  வாழ்வோம் என்பதே  அந்த பிரகடனம்

உடனடியாக மக்கள்  குடியேற்றம்  நடை பெருவதற்க்காக  புனித இஞ்ஞாசியாரின் சேசுசபை  குருக்களுடன்,  கோவா போர்ச்சுகீஸிய ஆளுனர் ஜாஸ் டி சூசா  என்பவர்  ஒத்துழைப்புடன் 

ஏறக்குறைய பத்தாயிரம் மக்கள் பாண்டியன்  தீவில் குடியேறினர். அங்கு தங்களுக்கென்று தனித்தனி இல்லங்கள் அமைத்து வாழ்ந்தனர். அனைவருக்கும் குடிநீர் வழங்க பெரிய நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன.   போர்ச்சுகீஸ்  அதிகாரிகளுக்கும் அலுவலகங்கள்  நேர்த்தியாக கட்டப்பட்டன.மேலும் தீவைச் சுற்றி பாதுகாப்பிற்காக ஒரு மதிற்சுவரும் அமைக்கப்பட்டது. இங்கே  பரதகுல மக்கள்  குடியேரியது   கி பி 1604ல் நிறைவேறியது 

அன்னை மரியாளுக்கு பெரியதோர்  ஆலயமும் மூன்று  சிறிய ஆலயங்களும் கட்டப்பட்டன, முன்பே கடத்திழவைக்கபட்டு இருந்த பரதர் மாதாவின் திருச்சொரூபம் பெரிய ஆலயத்தில்  நிறுவப்பட்டது.

-----------------------------

புனித இஞ்ஞாசியாரின்  இயேசு சபையினரும் தூற்றுக்குடியிலிருந்த தங்களின் தலைமை இல்லத்தை முயல் தீவுக்கு மாற்றினர். மொத்தம் பதினாறு அறைகளைக் கொண்ட புதிய தலைமை இல்லம் ஒன்றை அங்கு கட்டி எழுப்பினர். அதைச் சுற்றி மூன்று அரண்களும் அமைக்கப்பட்டன.

இயேசு சபையினரின் தலைமை இல்லத்திற்கு அருகே கற்களால் ஒரு பெரிய ஆலயம் கட்டப்பட்டது. இப்புதிய ஆலயத்திற்கு, இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் ஆல்பர்ட் லெர்சியோ, 1604 ஆம் ஆண்டு ஜூலை  2 ஆம் தேதி தேவ தாய் எலிசபெத்தம்மாளைச் சந்தித்த திருநாளில், அடிக்கல் நாட்டினர். இவ்வாலயம் தேவதாய் மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆலயத்தை உருவாக்க மக்கள் 1000 தங்க நாணயங்களைக் காணிக்கையாகக் கொடுத்தனர். 

புதிய ஆலயத்தின் கட்டிட வேலைகள் 1606 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றது. அதன் அகலமும் அழகும் மிக்க ஆலயம். ஆலயத்தினுள்ளே ஒன்பது பீடங்கள் இருந்தன. ஆலயத் திறப்பு விழாவிற்குப் பின் பாண்டியன் தீவு ஒரு தனிப் பங்காகவே இயங்கியது. இயேசு சபைக் குரு ஒருவர், இப்பங்கைக் கண்காணித்து வந்தார். அது 'தேவ மாதா பங்கு' (MADRE DE DEOS) என்று வழங்கலாயிற்று. அன்னையின் ஆலயம் நீங்கலாக மேலும் மூன்று சிற்றாலயங்களும் கட்டப்பட்டிருந்தன. தீவின் ஒரு கோடி முனையில் உயர்ந்ததோர் மரச் சிலுவையும் நடப்படிருந்த்து. (தகவல்: உரோமை இயேசு சபை பழங்சுவடி நிலையம் (ARSJ) Goa 55. 163-164)

பரத மக்கள், தூற்றுக்குடியிலிருந்து பனிமய அன்னையின் அற்புத சுரூபத்தை பத்திரப்படுத்தி, அதனைத் தங்களோடு பாண்டியன் தீவுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு உருவாகியிருந்த புதிய ஆலயத்தில் அன்னையின் சொரூபத்தை ஆடம்பரமாய் நிறுவி வணங்கி வந்தனர். முன்னர் தூத்துக்குடியில் பனிமய தாயின் சுரூபத்தைப் பக்தி பரவசத்தோடு வணங்கி, அதனால் அன்னையின் அற்புதக் காட்சிகளைக் காணும் பேரறு பெற்றிருந்த, இயேசு சபை சகோதரர் வணக்கத்திற்குரிய பேதுரு பாஸ்து என்பவர், பாண்டியன் தீவிலும் தங்கி, பனிமய அன்னைக்கு வழக்கம் போல் தனது பக்தி வணக்கத்தைச் செலுத்தி வந்தார். 

-----------------------------

பட்டொளி வீசிப்பறந்த பரதர் நாடு

ஒரு தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்ட பாண்டியன்  தீவு தன்மானத்துடன்  பாண்டியாபதி தலைமையில் கிபி 1604 முதல் 1610   வரையில்  ஆறு ஆண்டுகள்  அற்புதமாக கடந்தது

---------------------------

தனிநாடு வீழ்ச்சியும் முட்டாள்  ஆயரும்

அக்காலத்தில் முத்துக்குளித்துரைக் கிறிஸ்தவ மக்கள், இயேசு சபைக் குருக்களின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தாலும், முத்துக்குளித்துறை முயல் தீவு, மன்னார் தீவு அனைத்தும் கொச்சி மறைமாவட்டத்திற்கு உட்பட்டிருந்ததினால், அவை கொச்சி ஆயரின் ஞான அதிகாரத்தின் கீழ் இருந்தது. முயல் தீவு குடியேற்றத்தின் போது, கொச்சி ஆயராக இருந்தவர் அந்திரேயாஸ் என்பவர். அவர் பிரான்சிஸ்கன் சபையை சார்ந்தவர். அவர் இலங்கை சென்றிருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே பாண்டியன் தீவுக் குடியேற்றம் நடந்து முடிந்தது. இதனால் ஆயர் அந்திரேயாஸ் மனம் நொந்தார். பாண்டியன் தீவு கிறிஸ்தவக் குடியேற்றத்தைத் தனது ஞான அதிகாரத்திலிருந்து விடுபட, இயேசு சபையினர் செய்த சூழ்ச்சி என்று தவறுதலாகப் புரிந்து கொண்டார்!

எனவே, பாண்டியன் தீவில் குடியேறிய கிறிஸ்தவ மக்களை, மீண்டும் நிலப்பகுதிக்கே திரும்புமாறு ஆயர் வற்புறுத்தினார். ஆனால் நிலப்பகுதி தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினால், மக்கள் ஆயரின் ஆணைக்குப் பணிய மறுத்தனர். ஆயர் அந்திரேயாஸ் தீவில் குடியறியவர்களை திருச்சபையிலிருந்து விலக்கம் செய்ததுடன், மதுரை நாயக்கன், கயத்தாறு மன்னனுடன் போர் ஒப்பந்தம் செய்து கொண்டார். பின் கொச்சி மற்றும் கோவாவிலிருந்து ஒரு போர்த்துக்கீசியப் படையைத் திரட்டி வந்து, பாண்டியன் தீவை முற்றுகையிடும்படி செய்தார். 

இந்த முற்றுகை 22 நாட்கள் நீடித்தது. போதிய உணவும், குடிநீருமின்றி மக்கள் தவித்தனர். எனினும் ஆயரின் படைக்கு எதிராக இயேசு சபைக் குரு ஜான் போர்கஸ் என்பவர் தலைமையில் பரதர்கள் சண்டையிட்டனர். இறுதியில் போர்த்துகீசிய வீரர்கள், இராஜ தீவுக்குள் புகுந்து, அங்கிருந்த இயேசு சபை தலைமை இல்லத்தையும் தாக்கி அழித்தனர். மாதாவின் ஆலயமும், மக்களின் வீடுகளும் சேதமடைந்தன. இதனால் வேறு வழியின்றி மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர் திரும்பினர். இயேசு சபையினரும் மன்னார் தீவில் தஞ்சம் புகுந்தனர். ஆறு ஆண்டுகளாக நீடித்த பாண்டியன் தீவுக் குடியேற்றம் இவ்வாறு முடிவுக்கு வந்தது. ( தகவல் : AGSJ: Goa 56 (Malabarica) f. 178: Goa 55, ff 176 -178)

இந்த சமயத்தில்   பல பரதகுல மக்கள் கடற்கரை தவிர்த்து  உள்நாடு பகுதில் குடியேற்றம்  நடந்தது

அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பியதும் கொச்சி ஆயர் #அந்திரேயாஸ் தூத்துக்குடி, வேம்பாறு, வைப்பாறு, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டணம் ஆகிய ஊர்களைக் கண்காணித்து வந்த இயேசு சபைக் குருக்களை நீக்கிவிட்டு கத்தனார்கள் எனப்படும் சிரியன் ரீதிக் குருக்களை நியமித்தார். இதனால் இந்த பங்குகளில் லத்தீன் வழிப்பாட்டு முறைகள் நீக்கப்பட்டு, சிரியன் ரீதியான வழிப்பாட்டு முறைகள் புகுத்தப்பட்டன.

போர்த்துகல் மன்னன் 3 -ஆம் பிலிப்பு முத்துக்குளித்துறையில் நிகழ்ந்த குறிப்பாக இராஜ தீவில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிந்து வேதனையுற்று மீண்டும் இயேசு சபையினரிடம் முத்துக்குளித்துறையை ஒப்படைக்குமாறு கொச்சி ஆயருக்கும், கோவாவிலிருந்த போர்த்துகீசிய ஆளுநருக்கும் 1614 ஆண்டில் ஆணை பிறப்பித்தார். அதனை பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. எனவே மீண்டும் கோவா ஆளுநருக்கு கண்டிப்பான கட்டளையிட்டு கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து 1621 ஆம் ஆண்டு இயேசு சபையினர் பரத குலத்தோரின் மிகுந்த வரவேற்பிற்கிடையே மீண்டும் முத்துக்குளித்துறைக்குத் திரும்பினர். இதனால் அதிர்ச்சியுற்ற கொச்சி ஆயர் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்தார்.

மறைந்த மறைத்திரு வெனான்ஸியுஸ் அடிகளார் இக்கடலோரத்தில் வாழும் கடவுளின் மக்களை  வாழவைத்ததிலும்  அழித்ததிலும்  நம் ஞான அதிகாரிகளுக்கு முக்கிய பங்குண்டு  என கடலோரம் கடவுள் என்ற புத்தகத்தில் எழுதிஉள்ளார்

நன்றி: பாண்டியாபதி  கோப்புகள்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com