வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 1 October 2021

அலைகளின் மைந்தர்கள் - 24
செல்வி கோபமாக அந்த இடத்தை விட்டு கடந்து சென்ற பிறகு.. ராயப்பு கடற்கரைக்கு திரும்பி அங்கே சென்று பார்க்க... விற்பதற்காக மணலில் குவிச்சு வச்சுட்டு வந்த மீன்கள் அருகே அங்காடி விற்ப்பவள் பாதுகாப்பாக நின்றாள்.. நான் மட்டும் இல்லைனா இந்நேரம் காக்காவும் கள்ளபிராந்தும் பாதி மீனை கொண்டுபோயிறுக்கும்.. அண்ணா.. ஒரு அக்கா பின்னாடி போனியள்ள அவுங்க நீங்க கட்டிக்கப்போறவுகளா..?
ஆம.. உனக்கெப்படி தெரியும்..

அவுக மொறச்சு பார்த்ததும் பதறிக்கிட்டு பின்னாடி ஒடினியள்ல அதான் கேட்டேன்.. இப்பவுலாம் நண்டும், சிண்டும் அக்குறும்பு புடிச்சதாதான் இருக்கு.. மீன்களை விற்று முடித்து வலைகளை கட்டுமரத்திலிருந்து இறக்கி கடற்கரை மணலில் நல்ல அகலமாக விரித்து காயப்போட்டுட்டு... எல்லா வேலையும் முடிஞ்சுட்டுன்னு கறிமீனை கையில எடுத்துட்டு வீட்டுக்கு செல்லும் போது பக்கத்து வீட்டு வாசல்ல நின்ற செல்வி அவனிடம் எதுவும் பேசாமல் தலையை குனிந்தவாறு மௌனமாக நின்றாள்..

வீட்டுவாசல் வரை சென்ற ராயப்பு திரும்பி செல்வியிடம்..
வீட்டுக்குள்ள வா.. என்றதற்கு

நான் வரல என்றாள்..

ஊருக்கு திரும்பி போறதுக்குல்ல வைப்பாத்தா அடி வாங்காம போகமாட்டா போல.. ராயப்பு வாய்க்குள் முனங்க..

ம்ம்.. அடிப்பிய இவுகளுக்கு சும்மாதான் பெத்து போட்டுறுக்கு..

அப்ப நீ என் பொண்டாட்டி இல்லையா..?

மௌனமாக நின்றாள் செல்வி..

வீட்டில் தன் அம்மா இல்லாததால் கொண்டுவந்த மீனை தரையில உட்கார்ந்து அருவாமனையில சுரண்டி கொண்டிருந்தான் ராயப்பு..

அங்காடி விக்கிறவள வர சொல்லியிருக்கலாம்ல.. சோறு கொளம்பு பொங்கி கொடுப்பால்ல... முதுகுக்கு பின்னாலிருந்து கிண்டலாக கேட்ட செல்வியை பார்த்து கோபமாக திரும்பியவனை.. மொதல்ல எந்திரிங்க.. தரையில் அமர்ந்து மீனை சுரண்டி சுத்தம் செய்து, சோறு பொங்க அடுப்பு பத்தவச்சா செல்வி ..

சமச்சு முடிச்சவுடனே நான் கிளம்புறேன் என்றவளை கையை பிடித்து இழுத்து பக்கத்தில் உட்காரவைத்து.. இன்னைக்கு ரெண்டு பேரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுவோம் என்ற ராயப்பிடம்...

கையைவிடுங்க எனக்கு எதுவும் வேண்டாம்...

அப்ப நீ சமச்சத எடுத்துட்டு போ.. நான் பட்டினியா கெடந்துக்கிறேன்.. 

ராயப்பு அருகில் அமர்ந்து தலை குனிந்தவாறு விசும்பி கொண்டே சாப்பிட்டாள்..

நமக்கு கல்யாணம் முடியுறதுக்குள்ள என்னைய நீ சாகடிச்சுறுவ.. ராயப்பு உடைந்த குரலில் சொல்ல..

கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்த செல்வி.. ஊர்ல என்னோடு சேர்ந்து திரியுறவள்ளாம் புள்ள பெத்துட்டா தெரியுமா உங்களுக்கு.. எல்லாரும் என்னை கேலி பன்றாளுவ.. கொமரி முத்திட்டா கல்யாணம் நடக்காதாம்.. ஏதாவது குறையாஇருக்கும்னு சொல்லுவாங்கலாம்...

என் நிலைமையை புரிஞ்சுக்கடி... வியாபாரத்துக்கு வேம்பார் கூட்டாளியோடு ரெண்டுவருஷத்துக்கு முன்னாடி இலங்கைக்கு போன எங்க அண்ணன் அடுத்த மாசம் நடக்கிற ஊர் திருவிழாவுக்கு வர்றானாம்.. அவனுக்கு எங்க அக்கா மகளை பேசி முடிக்கத்தான் எங்க அம்மா கடலாடியில இருக்கிற அக்கா வீட்டுக்கு போயிறுக்காக.. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ள கல்யாணம்னு எங்க அம்மா சொல்லியிருக்காக.. கண்கள் கலங்கியவாறு எனக்கு மட்டும் உன்மேல ஆசையில்லையா..அவளை தன் அருகில் இழுத்து தன் தொடையை செல்வியின் தொடைமேல் வைத்து கடைசி சோத்துருண்டையை அவளுக்கு ஊட்டினான் ..

வழிந்தோடிய கண்ணீரோடு உள்வாங்கிய அவள் வெகுநேரம் வரை சோத்துருண்டையை விழுங்கவுமில்லை... ராயப்பு அவள்மீது படிந்திருந்த தன்
தொடையை அகற்றவுமில்லை... 

புன்னகாயல் கடல் வணிகத்திற்கு மட்டுமல்ல முத்து குளித்தலுக்கும், போர்த்துகீசிய மறை போதகர்களுக்கும் தலைமையாய் இருந்தது.. தூத்துக்குடி, புன்னகாயல் பரதவர்களை முத்துகுளித்தலுக்கு டச்சு நிர்வாகம் அழைத்தபோது.. முத்து சலாபத்திற்க்கு செல்லுமுன் உங்களின் மறை போதகர்கள் எங்களை மந்திரிக்க கூடாது.. உங்களின் பேராசைக்காக கடலை வசியப்படுத்தும் மந்திரவாதிக்கு நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம். எங்களின் இயேசு சபை குருக்கள் முத்து சலாபத்திற்க்கு எங்களோடு வந்து மந்திரித்தால் மட்டுமே முத்து குளித்தலுக்கு செல்வோம் என துணிவாக அறிவிக்க ..

தங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டி ஊர் தலைவர்கள் இருவரை ஓராண்டு சிறையில் அடைத்தார்கள். அப்போதும் கூட பரதவர்கள் அடிபணியவில்லை. யாரும் டச்சுகார்கள் கோவிலுக்கு செல்லகூடாது என்று முத்துகுளித்துறையின் ஊர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.. டச்சுகாரர்களால் அவர்களுக்கு மதரீதியாக எவ்வளவோ இடஞ்சல் வந்தாலும் இருநூறு வருடத்திற்க்கு முன்பு அவர்களின் அரசர் பாண்டியாபதியின் உத்தரவை அடுத்து அனைவரும் கிறிஸ்த்துவத்திற்கு மாறியதை இதுவரை அரச கட்டளையாகவே நினைத்து வாழ்ந்து வந்தது பரதவ இனம்..

வீட்டுக்குள் அசந்து தூங்கி கொண்டிருந்த ராயப்ப தட்டி எழுப்பி போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு நகரும் போது அவன் கால்ல லலுக்னு ஒரு மிதி மிதிச்சுட்டு போனா செல்வி அப்பத்தான் தன்னப்பத்தின நெனப்பு இருந்துகிட்டே இருக்கும்னு...

நடுநிசி நேரம்.. பனைமரத்திலிருந்து ஒரு உருவம் கீழே இறங்கும் போது வேகமாக தன்னை நெருங்கி கொண்டிருக்கும் குதிரையின் காலடி சப்தம் கேட்டு பயந்து போய் மீண்டும் மரத்தில் ஏறி அமர்ந்தது.. சந்தியாகப்பர் வாளோடு குதிரையில் கடந்து போய் கொண்டிருந்தார்.. இந்தாளு ஒருத்தரு.. குதிரை வச்சிறுக்கம்னு ஊரை காக்கிறம்னு சொல்லி நேரம் காலம் தெரியாம பொசுக்கு பொசுக்னுதான் சுத்திகிட்டு திரிவாறு..

இந்த நேரத்தில தான் புருஷன் பக்கத்துல உட்கார்ந்து ஆசைதீர பார்த்துட்டு வரலாம். அதையும் கெடுத்து போட்டாறு...ஏக்கத்தோடு பனைமரத்திலிருந்து ராயப்பு வீட்டையே பார்த்து கொண்டிருந்தாள் நூறு வருடங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் உருவமற்ற மாரியம்மா....

........ தொடரும் .......
- சாம்ஸன் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com