வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 6 October 2021

அலைகளின் மைந்தர்கள் - 25
கொற்கை அருகே கரையடியூர் என்ற இடத்தில் (ஆறுமுக மங்கலம் குளக்கரையில்) பராமரிக்க படாமல் இடிந்த நிலையில் கிடந்த ஆலயத்தை ஒரு பெரியவர் கண்ணீரோடு அசையாமல் நின்று பார்த்து கொண்டிருந்தார். அருகில் வந்த இளைஞன்.. ஏன் அந்த கட்டிடத்தை பார்த்து அழுகிறீங்க என்று கேட்க....

கட்டிடமா.. இல்லையப்பா இது ஆலயம்.. பரதவர் அன்னை குடியிருந்த ஆலயம்..

பனிமய மாதாவா..?


ம்ம்.. 1668 ஆம் ஆண்டு டச்சுகாரர்களால் தூத்துக்குடியில் உள்ள நம் அன்னையின் ஆலயம் இடிக்கப்பட.. நம் தாயை தூத்துக்குடி சாதி தலைவர் கொற்கையில் உள்ள இந்த ஆலயத்தில் தான் முதன் முதலாக மறைத்து வைத்திருந்தார். அப்போது கொற்கை முத்து குளித்துரையின் தலைநகமாக இல்லை..

தூத்துக்குடி தானே நம் தலை நகரம்..? 

அது இப்ப ..

கொற்கை தலைநகரமா...?

பாண்டிய நாட்டை நம் மன்னர்கள் ஆளும்போது துறைமுக நகராகவும் துணை தலைநகராகவும் இருந்தது கொற்கை..

நம் பாண்டிய மன்னன் நெடியோன் பேரன் இரண்டாம் நெடுஞ்செழியன் மதுரையை ஆளும்போது அவருடைய மகன் வெற்றிவேல் செழியன் கொற்கையின் இளவரசராக பொறுப்பேற்றார்..

மாசாத்துவான் (கடல் வணிக பெருங்குடி) மகள் பரவத்தி கண்ணகிக்கு கொடுத்த தவறான தீர்ப்பால் இரண்டாம் நெடுஞ்செழியன் தன் உயிரை மாய்த்து கொண்டதால் கொற்கையில் இளவரசராக இருந்த அவருடைய மகன்.. வெற்றிவேல் செழியன் பாண்டிய பேரரசின் அரசராக மதுரையில் பொறுப்பேற்றார்.. தன் தகப்பன் செய்த தவறுக்காக கொற்கையில் கண்ணகிக்கு ஒரு கோவில் ஒன்றை கட்டிவிட்டுதான் (வெற்றிவேல் செழியன் நங்கை) மதுரை சென்றார் ..

கி.பி. 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கடல் பின் வாங்கியதால் கொற்கை மேடான நிலப்பகுதியாக மாறிபோக பாண்டியர்கள் பழையகாயலை துறைமுகமாக மாற்றி பின் பரதவர்களின் கடல் வணிகம் பெருக பெருக புன்னகாயலையும் துறைமுகமாக மாற்றினார்கள்.. 

கடலிலிருந்து தூரமாக போனதால் கொற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது.. யாரும் பராமரிக்காததால் நம் அன்னையின் ஆலயம் இப்படி கிடக்கிறது...  அந்த ஆலய வரலாற்றை சொல்லிமுடித்தார் பெரியவர் ...

(கீழடி தொல்பொருள் ஆராய்ச்சி பாண்டியர்களின் பெருமை என்பது போல் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கொற்கையில் வாழ்ந்த பரதவர்களின் எச்சங்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதுதான் சோகம்) .....

இரண்டு வருடங்களுக்கு பின் இலங்கையிலிருந்து வந்த ராயப்பு அண்ணன் தோமாஸ் தன் தம்பியை கூப்பிட்டு வேம்பாறுலயும் வைப்பாத்திலயும் நான் சொல்ற ஆள்ட்ட இந்த பொட்டலத்த கொடுத்துட்டு வா என்று சொல்ல, ராயப்பு கண்கள் நன்றியோடு.. சந்தியாகப்பர் கோவிலை பார்த்தது..

சரின்னா...

சொன்ன சொல் தட்டாத தம்பிய பார்த்து நெகிழ்ந்து போனான் தோமாஸ்..

( இவன் எதுக்கு போறான்னு அவனுக்கு எப்படி தெரியும்)

வேம்பாரில் இறங்கி தன் அண்ணன் சொன்ன பெயரை சொல்லி வீட்டை கண்டுபிடித்து பொருளை கொடுத்து விட்டு வேகமாக திரும்பினான்..

(அவனுக்கு இந்த ஊர் முக்கியமில்லைல)..

வைப்பாறில் இறங்கி செல்வி வீட்டை கடக்கும் போது வீட்டுக்குள்ளிருந்து இரண்டு மூன்றுபேர்குரல் கேட்டதால் பதறிகிட்டு திரும்பாமலே கடந்து போய் மூனுவீடு தள்ளி ஒரு வீட்டின் முன் பெயர் சொல்லி கூப்பிட..

கதவை திறந்தவள் இவனை பார்த்து பின்வாங்கியவுடன்.. உங்க அண்ணன் இலங்கையிலிருந்து கொடுத்துவுட்றுக்காறு.. இவ்வளவு தூரத்தில இருந்து வந்தும் இன்னைக்கு செல்விய பார்க்க முடியாது போல.. விரக்தியோடு பக்கத்திலிருந்த மாதா கோவிலுக்குள் நுழைந்தான்..

ராயப்பு கோவிலுக்குள் நுழைவதை பீடத்திலிருந்து பார்த்த மோட்ச அலங்காரி மாதா.. இவனா.. கட்டிக்க போறவள கண்ணுல காமிங்க அம்மான்னுல வேண்டுவான்.. ஒரு அம்மாட்ட என்ன கேட்கனும்னு கூட தெரியாதவன்ல இவன்..

எம்மா .. என் பொண்டிட்டிய கண்ல காமிங்க.. ராயப்பு சாஷ்டாங்கமாக கோவில் தரையில் குப்புறபடுத்தான்.

தேவமாதா தலையிலடித்து கொண்டார்கள்...

கோவிலை விட்டு வெளியே வந்த ராயப்பு நடந்து வரும்போது, அவனிடம் பொருள் வாங்கியவள் அவள் வீட்டு வாசலில் நின்றிருந்த செல்வியிடம் தன் கையிலிருந்த கிராம்பையும் ஏலக்காயையும் காட்டி இதுலாம் இவுங்கதான் கொண்டு வந்து தந்தாங்கன்னு ராயப்பை பார்த்து வெட்கத்தோடு சொன்னாள்.

ராயப்பு வேண்டுமென்றே செல்வியை பார்க்காதாவாறு தலையை குனிந்து கொஞ்ச தூரம் நடக்க..

ஊருக்கு ஊரு ஆள் இருக்கும் போது நான் எதற்கு.. பின்னாலிருந்து செல்வி அவனை சீண்டியபடி நடந்து வர... விருட்டென்று செல்வியின் வீட்டுக்குள் நுழைந்தான் ராயப்பு ..

எப்படி இவ்வளவு தைரியமா எங்க வீட்டுக்குள்ள நுழையுறிய..

உங்க அப்பா கேட்டா நான் உங்க மருமகன்னு சொல்லுவேன்..

ம்ம் .. கொழுப்புத்தான் ..

அவன் அருகில் வந்து அவன் கையில்

தன் தலையை சாய்த்தவாறு நின்றாள் செல்வி..

திருவிழா முடிஞ்சு அடுத்த வாரம் நமக்கு கல்யாணம். அம்மா சொல்லிட்டாங்க...

சரி .. நான் கெளம்புறேன்..

அவன் கைகளை இறுக்கி பிடித்தவாறு.. இன்னும் கொஞ்ச நேரம் சினிங்கினாள்..

மூக்கையூருக்கு புறப்பட கட்டுமரத்தில் ஏறியவன் பக்கத்தில் தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த வள்ளத்த கயிறு கட்டி கூட்டமா நெறைய பேரு மாதாவே.. மரியேன்னு சொல்லி கரைய இழுக்குறத பார்த்து அவுங்க பக்கத்துல போய்..

நான் மாதாவுக்கான அம்பா பாடல் பாடவா என்றான் ராயப்பு..

சரி... பாடு என்றார்கள் சந்தோஷமாக..

ஏலோ .. இலா

ஈலோட்டி வாங்கு

அட ... வாங்குட தோழா ..

வந்தா தருவேன்..

தேங்காயும் மிளகும்..

தெரிவட்ட பாக்கும்..

அட ..பரிவட்டம் பார்க்க..

மஞ்சே நெஞ்சே ..

அட.. மஞ்சே நெஞ்சே

மணமுள்ள செண்பகம் ..

மணமுள்ள சென்பகம்..

சென்பக வடிவே ..

சென்பக வடிவே ..

திருமுடிக்கழகே..

வருகுது திருநாள்..

வருகுது திருநாள்..

தேரோட்டம் பார்க்க..

தேரோட்டம் பார்க்க..

தேரான தேரில் நாச்சியா தேரில்

நாம் என்னும் தேரில்

ஒடியே வருவாள் ...

ஒடியே வருவாள் ஒரு முத்தம் தருவாள்

தந்திடு தாயே ..

தந்திடு தாயே..

ஒவல்ல ஒவே ..ஏலல்ல ஏலோ ...

(ராகத்தோடு படிக்கவும்)

ஏய் .. நல்லா அம்பா போடுறானே இவன் எந்த ஊர்க்கார பையன்..?

நான் மூக்கூர்காரன் ....

.......... தொடரும் .....

- சாம்ஸன் பர்னாந்து 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com