வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Sunday 24 October 2021

பரவனாறு


உலகத்தின் ஒரே பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian)


தமிழ்நாட்டில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் இருந்து அழிக்கப்பட்ட அந்த ஜீவநதியின் இருண்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா?

ஆம், பழைய தென்னாற்காடு மாவட்டத்தில்தான் இந்த ஆறு பாய்ந்தது.  வருடம் முழுதும் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக ஓடி கடலில் கலந்தது. சேமக்கோட்டை காட்டில் உற்பத்தியாகி பழைய நெய்வேலி கிராமம் தற்போதைய என்எல்சி சுரங்கம், கத்தாழை, கரிவெட்டி, இளவரசம்பட்டு, கரைமேடு, எல்லைக்குடி வழியாக பெருமாள் ஏரியில் அடைந்து பின் 26 கிமீ பயணித்து பூண்டியாங்குப்பம் வழியாக கடலூர் துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது.

பரவனாறு உண்மையில் பூமியின் ஆழத்திலிருந்து உற்பத்தி ஆகிறது என்பதே இதன் சிறப்பு. இந்த ஆற்றுக்கான நீர ஆதாரம் ஆர்ட்டீசியன் பொங்குநீர் ஊற்றுகளே. இரண்டாம் பராந்தக சோழன் பரவனாற்றை சீரமைத்து இதன் கரைகளில் நிறைய ஏரிகளை அமைத்ததுடன் அதன் உச்சமாக 16 கிமீ நீளமுள்ள பெருமாள் ஏரியை வெட்டினான். வெள்ளையர் காலத்தில் இந்த ஏரியின் குறுக்கே மக்கள் பயணிக்க பாலங்கள் அமைத்ததுடன் பெருமாள் ஏரி வாலாஜா ஏரிகளை சீரமைத்து மேம்படுத்தினர்.

இந்த பரவனாறு எந்த காலத்திலும் வற்றாத ஜீவ நதி 850 சதுர கிமீ பரப்பிலான நிலங்களின் நீராதாரமாக ஒரு காலத்தில் விளங்கியது. இந்த பரவனாறு வளமான செம்மண்ணில் உற்பத்தியாகி சுக்காங்கல் பாறை களிமண் வண்டல்மண் வெள்ளைப்பாறை களர்மண் மணல்பாறை இளுவைமண் என் பல்வேறான மண்வளத்தில் பாய்ந்தோடும் சிறப்பு கொண்டது. இந்த ஆற்றில் உலகத்தில் வேறெங்கும் காணப்படாத அறியவகை நீர்ப்பூனைகளும் அறியவகை நீர் விலங்குகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மீன் இனங்கள் வாழ்ந்தன.

மழைகாலத்தில் தென்னாற்காடு மாவட்டமே பரவனாற்றால் நீர் கொப்பளித்து பொங்கி ஓடும். இவையெல்லாம் என்எல்சி என்னும் நாசக்கார சுரங்கம் வரும் வரைக்கும்தான். நிலக்கரி ஆலை மற்றும் சுரங்கத்திலிருந்து வெளிப்படும் பாதரசக்கழிவுகளால் அறியவகை நீர்விலங்குகள் அழிந்தன. 

தென்னாற்காடு மாவட்டத்தின் நன்னீர் கடலாக விளங்கிய பரவனாற்றை என்எல்சி அழித்து நாசப்படுத்திவிட்டது. தலை இழந்த முண்டமாக தன் உயிர்குடித்த என்எல்சியால் இரத்தபேதியாகிக்கொண்டிருக்கிறது பரவனாறு. 

என்எல்சி இன்னும் சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும். ஆனால் தொலைந்த ஆறு கிடைக்குமா? இழந்த நீர் வளமை திரும்ப வருமா?

4000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பரவனாறு என்எல்சியால் 40 வருடத்தில் சூரையாடப்பட்டது. 

சிறு வயதில் அந்த ஆர்ட்டீசியன் ஊற்றுகளில் குளித்திருக்கிறேன். குளிர் காலத்தில் இந்த ஆர்ட்டீசியன் ஊற்றில் மிதமான சூட்டில் வென்னீர் வரும் அது ஒரு சுகமான அனுபவம். நான் படித்த காலத்தில் 1980 காலத்தில் நெய்வேலி ஆர்ட்டீசியன் ஊற்று குறித்த பாடங்கள் இருந்தது. 

தமிழ்நாட்டின் பள்ளி வரலாறு புவியியல் பாடபுத்தகங்களில் இருந்தும் பரவனாறு குறித்த பாடங்கள் அழிக்கப்பட்டதுதான் சோகத்திலும் சோகம். 

என் தகப்பன் காலத்தில் எம் முன்னோர்களின் அறியாமையாலும் விழிப்புணர்வற்ற தன்மையாலும் அழிக்கப்பட்ட பரவனாற்றின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டுசெல்வோம்.

கண்ணில் வழியும் கண்ணீருடன் அந்த ஆர்ட்டீசியன் ஊற்றில் குளித்த சாட்சி!

- சித்தர் திருத்தணிகாசலம்

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com