வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 15 October 2021

அலைகளின் மைந்தர்கள் - 28

கி.பி. 1529 லிருந்து 1736 வரை மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 62 பாளையங்களாக பிரிக்கப்பட்டது.. ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.. இத்தகைய பாளையங்களில் ஒன்றுதான் பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டான் செவல் பாளையம்.. (தற்போதைய நெல்லை மாவட்டம்)

ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்காமல் அவர்களை எதிர்த்து இங்கிருந்துதான் இந்திய சுதந்திரத்துக்கான முதல் குரல் ஒலித்தது... இந்தியாவின் முதல் விடுதலை போர் என்று அழைக்கப்படும் சிப்பாய் கலகத்திற்கு (1856) முன்பாகவே இவர் அறியப்பட்டு பின் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் கி.பி 1761 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்..

முத்துக்குளித்துறையின் தலைநகர் தூத்துக்குடியை ஆங்கிலேயர்களும், டச்சுகாரர்களும் மாறி மாறி ஆண்டு வந்தாலும் 1795 ஆம் ஆண்டு தூத்துக்குடி முற்றிலுமாக ஆங்கிலேயர் வசம் வந்தது.. பாண்டியாபதி என்று அழைக்கப்பட்ட பரதவ அரசர் தொன் கப்ரியேல் தெக்குரூஸ் என்பவருக்கு மட்டுமேயான முத்து படுகைளில் முத்து சிலாபம் சிறப்பாக நடைபெற்றாலும் இவருக்கான மானியம் ஆங்கிலேயர்களால் வெகுவாக குறைக்கப்பட்டது....

மீண்டும் மற்றொரு பாளையமான கட்டபொம்மன் தலைமையிலான பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து.. வெள்ளையர்களுக்கு இனி நாங்கள் கப்பம் கட்ட மாட்டோம் என்ற இந்திய விடுதலைக்கான குரல் ஒங்கி ஒலிக்க தொடங்கியது. காடல்குடியில் நடந்த வெள்ளையர் எதிர்ப்பு கூட்டத்தில் பாஞ்சாலகுறிச்சியின் கட்பொம்மன், திருநெல்வேலி, இராமநாதபுரம் சிற்றறசர்கள் மற்றும் மருது சகோதரர்களுடன் தூத்துக்குடியிலிருந்து பாண்டியாபதியும் கலந்து கொண்டார்..

வெள்ளையர்களை நாட்டைவிட்டு விரட்டுவதில் கட்டபொம்மனுக்கும், பாண்டியாபதிக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால்.. வெடிமருந்தும், ஆயுதங்களும் நாங்கள் தருவித்து உங்களுக்கு தருகிறோம் விடுதலைக்கான போரை ஆயுத போராட்டமாக மாற்றுங்கள் என்ற பாண்டியாபதியின் ஆலோசனையை ஏற்று கொண்டார் கட்டபொம்மன். பாண்டியாபதியின் தலைமையில் புரட்சியணி உருவாகியது..

தூத்துக்குடியில் ஆங்கிலேயர்களின் கடல் கண்காணிப்பு அதிகமாக இருந்தபடியால் பாண்டியாபதியின் உத்தரவை அடுத்து வேம்பார் அடப்பனார் அங்கு வசித்த டச்சு ஏஜென்ட் ஐசக் மூலம் இலங்கை மன்னாரிலிருந்து கடல் வழியாக வள்ளத்தில் கொண்டுவந்த வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் வேம்பார் கடற்கரையில் நின்றபடி அவருடைய நேரடி கண்காணிப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட புரட்சியணியை சேர்ந்த மூக்கையூர், வேம்பாரை சேர்ந்த ஏழெட்டு இளைஞர்கள் கரையில் கவனமாக பொருட்களை இறக்கி வைத்தார்கள்..

இருபத்தைந்து வயதுடைய திடகாத்திரமான இளைஞன் ஒருவன் தன் முகத்தை துணியால் மறைத்தபடி தாங்கள் மூக்கையூரிலிருந்து கொண்டுவந்த கோவேறு கழுதையிலும், வேம்பாரில் உள்ள மாட்டு வண்டியிலும் ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் ஏற்றினான். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆங்கிலேயர்களிள் கண்காணிப்பை மீறி பாஞ்சாலங்குறிச்சிக்கு வெடிபொருட்களை கொண்டு செல்வது சிரமம் என்பதால் வேம்பாருக்கு பக்கத்து பாளையமான மேல்மாந்தை ஜமீனில் ஒப்படைத்துவிடுங்கள். அவர்கள் எளிதாக பாஞ்சாலகுறிச்சிக்கு கொண்டு செல்வார்கள் என்ற தகவலை பாண்டியாபதி ஏற்கனவே வேம்பார் அடப்பனாருக்கு சொல்லி அனுப்பியிருந்தார் ..

மேல்மாந்தைக்கு போறதுக்கு முன்னாடி பரிசுத்த ஆவி கோவிலுக்கு போய் வேண்டிட்டு போங்கப்பா.. என்ற வேம்பார் அடப்பனாரின் சொல்லுக்கு பணிந்து கோவிலுக்கு சென்றார்கள்.. (ஏற்கனவே டச்சு படையால் சிதிலமாக்கப்பட்ட Basilica... பெரிய கோவில் என்று அழைக்கப்பட்ட பரிசுத்த ஆவி ஆலயம் கி.பி.1730 இல் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகியது.. பின் 1743 ல் வேம்பாருக்கு இறைபணியாற்ற வந்த வீரமாமுனிவர் அங்கு சிறு ஆலயத்தை எழுப்பியிருந்தார். அந்த ஆலயத்தில் தான் தற்போதுவரை (1798) திருப்பலி நடைபெறுகிறது..)

புரட்சியணியை பார்ப்பதற்காக கோவில் வாசல் அருகே ஆண்களும், பெண்களுமாய் பத்து பதினைந்து பேர் நின்றிருந்தார்கள்.. 

மாமா.. முகத்த துணியால மூடிட்டு கோவிலுக்குள்ள போறாருல.. அவரு யாரு.. தன் அருகில் நின்ற வேம்பார் அடப்பனாரிடம் கேட்டாள் ராஜகன்னி..

அவன்தான் இந்த அணியை வழிநடத்துபவன். மூக்கையூர்காரன்......... 

நம்ம ஆட்களா..?

ஆம்.. பெரிய குடும்பத்தை சேர்ந்தவன்... அவனுடைய பெயர் பாண்டியன்.. கோவிலிலிருந்து திரும்பி வந்த பாண்டியன் நேராக வேம்பார் அடப்பனாரிடம் சென்று அவர் கைகளை பிடித்து கொண்டு ஐயா நாங்கள் வருகிறோம் என்றவனின் பார்வை அவர் அருகில் நின்றவளை நோக்கியது...

ராஜகன்னி தன்னையறியாமலே அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தோஸ்த்திரம் என்றாள்.. 

பாண்டியன் சிரித்தபடியே தலையாட்டினான். 

கோவிலை கடந்து சிறிது தூரம் சென்றபின் பின்னாலிருந்து என்னங்க.. கொஞ்சம் நில்லுங்க...  

துள்ளளோடு ஓடிவந்து பாண்டியன் அருகில் நின்றவள்..

உங்க முகத்த மூடி கட்டியிருக்கிற துணிய அவுத்துட்டு எனக்கு மட்டும் உங்க முகத்த காமிங்களேன்.. கெஞ்சலாக கேட்டாள் ராஜகன்னி.

சற்று தயங்கி பின் சிரித்தபடியே தான் முகத்தை மறைத்து கட்டியிருந்த துணியை அவிழ்த்தான் பாண்டியன்.. 

ம்ம் .. நல்லாத்தான் இருக்கீங்க... போய்ட்டு பத்திரமா திரும்பி வாங்க .. 

சிறிது தூரம் பாண்டியன் நடந்து சென்று திரும்பி பார்க்கையில் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள் ராஜகன்னி ...

......... தொடரும் ....
- சாம்ஸன் பர்னாந்து
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com