வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 13 October 2021

அலைகளின் மைந்தர்கள் - 27
அதிகாலையிலேயே நாலைந்து கட்டுமரமும், ரெண்டு சின்ன வள்ளமும்வைப்பாறிலிருந்து மூக்கையூர் திருவிழாவிற்க்கு கெளம்பி போக தொடங்கிட்டு.. இப்பவே நடக்க தொடங்குனாதான் பொழுதடையுறதுக்கு முன்னால ஊர் போய் சேர்ந்து சப்பரத்த பார்க்க முடியும்னு ஒரு பத்து பதினஞ்சு பேர் பொடிநடையா மூக்கூர நோக்கி நடக்க தொடங்குனாங்க...

குடும்பமே ரொம்ப நேரம் கெஞ்சி கூப்பிட்டும் அடுத்த வாரம் புதுவலையை கடல்ல தாக்கனும்.. எனக்கு வலை முடிக்கிற வேலை நெறய இருக்கு... நான் திருவிழாவுக்கு வரலைன்னு மறுத்துட்டான் செல்வி அண்ணன்.. முன்னால கிளம்பி போன கட்டுமர கருப்புலாம் கடல்ல மறஞ்ச பிறகுதான் செல்வி வள்ளம் கெளம்புச்சு..

தன் மகள் கண்களில் தெரிந்த தவிப்பை பார்த்து.. நல்லா வெளங்க ஒடி.. பாயை சுத்திவிட்டம்னா கரைக்கு சீக்கிரம் போயிரலாம்னு சொன்ன தன் அப்பாவை பார்த்து.. கண்கள் அகல சரிப்பா என்றாள் செல்வி..

இந்நேரம் வைப்பாறு வள்ளங்கள் மூக்கையூர்ல கரை புடிச்சுறுக்கும்.. மச்சான் எப்படியும் கடற்கரைல நின்று என்னை கானோம்னு தேடுவாங்க.. உடம்பெல்லாம் சிலிர்த்து இன்னும் கொஞ்ச நேரத்தில கரைக்கு வந்துருவேன் அங்கேயே நில்லுங்கன்னு செல்வி தன் மனதுக்குள் கற்பனையை ஓட விட்டு கொண்டிருக்கும் போது.. லேசான குளிர்ந்த காற்று அடிக்க தொடங்கியது..

மாதாவே.. என்ன மேகம் திடீர்னு இப்படி கருத்துட்டு வருதுன்னு வானத்தை அன்னாந்து பார்க்கும்போது .. பெரும் துளி விழ தொடங்கியது.. கருக்களோட கடுங்காத்து வருதுன்னு செல்வி அப்பா சொல்லி கொண்டிருக்கும்போதே.... நாலு பக்கமும் சுத்திக்கிட்டு வர்ற சுழி காத்த பார்த்து ஒடிபோய் வள்ளத்து பிந்தலையில கட்டியிருந்த தாமான் கயிற அவுக்கு முன்னாடி சுழி காத்துல வள்ளத்து பாய் சப்பைல அடிச்சு வள்ளம் உடனே கடலுக்குள்ள குப்புற கவுந்துட்டு..

அரைநீத்துல மெதந்த வள்ளத்த புடுச்சுறுந்த செல்வி தன் அப்பாவை காணாது அப்பா.. அப்பா.. என்று கத்த.. இந்த மழை முடிஞ்சவுடனே அப்பாவ பார்த்துரலாம்.. நீ வள்ளத்த நல்லா புடிச்சுக்கன்னு சொன்னாள் செல்வியின் அம்மா தன் மகளின் தோளை இறுக்கி பிடித்தவாறு..

ஒருமணி நேரமாகியும் மழை நின்றாலும் மார்சாவின் வேகம் குறையாமல் அப்படியே இருந்தது.. தன் உடல் விறைப்பதை அறிந்து தன் உடம்மை செல்வி தன்னையறியாமல் வேகமாக சிலிர்க்க... சோர்ந்துபோய் அவள் முதுகை பிடித்திருந்த அவள் தாயின் கரம் வழுக்கி நீவாட்டால் இழுத்து செல்லப்பட்டு நீருக்குள் மூழ்கிபோனாள்..

அம்மா.. அம்மா.. செல்வியால் கத்தக்கூட முடியவில்லை..

நான் என் மச்சானோடு வாழனும்... நான் அவரோடு வாழனும் தன்னையறியாமல் பிதற்றி கொண்டிருந்த செல்வியின் முகத்தில் ஒங்கி அடித்த மார்சாவால் வள்ளத்த பிடிச்சுறுந்த அவளது மரத்து போன கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அவளையறியாமலே நழுவி கொண்டு போனது...

மூக்கையூரில் திருவிழா திருப்பலிக்கான முதல் ஆலயமணி அடிக்க தொடங்கியபோது... கடலுக்குள் மூழ்கி கிடந்த செல்விக்கு கேட்கல... மழையோடு நீந்தி மூக்கையூரில் கரை சேர்ந்த செல்வியின் அப்பாவால்.. திருவிழாவுக்கு வந்த வைப்பாறு வள்ளம் கடல்ல தாந்துட்டுன்னு செய்தி மூக்கையூரில் பரவ.. திருவிழா திருப்பலி பார்த்து கொண்டிருந்த ராயப்பு பதறி அடித்து கொண்டு கடற்கரைக்கு ஓடினான்.

ராயப்பை பார்த்த செல்வியின் அப்பா ஒடிவந்து அவனை கட்டிபிடித்தவாறு.. என் மகளையும் பொண்டாட்டியவும் இழந்துட்டனப்பா.. கதறி கதறி அழுதார்...

செல்வியா..? அப்படியே மணலில் சரிந்தான் ராயப்பு...

காலையில் செல்வியின் உடலும், அவள் அம்மாவின் உடலும் மூக்கையூர் கடற்கரையில் அருகருகே ஒதுங்கி கிடந்தது..

நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்பாக சூசை புதைக்கப்பட்டு இன்று எந்த எச்சங்களும் இல்லாமல் போய் கட்டாந்தரையாகி போன இடத்தில் குழிதோண்டி திருவிழாவுக்கு வந்த வைப்பாறு பெரியவர்கள் முன்னிலையில் கல்லறையில் வைத்து பாதிரியாரால் மந்திரிக்கப்பட்டு செல்வியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது...

வீட்டில் குப்புற படுத்து நாள் முழுவதும் அழுது கொண்டிருந்த தன் மகன் தலையை தன் மடியில் கிடத்தி ஆறுதல் சொல்லிய ராயப்பின் தாய்.. இரவில் அப்படியே தூங்கி போய்.. திடிரென கண் விழித்து பார்த்த போது வீட்டில் ராயப்பை கானாது பதறிபோய் தன் மூத்த மகன் தோமாஸை எழுப்பி விஷயத்தை சொல்ல தாயும் மகனும் அழுதுகொண்டே கடற்கரைக்கு ஒடினார்கள்..

கரையில் ஏத்தி வச்சிறுந்த ராயப்பு கட்டுமரத்த கானோம்.. அந்த இரவிலும் தோமாஸ் தன் தம்பியை கடற்கரையில் அங்குட்டும் இங்குட்டுமாக தேடி வெகுதூரம் ஒடினான்.. அந்த நடுநிசி இரவிலும் மூக்கையூருக்கு எதிரே உள்ள உப்புதண்ணி தீவை சரியாக அடைந்து கீழே இறங்கி இரண்டு பெரிய பாறாங்கல்லை கட்டுமரத்தில் தூக்கிபோட்டு தானும் மரத்தில் ஏறி அமர்ந்து கட்டுமரத்த வலிய விட்டான் ராயப்பு..

கச்சான் காத்து காலம்னால கட்டுமரம் மூக்கையூரை நோக்கி மெதுவா வலிஞ்சு வர தொடங்கியது.. செல்வி இல்லாம தன்னால் இனி வாழவே முடியாது.. தன் உயிரை மாச்சுக்கிறனும்னு ஏற்கனவே திட்டமிட்டு கொண்டுவந்த கயிறை ஒவ்வொரு பாறாங்கல்லோடும் தன் கால்களையும் சேர்த்து இறுக்கி கட்டி...

உப்புதண்ணி தீவுக்கும் மூக்கையூருக்கும் நடுவுல கட்டுமரம் வலிஞ்சு வந்துகிட்டு இருக்கும் போது மரத்திலிருந்து இரண்டு கற்களையும் கடலில் தள்ளிவிட்டு கற்களோடு கற்களாக ராயப்பும் கடலில் மூழ்கி போனான்.

அடுத்த நாள் காலைல சந்தியாகப்பர் கோவிலுக்கு மேற்க்கே செல்விய அடக்கம் பன்ன கல்லறைக்கு நேர ராயப்பு கட்டுமரம் கரையில குறுக்க அடஞ்சு கெடந்துச்சு... எத்தனையோ இறப்புகளை தந்த கடல் இந்த மரணத்தையும் இயல்பாய் ஏற்றுக்கொண்டு.... வெளங்க இருந்து உரத்த சப்தத்துடன் மீண்டுமாய் அலைகள் கரையை நோக்கி வர தொடங்கியது..

....... தொடரும் ......
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com