வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday, 11 June 2024

டச்சு கிழக்கிந்திய கம்பெனியை அகற்றிய பரதவர்



டச்சு கிழக்கிந்திய கம்பெனியை பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றிய திருநெல்வேலி பரதவர்...!
 
மதுரையை ஆட்சிபுரிந்த விஜயநகர பிரதிநிதிகளில் கடைசியானவர் திருமலை நாயக்கர் (1623-59) என்பவர் ஆகும். இவர் பெயரளவில் மட்டுமே விஜயநகரத்துக்கு கட்டுப்பட்டவராக இருந்தார். தன்னரசு பெறும் நோக்கில்தான் இவருடைய அரசியல் நகர்வுகள் அனைத்தும் இருந்தன. திருமலை நாயக்கர் கி.பி. 1640 க்கு மேல் திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளியில் தனக்கு கீழ் ஆளுநர்களை நியமிக்க தொடங்குகிறார். திருநெல்வேலியின் முதல் ஆளுநராக நியமனம் பெற்றிருந்தவர் சிவனாண்டியப்ப பிள்ளை என்பவர் ஆகும். இவர் பாளையங்கோட்டையில் வாழ்ந்து வந்தார்.

திருமலை நாயக்கர் புதிய கடலாதிக்க சக்தியாக உருவெடுத்து கொண்டிருந்த டச்சுக்காரர்களுடன் கூட்டணி வைக்க வேண்டி கி.பி. 1644ல் தனது தூதுவரை அவர்களிடத்தில் அனுப்பி.... "தனது ஆளுகையின் கீழ் இருக்கும் காயல்பட்டினத்தில் குடியேறி தொழிற்சாலை, குடியிருப்புகள் எல்லாம் அமைத்து தனது பாதுகாப்பு பெற்று அங்கு தங்கியிருந்து தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்".
 
(குறிப்பு: திருநெல்வேலியில் பரதவ கிராமங்கள் திருமலை நாயக்கரின் அதிகாரத்திற்கு வெளியில் இருந்தபடியால் டச்சுக்காரர்களை முகமதியர் வாழ்ந்த காயல்பட்டினத்தில் குடியேறும்படி கேட்டு கொண்டார். காயல் பட்டினம் திருமலை நாயக்கரின் நேரடி ஆளுகையின் கீழ் இருந்தது. இங்கு நாராயண முதலியார் என்பவர் திருமலை நாயக்கரின் அதிகாரியாக இருந்தார்.)
 
டச்சுக்காரர்களும் திருமலை நாயக்கரின் அழைப்பை ஏற்று காயல்பட்டினத்தில் தொழிற்சாலை, குடியிருப்புகள் எல்லாம் அமைத்து பிறகு அத்திருமலை நாயக்கரின் பாதுகாப்பு பெற்றே அங்கு தங்கியிருந்து பாண்டிய நாட்டில் வணிகம் செய்து வந்தனர்.
 
டச்சுக்காரர்கள் தென்கடலில் ஆதிக்கம் பெற்று விட்டால் அது தங்களது வணிகத்திற்கு ஆபத்தென்று உணர்ந்த பரதகுல தலைவர்கள் கி.பி. 1646ல் சிவனாண்டியப்ப பிள்ளையை பார்க்க பாளையங்கோட்டைக்கு சென்றனர். அங்கு அவரை சந்தித்த பரதகுல தலைவர்கள் அவரிடம்...

"டச்சுக்காரர்களை நீங்கள் காயல்பட்டினத்தில் இருந்து வெளியேற்றினால் 9,000 கில்டர் பணம் உங்களுக்கு நாங்கள் தருகிறோமென்று கூறினர். ஆனால் சிவனாண்டியப்ப பிள்ளையோ அதனை ஏற்க மறுத்து விடுகிறார்".
(குறிப்பு: 1 கில்டர் = 10.16 கிராம் வெள்ளி காசு;)

இதன்பிறகு பரதகுல தலைவர்கள் திருமலை நாயக்கரை அவரது அரசவையில் பார்த்து பேச மதுரை சென்றனர். அங்கு அவரை சந்தித்த பரதகுல தலைவர்கள் அவரிடம்....

"டச்சுக்காரர்கள் உங்களுக்கு வாக்களித்திருந்தபடி போர் யானைகள் உட்பட இதுவரை எவ்வித அன்பளிப்புகளையும் உங்களிடத்தில் கொண்டுவரவில்லை, ஆதலால் உங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத டச்சுக்காரர்களை காயல்பட்டினத்தில் இருந்து வெளியேற்றினால் உங்களுக்கு நாங்கள் 15,000 கில்டர் பணம் தருகிறோமென்று கூறினர். ஆனால் திருமலை நாயக்கரோ அதனை ஏற்க மறுத்து விடுகிறார்.

பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியாக தீர்வுகாண விரும்பிய பரதகுல தலைவர்களோ முடிவில் ஆயுத போருக்கு தள்ளப்பட்டனர். திருமலை நாயக்கரின் பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த டச்சுக்காரர்களை முற்றாக அழித்தொழிக்க பரதகுல தலைவர்கள் முடிவு செய்தனர்.
 
அடுத்த வருடம் கி.பி. 1647ல் திருநெல்வேலி ஆளுநராக பாளையங்கோட்டையில் ஆட்சிக்கு வந்த தேவ சத்திர அய்யர் என்னும் பிராமணர், பரதகுல தலைவர்களிடம் இருந்து 9,000 கில்டர் பணம் லஞ்சமாக பெற்றுக்கொண்டு காயல்பட்டினத்தில் திருமலை நாயக்கர் பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த டச்சுக்காரர்களை போட்டு தள்ளவும், அவர்கள் தொழிற்சாலை, குடியிருப்புகளை சூறையாடி அழிக்கவும் அனுமதி வழங்கினார்.

இதன்படி கி.பி. 1648 ஜூன் மாதம் தொடக்கத்தில் பரதகுல தலைவர்கள் டச்சுக்காரர்களுக்கெதிராக தங்களது படைகளை போருக்கு அணிவகுத்து காயல்பட்டினத்தை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். இதே சமயத்தில் கேரளாவிலிருந்து வந்து கொண்டிருந்த டச்சுக்காரர்களின் கப்பல் ஒன்று தண்ணீர் நிரப்புவதற்கு காயல் பட்டினத்தில் நங்கூரமிட்டனர்.

பரதகுல தலைவர்கள் தங்களுக்கு எதிராக பெரும்படையுடன் வந்து கொண்டிருப்பதை அறிந்த டச்சுக்காரர்கள் அலறியடித்து தண்ணீர் நிறப்பி கொண்டிருந்த கப்பலில் ஏற தொடங்கினர். காயல் பட்டினத்தை நெருங்கிய பரதவர்கள் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் தொழிற்சாலை, குடியிருப்புகள் அனைத்தையும் சூறையாடி அழித்தனர்.
 
அதற்குள் டச்சுக்காரர்கள் கப்பலில் பத்திரமாக ஏறிவிட்டனர். கப்பல் பயணப்பட தொடங்கி இலங்கையின் காலி நகரின் துறைமுகத்தை வந்தடைந்தது. டச்சுக்காரர்கள் அதிஷ்டவசமாக பரதவரின் வாளுக்கு தப்பி பிழைத்தனர். டச்சுகாரர்களுக்கு பரதவர்களால் மொத்தம் 30,011 கில்டர் பணம் நஷ்டம் ஏற்பட்டது.

தனது பாதுகாப்பு பெற்று தங்கியிருந்த டச்சுக்காரர்கள் மீது ஆயுதமேந்தி போரிட்டு அவர்களை விரட்டியடித்த பரதவர்களை தண்டிக்க முடியாத திருமலை நாயக்கர் அதற்கு பதிலாக அப்பரதவர்களுக்கு உதவிய தேவ சத்திர அய்யரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு "வடமலையப்ப பிள்ளை" என்பவரை புதிய ஆளுநராக நியமிக்கிறார்.

________________________________________________

ஆதாரம்:-

* Marcus P. M. Vink,Encounters on the Opposite Coast: The Dutch East India Company and the Nayaka State of Madurai in the Seventeenth Century Page 332-34.

* REPORT TO THE
GOVERNMENT OF MADRAS ON THE
INDIAN PEARL FISHERIES IN THE
GULF OF MANNAR
BY JAMES HORNELL, F. L.S.,
Maraine Biologist to the Government of Ceylon and Inspector of Pearl Banks. Pg 5








- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com