வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Tuesday, 25 June 2024

வடவடுகரை வீழ்த்த உதவிய பரதவர்



கிமு மூன்றாம் நூற்றாண்டில் வடவடுகரை வீழ்த்த சோழருக்கு படையுதவி செய்த பரதவர்கள்:

பிந்துசாரர் என்பவர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். கி.மு. 297 முதல் கி.மு 273 வரையிலான கி.மு மூன்றாம் நூற்றாண்டுக் காலத்தில் இவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனும் மாமன்னர் அசோகரின் தந்தையுமாவார். பிந்துசாரரின் ஆட்சியானது தெற்கே தமிழகத்தின் வட எல்லை வரை இருந்தது.

தமிழக அரசுகளை கைப்பற்ற விரும்பிய பிந்துசாரர் தனது சாம்ராஜ்ஜியத்தில் மேற்கு தக்காணத்தில் வாழந்த கோசர்களை தமிழகத்திற்குள் அனுப்பி வைக்கிறார். இந்த கோசர்கள் முதலில் தமிழகத்தின் வடமேற்கு எல்லை வழியாக நுழைந்து துளுவ நாட்டை அடைந்தனர்; அந்நாட்டரசனான நன்னன் என்பவனைக் காட்டிற்கு விரட்டினர்; அவனது பட்டத்து யானையைக் கொன்றனர், அவனது காவல் மிகுந்த பாழி நகரை வென்று துளு நாட்டை கைப்பற்றினர்.
(குறிப்பு: கோசர் என்ற இனக்குழு கோவாவிற்கு அருகிலுள்ள கோலாப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆகலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.)

நன்னனை வென்ற கோசர்கள், சேரன் தானைத் தலைவனும் முதிரமலைத் தலைவனுமான பிட்டங் கொற்றன் என்பவனைத் தாக்கினர். இதன்பிறகு கோசர்கள் சோழ நாட்டை அடைந்து அழுந்துரர் வேளான திதியனைத் தாக்கினர்; திதியனோ கடும்போர் புரிந்து பகைவரைப் புறங்காட்டச் செய்தான். பின்னர் அக்கோசர்கள் மோகூரைத் தாக்கினர். மோகூர் பணியமறுத்தது.

(குறிப்பு: இம்மோகூர் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் ஆத்தூர்க் கணவாய்க்கு அண்மையில் உள்ள மோகூராக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.)

அப்பொழுது மோகூர் பணியாததை குறித்து கேள்வியுற்ற வம்பவடுகரான வம்பமௌரியர்கள் பெரும்படையுடன் வந்து துளு நாட்டில் அமைந்துள்ள பாழி கோட்டையில் தங்கியிருந்து தமிழகத்தின் மீது படையெடுக்க தயாராகின்றனர். பின்பு அங்கிருந்து வம்பவடுகர், வடவடுகர் என்றெல்லாம் அறியப்பட்ட வம்பமௌரியர்கள் திருவேங்கடத்திற்கு வடக்கில் வாழ்ந்த ஆந்திர வடுகர் துணையுடன் தமிழகத்திற்குள் நுழைந்து மேற்கூறிய மோகூரை தாக்கினர்.

தமிழகத்திற்கு வந்திருந்த பேராபத்துகளை உணர்ந்த பரதவர்கள் வம்பவடுகரான வம்பமௌரியர்களை விரட்டியடிக்க சோழன் இளஞ்சேட்சென்னிக்கு ஆதரவாக களமிறங்கினர். சோழன் இளஞ்சேட்சென்னி தன்பக்கம் அணி சேர்ந்த தென்பரதவரை கொண்டு தென் ஆர்க்காட்டுக் கோட்டம் வரை வந்திருந்த வடவடுகரான வம்பமௌரியர்களுக்கு எதிராக பல போர்கள் புரிந்து அவர்களை தோல்வியுற செய்தார் .

இதன்பிறகு வம்பவடுகரான வம்பமௌரியர்கள் துளு நாட்டில் அமைந்துள்ள காவல் மிகுந்த பாழி நகர் கோட்டைக்கு பின்வாங்கினர். சோழன் இளஞ்சேட்சென்னி தென்பரதவர் துணையுடன் பாழி நகர் வரை பகைவரைத் தொடர்ந்து சென்று, வம்பவடுகர் தங்கி இருந்த பாழியை எறிந்து, வம்பவடுகரான வம்பமௌரியர்கள் தலைகளை அறுத்து அழித்தான்.

காவல் மிகுந்த ‘பாழி’யை வென்ற காரணத்தினால் இச்சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி எனப்பட்டான். சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தென்பரதவரை கொண்டு வடவடுகரான வம்பமௌரியர்களை வென்றதை பற்றி புறநானூறு பாடல் 378, இவ்வாறு பதிவு செய்கிறது...

"தென்பரதவர் மிடல் சாய, வடவடுகர் வாள் ஓட்டிய"

இது ஊன்பொதி பசுங்குடையார், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை பாடியது.

००००००००००००००००००००००००००००००००००००००

சிலர் அப்பாடலில் வரும் "தென்பரதவர் மிடல் சாய" என்பதை சோழன் தென் பரதவரின் வலிமையை சாய்த்தார் என்று தவறாக பொருள் கூறி திரித்து வருகின்றனர்.

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னிக்கும், தென்பரதவருக்கும் பகை இருந்ததாகவோ, தென்பரதவர் அவ்வரசனுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவோ எந்த சங்க பாடல்களும் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்க இந்த புறநானுற்று பாடலில் வரும் சாய என்பதை தவறாக பொருள் கூறி திரிக்கும் நபர்களுக்கு மாங்குடி மருதனார் இயற்றிய மதுரை காஞ்சியில் இருந்து பாடல் வரி சிறந்த  எடுத்துக்காட்டாகும். 

"இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய பொருதவரைச் செருவென்றும்"

பொருள்: வேந்தர்(சேரர், சோழர்) பக்கம் வேளிர்கள்(ஐவர்) நின்ற போதிலும் பாண்டிய நெடுஞ்செழியன் அவர்களை வெற்றி கொண்டார் என்பதே அதன் அர்த்தம். அதேபோல் தான் "தென்பரதவர் மிடல் சாய வடவடுகர் வாள் ஓட்டிய" என்பதும், தென்பரதவர் சோழன் இளஞ்சேட்சென்னி பக்கம் அணிசேரவே, அவர் அவர்கள் உதவியுடன் வடவடுகரான வம்பமோரியர்களை வாட்போரில் வென்றார் என்பதே அதன் பொருள்.

- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com