வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Monday, 12 August 2024

பரதவர், விஜயநகரர்க்கான போர்

கி.பி. 1606ல் திருநெல்வேலி பரதவர்களுக்கும், விஜயநகர நாயக்கர்களுக்கும் நடந்த பரதவர் நாட்டு போர்..!

 குருசாடோஸ் - போர்சுகீசிய வெள்ளி காசு

விஜயநகர ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர்களின் எதிர்ப்புகள் இருந்தது. அதனை சரிசெய்வதற்காக விசுவநாத நாயக்கர்(1529-63) என்பவரை மதுரையின் ஆட்சியாளராக கிருஷ்ண தேவராயர் நியமிக்கிறார். இப்படி பாண்டிய நாட்டில் நாயக்க அரசு உருவாகி தமிழர் நிலங்கள் பாளையப்பட்டு முறையின் கீழ் கொண்டு வரப்படுகிறது. மீதமுள்ள சர்கார் நிலங்கள் விஜயநகர நாயக்கர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. இந்த இரண்டுக்கும் உட்படாத தமிழர் நிலப்பகுதி தனியாக இயங்கியது. (எ.கா): பரதவர், கள்ளர் நாடுகள்.

விசுவநாத நாயக்கரின் அதிகாரம் உச்சத்தில் இருந்தபோதே திருநெல்வேலியில் பரதவர்களின் நில பரப்பு பரதவர் ராஜ்யம் என்றே தான் வழங்கப்பட்டுள்ளது என்பதனை.....

"மனுவேல் டி மொரையஸ்" என்ற போர்சுகீசியர் கி.பி. 1549ல் எழுதிய கடிதத்தின் மூலமாக நாம் ஆதாரபூர்வமாக அறிய முடிகிறது. விசுவநாத நாயக்கர்(1529-63) திருநெல்வேலியில் கால் பதித்த நாள் முதலே பரதவர்களுடனான மோதல் ஆரம்பமாகிறது. இது முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்(1602-1606) காலத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது...

விஜயநகர பேரரசர் வெங்கடபதிராயரின் பாண்டிய நாட்டு பிரதிநிதியாக மதுரையில் இருந்தவர் தான் இந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். இந்தியா வந்திருந்த பிரஞ்சு நாட்டவரும், ஏசுசபை பாதிரியாருமான "டோமினிக்கோ பெரோலி" என்பவர் தனது ''மலபாரில் ஜேசுட்கள்'' என்னும் நூலில் திருநெல்வேலி பரதவர்களுக்கும் - முத்து கிருஷ்ணப்ப நாயக்கருக்கும் நடந்த வரலாற்று சிறப்புமிகு பரதவர் நாட்டு போர் பற்றி விரிவாக பதிவுசெய்துள்ளதை பற்றி இங்கு பார்ப்போம்......

கி.பி. 1606ல் தூத்துக்குடிக்கு அருகே போர்ச்சுகல் நாட்டவரின் வியாபார கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்து நின்றுவிட்டது. பரதவர்களின் உதவியை நாடினர் போர்சுகீசியர்கள். கப்பலிலிருந்த சரக்குகள் அனைத்தையும் பரதவர்கள் பத்திரமாக மீட்டெடுத்தனர். செய்த உதவிக்கு நன்றியாக மீட்கப்பட்ட பொருட்களில் நான்கில் ஒரு பகுதியை பரதவர்களுக்கு விட்டு தருவதாக போர்த்துக்கீசியர்கள் வாக்களித்திருந்தனர்.

விஜயநகர பிரதிநிதியாக மதுரையில் இருந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் இச்சம்பவத்தை கேள்வியுற்று பேராசையால் தூண்டப்பட்டவராய் சேதமடைந்திருந்த கப்பலும் அதனுள் இருந்த சரக்குகள் மீதும் உரிமை கோரி பரதவர் நாட்டுக்குள் தூதுவரை அனுப்பி தனக்கு 5,00,000 குருசாடோஸ் பணம் தரவேண்டும் என்று அவர்களிடம் கேட்டார். பரதவர்களோ தர மறுத்துவிட்டனர். (குறிப்பு: குருசாடோஸ் என்பது போர்ச்சுகீசிய வெள்ளி காசுகள் ஆகும்.)

கோபமடைந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் பரதவர் நாட்டுக்குள் மீண்டும் தூதுவரை அனுப்பி தனக்கு 5,00,000 குருசாடோஸ் பணம் தரவில்லை எனில் நான் படையெடுத்து வந்து முற்றிலும் உங்களை அழிதொழித்து விடுவேன் என்று அச்சுறுத்தினார். பரதவர்களோ முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் மிரட்டலும் அஞ்சாமல் அவரை போருக்கு அழைத்தனர்.

முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தனது விஜயநகர படைகளை திரட்டி பரதவர்களுக்கெதிராக போருக்கு அணிவகுத்து சென்று திருநெல்வேலி பரதவர் நாட்டுக்குள் நுழைகிறார். வடுகப்படையுடன் வந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கனுடன் கடுமையாக மோதுகின்றனர் பரதவர்கள்.

இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த யுத்தத்தில் இருபக்கமும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய போர் ஒரு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இதுபற்றி மேற்சொன்ன பிரஞ்சு நாட்டவர் "டோமினிக்கோ பெரோலி" கூறும்போது....

''விஜயநகர படைகள் பரதவர்களுக்கெதிராக போருக்கு அணிவகுத்து சென்றனர் ஆனால் அவர்களால் பரதவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை''
என்று குறிப்பிடுகிறார்.

"His Army Marched against them, but in vain"

பரதவர்கள் மிகவும் வலிமையாக இருந்தால் அவர்களை வீழ்த்துவது கடினமென்று எண்ணிய முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் தன்னை எதிர்த்து போரிட்டு கொண்டிருக்கும் பரதவர்களை நோக்கி இவ்வாறு கூறினார்....

"நான் என் மகனின் திருமண விழாவில் கலந்து கொள்ள உடனடியாக உங்களிடமிருந்து விடைபெற்று மதுரை சென்றாக வேண்டும் ஆனால் விழாக்கோலம் முடிந்தவுடன் மீண்டும் வந்து உங்களை யுத்தகளத்தில் சந்திப்பேன்"

என்று சொல்லி விட்டு திருநெல்வேலியில் இருந்து தனது விஜயநகர படைகளை விலக்கி கொண்டு மதுரைக்கோடி மறைந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் அங்கேயே அதே வருடம் இறந்து விடுகிறார். மதுரையில் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் மகனின் திருமணம் நடக்கவில்லை மாறாக முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் இறுதி சடங்குதான் அங்கு நடந்தது.

மதுரை வந்திருந்த "ராபர்ட் டி நோபிலி" என்னும் இத்தாலி நாட்டவர் அங்கிருந்து கி.பி. 1606 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் "கோஸ்டான்சா ஸ்ஃபோர்ஸா" என்னும் இத்தாலி நாட்டு ராணிக்கு தான் எழுதிய கடிதத்தில்....

"சில நாட்களுக்கு முன் மரித்து போன முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் சடலம் மக்கள் முன்னிலையில் எரிக்கப்பட்டது, அவருடைய நம்பிக்கைக்குறிய மனைவிமார்களும் அதே நெருப்பில் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்" என்று குறிப்பிடுகிறார்.

இப்படி தமிழ் பரதவர்களை அழித்தொழிப்பேன் என்று ஆரவாரம் செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கரின் முடிவு மோசமானதாக அமைந்தது.

००००००००००००००००००००००००००००००००००००००००

இதேபோல் மதுரை மாநகரை சுற்றி இருக்கும் கள்ளர் நாடுகளை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வர விஜயநகர நாயக்கர்களால் இயலவில்லை. தமிழ் கள்ளர்கள் நாயக்க அரசுக்கு பெரிதும் அச்சுறுத்தலாகவே இருந்தனர். தமிழர் அனைவரும் விஜயநகர பேரரசுக்கு அடிபணியவில்லை எனபதனை தெளிவாக அறிய முடிகிறது.

००००००००००००००००००००००००००००००००००००००००

Foot Notes:-

Jesuits in Malabar by French Jesuit Dominico Ferroli Vol I Pg. 319

St. Fransis Xavier his life, his times by George Shurhammer Vol lll Pg. 371



















- UNI
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com